நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

எம்.வி. வெங்கட்ராம் - பகுதி 2

வெறும் 140 பக்கம். ஆனால் காதுகளைப் பற்றி ஆயிரம் பக்கம் எழுதலாம் போல் இருக்கிறது. ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால்,

Updated On :25 ஜூலை 2015, 10:05 am


வெறும் 140 பக்கம். ஆனால் காதுகளைப் பற்றி ஆயிரம் பக்கம் எழுதலாம் போல் இருக்கிறது. ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், சிருஷ்டித்துவத்தின் உச்சத்தில் நின்று பேய்க் கூச்சலிடும் ரகளையே காதுகள். மகாலிங்கத்தின் காதுகளில் வெறும் சப்தஜீவிகளாகப் புகுந்த பராசக்தி காளியும் இன்ன பிற பூத கணங்களும் போட்ட ஒரு ட்ராமாவையும் அதன் இடையில் வந்து புகுந்த விமரிசகன், ரசிகன் ஆகியோரையும் சென்ற வாரம் பார்த்தோம். எல்லாம் ஒரு நாடகமாக – ஒலிச் சித்திரமாக – மாலியின் காதுகளில் நடந்து கொண்டிருக்கும் கூத்து என்பதை நாம் மறந்து விடக் கூடாது. மேலும், இது எல்லாமே மகாலிங்கத்துக்கு மட்டுமே கேட்கும். மற்றவர்களுக்கு இது எதுவுமே தெரியாது. காதுகளில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூச்சலின் காரணமாக மற்றவர்கள் பேசுவதை அவனால் சரியாகக் கேட்க முடிவதில்லை. மேலும், அவன் காதுகளில் இரண்டு குரல்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும். ஒன்றை ஒன்று பைத்தியம் என்று திட்டிக் கொண்டிருக்கும். அப்போது அவைகளை இடைவெட்டி மகாலிங்கம் பேசுவான் அல்லவா? அது (மட்டும்) அவனைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கேட்கும். மகாலிங்கத்தின் இந்தத் தலையாய பிரச்னையினால் வியாபாரம் நொடித்துப் போய் எந்த வேலையும் இல்லாமல் அவன் குடும்பமே பட்டினி கிடந்து கொண்டிருந்த நிலையில் சுந்தரம் என்ற பழைய நண்பன் ஒருவன் அவனோடு சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என அவன் வீடு தேடி வருகிறான்.

மகாலிங்கம் பணமெல்லாம் போட வேண்டாம். மூலதனம் சுந்தரத்துடையது. வேலையில் மட்டும் பங்குதாரராக இருந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டால் போதும். இது கூட மகாலிங்கத்தின் மீது பரிவு கொண்ட ராமன் என்ற கடவுள் ஏற்பாடு செய்ததுதான். ஆம்; ராமாயணத்தின் நாயகனான சக்ரவர்த்தித் திருமகன் ராமன்தான். (மகாலிங்கத்தின் காதுகளில் கேட்கும் எல்லாக் குரல்களுக்கும் பெயர் மற்றும் அடையாளம் உண்டு. அவன் காதுகளில் நூற்றுக் கணக்கான கடவுள்களும், பூத கணங்களும், சாமான்யர்களும், பொறுக்கிகளும் சப்தஜீவிகளாக வசித்து வந்தனர்.) சுந்தரம் வந்து மகாலிங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கும்போது கறுப்பன் என்பவன் குறுக்கே என்னென்னவோ பேசி இடையூறு செய்கிறான். அதைத் தடுக்கிறான் ராமன். சுந்தரத்தோடு பேச மகாலிங்கத்தின் மனைவி காமாட்சியும் வந்து சேர்ந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் சுந்தரம், கறுப்பன், அவனைத் தடுக்கும் நல்ல கடவுள் ராமன், காமாட்சி என்ற நான்கு பேரின் பேச்சுக்களும் ஒன்றன் பின் ஒன்றாக, குறுக்கு வெட்டாக நாவலில் வந்து போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு குரல்கள் மாலியின் காதுகளில் கேட்கும் சூக்ஷும உருக்கள்; இரண்டு குரல்கள் அவன் கண்ணெதிரே அமர்ந்திருக்கும் சுந்தரம், காமாட்சி என்ற ஸ்தூல உருக்கள். இந்த நான்கு குரல்களையும் கேட்டுக் கொண்டிருக்கும் மகாலிங்கத்தின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். பிரதியைப் படித்துக் கொண்டிருப்பது நாம் என்பதால் ஒரு கட்டத்தில் நாமே மகாலிங்கமாக ஆகிறோம். இந்தக் குரல்களால் கடும் எரிச்சலடையும் மகாலிங்கம் சுந்தரத்திடம் மூர்க்கமாகப் பேச ஆரம்பிக்கிறான். ராமன் கதறுகிறான், ஐயோ மாலி, அப்படிப் பேசாதே, உன் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் நான் தான் அவனை அழைத்து வந்தேன். அப்போது குறுக்கே புகும் கறுப்பன், ‘மாலி வேண்டாம்; நான் முதலாளியோடு (சுந்தரம்) பேசுகிறேன்’ என்று முரண்டு பிடிக்கிறான். ‘டேய், நீ வாயை மூடிக் கொண்டு சும்மா இரு’ என்று ராமன் தடுக்கிறான். உடனே கறுப்பன், ‘என்ன ராமா, கறுப்பன்னா எளக்காரமாப் போச்சா, உன் முகரக்கட்டைய பேர்த்துக் கையிலக் குடுத்துடுவேன்’ என்று அவனுடன் சண்டைக்குப் போகிறான். சுந்தரம் ஏதோ சொல்லி விட்டு மகாலிங்கத்தின் பதிலை எதிர்பார்க்கிறான். அதற்கு ‘நான் தான் பதில் சொல்வேன்’ என்று கூச்சல் போடுகிறான் கறுப்பன். ‘இல்லை, நான்தான் சொல்வேன்’ என்று ராமன் அதிரடி.

Story image

இதற்கிடையில் மகாலிங்கம் யோசிக்கிறான். ‘பைத்தியக்காரனுக்குத்தான் பைத்தியம் என்ற பிரக்ஞை இருக்காது. எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதையும், நான் பைத்தியமாகப் பேசுவதையும், பிறர் என்னைப் பைத்தியமாக நடத்துவதையும் நான் தன்னுணர்வோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே?’

லாபத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பதில் முரண்டு பிடிக்கிறான் மாலி. ‘ஐயோ, மாலி பேசுவதைப் பார்த்தால் எனக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே. அது போதாது என்று இந்தக் கறுப்பன் வேறு என் உயிரை எடுக்கிறானே’ என்கிறான் ராமன்.

‘ஆஹா, ஆஹா, நீயே உன்னைப் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டு விட்டாய். ராமா, நீ பைத்தியம். ராமா, நீ பைத்தியம்.’

‘இல்லை, நீதான் பைத்தியம்.’ இது ராமன்.

பைத்தியம் என்றான் மகாலிங்கம்.

எதிரே அமர்ந்திருக்கும் சுந்தரத்துக்கு எப்படி இருந்திருக்கும்? படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு தேகமெல்லாம் நடுங்க என் வீட்டுக்கு எதிரே இருக்கும் மெரினா பீச்சுக்கு ஓடி விட்டேன். அவ்வளவு பீதியாகி விட்டது எனக்கு. என் வாசிப்பு அனுபவத்தில் முதல்முதலாக பௌதிகரீதியாகப் பாதிக்கப்பட்டது இந்த நூலினால்தான். சிலே தேசத்திலும் இன்னும் பிற தென்னமெரிக்க நாடுகளிலும் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி நாள் அன்று பல நூறு ஹார்ட் அட்டாக் மரணங்கள் நிகழ்வதுண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது போன்றதொரு கொந்தளிப்பையும் பீதியையும் ஆவேசத்தையும் தந்தது காதுகள்.

இதுதான் ecstasy. தமிழில் பரவச உணர்வு. அல்லது அதைவிட சரியாகச் சொன்னால் Transcendence. எதன் மூலம் சாத்தியமாகிறது இது? Transcendence through transgression. மீறுதலின் மூலமாக அடையும் பரவச உணர்வு. இதையே ஆன்மீகத்தின் மூலமாகவும், செயற்கையான முறையில் psychedelic drugs மூலமாகவும் அடைவார்கள். ஒரு மகத்தான பின்நவீனத்துவப் பிரதி இத்தகைய பரவசத்தை அதன் transgressive discourse மூலமாக அளிக்கிறது. அதன் காரணமாகவே காதுகள் நாவலை இதுவரை – அதாவது, கடந்த மூன்று நூற்றாண்டுகளில் - உலக அளவில் எழுதப்பட்ட மூன்று நான்கு ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்களில் ஒன்றாக வைக்கலாம். ஆம், மார்க்கி தெ சாத் 1785-ல் எழுதிய The 120 Days of Sodom என்ற நாவலையே உலகின் முதல் ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல் என்று கொள்ள வேண்டும். வில்லியம் பர்ரோஸின் நேகட் லஞ்ச், கேத்தி ஆக்கரின் Blood and Guts in High School, ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை ஆகியவை முக்கியமான மற்ற ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்கள். இப்படி வெகு சொற்பமாக எழுதப்படும் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்துக்குத் தமிழ் மொழியானது இரண்டு நாவல்களை அளித்திருக்கிறது என்பது பற்றி நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். காதுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் இதை உலகமே கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அந்த அளவுக்கு சொற்பமாக – ஒரு நூற்றாண்டுக்கு ஒன்று என்ற அளவில் – எழுதப்படுகிறது ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல். இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்கள் எழுதப்பட்டதில்லை. மலையாளத்தின் வைக்கம் முகமது பஷீரை ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர் என்று சொல்ல முடியாது. விளிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதுவது ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தின் அடையாளம் அல்ல. 

***

‘காமாட்சிக்கு எட்டாவது மாதம். ஐந்து குழந்தைகளை வளர்த்து உருவாக்குவதற்கு எவ்வளவோ பாடுபடவேண்டியிருக்கிறது, ஆறாவதாக இது ஒன்று எதற்கு என்று அவளுக்கு வெறுப்பு. உள்ளே என்ன சனியன் இருந்ததோ, வயிறு கனமாய்க் கனத்தது. இந்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு அவள் கடை கண்ணிகளுக்குப் போக வேண்டும். சில்லறைக் கடனுக்காகக் கடைக்காரனிடம் கெஞ்ச வேண்டும். பழைய நல்ல காலத்து நினைவில் வீடு தேடி வருகிற விருந்தாளிகளை உபசரிக்க வேண்டும். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டும். கடன் கிடைக்காவிட்டால் எந்தச் சாமானை அடகு வைக்கலாம் அல்லது விற்றுத் தொலைக்கலாம் என்று யோசிக்க வேண்டும். இவ்வளவும் போதாது என்று இரவில் ‘கொட்டு கொட்டு’ என்று விழித்துக்கொண்டு இருக்கும் கணவனைத் தூங்க வைக்க வேண்டும் . . . இருக்கிற பீடைகள் போதாது என்று ‘இது ஒன்று’ என்று வயிற்றில் அடித்துக்கொள்வாள், சில சமயம். இது வேண்டாம் என்று இரண்டாவது மூன்றாவது மாதத்திலேயே அலோபதி, சித்தவைத்தியம் பச்சிலை மருந்துகளால் கர்ப்பத்தைச் சிதைக்க அவள் முயற்சி செய்தாள். வாயும் வயிறும் வெந்து புண் ஆனதுதான் மிச்சம், கர்ப்பம் என்னவோ கல்லுப் பிள்ளையாராட்டம் கெட்டியாக இருந்தது; அமோகமாய் வளர்ந்து கொண்டும் இருந்தது.’

இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த அவளோடு உறவு கொள்ள விழைகிறான் மாலி. காலையில் எழுந்ததும் அத்தனை பெரிய வயிறையும் வைத்துக் கொண்டு சமைக்க வேண்டும்; ஐந்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்; பாத்திரம் தேய்க்க வேண்டும்; உங்களுக்கு இரக்கமே இல்லையா என்று கத்துகிறாள் அவள். இருந்தாலும் அந்த இன்பத்தை அவன் இழக்க விரும்பவில்லை. அதன் விளைவாக அவளுக்குக் கர்ப்பச் சிதைவு ஏற்பட்டு சிசு இறந்தே பிறக்கிறது. நாவலின் அந்த இடம் யாராலும் மறக்க முடியாத ஒன்று.

வழக்கம் போல் பல குரல்களைக் கேட்டுக் கொண்டு ஒரு நள்ளிரவில் உறக்கமும் விழிப்புமற்ற நிலையில் கிடக்கும் அவனை எழுப்பி உடனே தனக்கு வண்டி அழைத்து வரச் சொல்கிறாள் காமாட்சி. அவனிடம் ஒரு பைசா இல்லை. தன்னிடம் இருக்கும் ஒரு ரூபாயையும் மருத்துவச் செலவுக்குத் தான் அணிந்திருந்த மூக்குத்தியையும் தருகிறாள். முனிசிபல் மருத்துவமனையில் இது சீரியஸ் கேஸ்; எங்களால் செய்ய முடியாது என்று மறுத்து விட பெரிய அரசாங்க மருத்துவமனைக்குப் போகிறார்கள். அது ரொம்ப தூரம். வண்டிக்காரன் இரண்டு ரூபாய் கேட்கிறான். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடுகிறான் மாலி. ஆனால் நள்ளிரவில் எழுப்பப்பட்டு உறக்கம் கலைந்து வந்தவன் கடனுக்கா வருவான்? பிறகு காமாட்சியும் கெஞ்சவே வண்டிக்காரன் கிளம்புகிறான்.

மகளிர் மருத்துவமனை என்பதால் அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. நீங்கள் ரத்தம் கொடுக்க வேண்டி வரும்; எங்கேயும் போய் விடாதீர்கள் என்கிறாள் நர்ஸ். (‘சக்களத்தி, இதிலேயும் பங்குக்கு வந்து விட்டாளா?’ என்று அவன் காதுகளில் கேட்கிறது ஒரு குரல்!) இரண்டு நாட்கள் வெளியிலேயே காத்திருக்கிறான். முடிவில் குழந்தை இறந்தே பிறக்கிறது.  அவன் வீட்டுக்குப் போய் தூங்க அனுமதியும் கிடைக்கிறது. வீட்டுக்கு வந்து தூங்கி விட்டுப் பதினோரு மணி வாக்கில் மருத்துவமனைக்குப் போனால் சிசுவின் பிணத்தைத் தூக்கிக் கொடுக்கிறாள் ஆயா. ‘அதை இங்கேயே புதைக்க வேண்டியதுதானே?’ அந்தக் காரியத்துக்குத் தோட்டி ஐந்து ரூபாய் கேட்கிறான். மூக்குத்தி விற்றதில் அவனிடம் இருக்கும் பாக்கியே பத்து ரூபாய்தான். இரண்டு ரூபாயில் புதைக்க முடியுமா? பேரம் படியவில்லை. ‘அப்படியானால் சடலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’ ‘அது முடியாது. பிணத்தை நீங்களே உங்கள் வீட்டுக் கொல்லையில் புதைத்துக் கொள்ளுங்கள். நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள்’ என்று சொல்லிக் கட்டுச்சோறு மூட்டையைப் போல் இருந்த சடலத்தை அவனிடம் கொடுக்கிறாள் ஆயா. அதை அவன் சைக்கிளில் வைக்கத் திரும்பும்போது காசு கேட்கிறாள். அவன் கையில் சில்லறை இல்லை. ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கொல்லையில் குழி தோண்டிப் புதைக்கிறான். பக்கத்து வீட்டுக் கிழவி பார்த்து விட்டு விசாரிக்கிறாள். அவன் உண்மையைச் சொல்கிறான். கொல்லையில் அவன் புதைத்த இடம் அவர்கள் வீட்டுப் பகுதி. கிழவி கத்துகிறாள். புதைத்ததை எடுத்து மீண்டும் கொல்லையின் தன் வீட்டுப் பகுதியில் குழி தோண்டிப் புதைக்கிறான். இவ்வளவையும் (ஐந்து) குழந்தைகளுக்குத் தெரியாமல் செய்ய வேண்டியிருக்கிறது. தெரிந்தால் எதுவும் கொல்லைப் பக்கமே வராது.  அந்தத் தருணத்தில் காதுகளில் குரல்களின் பேச்சு துவங்குகிறது. குழந்தைக் கறி பற்றிய பேச்சு அது. அதில் ஒரு குரல் வெஜிடேரியன். அந்த காந்தியவாதியை மற்ற குரல்கள் கிண்டலடிக்கின்றன. ‘பரமசிவமே பிள்ளைக்கறி சாப்பிடுகிறாரே? நீ சாப்பிடு’ என்று ஒரு குரலை இன்னொரு குரல் உற்சாகப்படுத்துகிறது. 

எத்தனையோ பரமசிவன்களை உருவாக்கி உலவவிடும் அகிலாண்ட பரமேஸ்வரி மகாலிங்கத்திடம் காமம் யாசிக்கிறாள்.

‘நான் வளமை வேண்டுகிறவள்; இன்பத்தை விரும்புகிறவள். என்னைப் பார்த்தாலே தெரியவில்லையா? நீங்கள் முருகனைக் கும்பிட்டதுதான் தப்பு. அவன் ஆண்டி. அவனை வழிபடுகிறவர்களுக்குத் திருவோடுதான் தருவான். இந்த ரகசியம் பலருக்குத் தெரியாது. ஒரு கூட்டம் கும்பிடுகிறது என்றால் மற்றவர்களும் பின்னால் போகிறார்கள். முருகன் ஒருவனே போதும், குடும்பத்தை ஒழிப்பதற்கு. நீங்கள் ராமனையும் கும்பிடுகிறீர்கள். ராமனை வழிபடுகிறவர்கள் வனவாசத்தையும், மனைவியை மாற்றான் abduct செய்து rape செய்ய முயலுவதையும் ஏற்க வேண்டியவர்கள்தானே? ராமனாவது சக்கரவர்த்தித் திருமகன். அவனைக் கும்பிடுகிறவர்கள் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தபிறகு பட்டாபிஷேகத்தை எதிர்பார்க்கலாம். ஆனால், முருகன் கோவணாண்டி. ஆத்மானுபவம் பெறுவதற்கு ஆடை அணியக் கூடாது என்பது ஞானமா? காமாட்சியின் கழுத்து நிறைய இருந்த நகைகள் எங்கே? பெண்ணுக்கு ஆபரணம்தானே அணி? கட்டிய பெண்டாட்டி மூளியாக நிற்கிறாளே, உங்கள் மனசை உறுத்தவில்லையா? தாலிமட்டும் மிச்சம் இருக்கிறது . . .’

நறுக்காகவும் நாகரிகமாகவும் அவள் அழுது முடித்தாள். இரண்டு கொங்கை வட்டங்களுக்கு இடையில் செருகியிருந்த கைக்குட்டையை நாசுக்காக எடுத்துக் கண்ணீர்த்துளிகளை மெல்ல ஒத்தி எடுத்தாள். கைக்குட்டையிலிருந்து இண்டிமேட் செண்ட் மணம் அவனுடைய நாசிக்கு எட்டியது.

‘மாலி, என் மேல் உனக்கு இரக்கம் வரவில்லையா?’

‘நீ தான் என் மீது இரக்கம் காட்ட வேண்டியவள்.’

‘உன் மீதுள்ள இரக்கத்தால்தான் நீ என்னை மறந்தாலும் நான் உன்னைத் தேடி ஓடி வந்திருக்கிறேன். ஆனால் நீ இது புராணக் கதை என்று நினைக்கிறாய். தவறு. இது நவீனத்திலும் நவீனம். நித்ய நவீனம். ஒப்பற்ற ஓர் ஆண்மகனின் தாகத்தைத் தீர்க்க தெய்வம் அமுத கலசத்துடன் இறங்கி வருகிறது என்பது ஒரு grand theme இல்லையா?’

‘ஒரு தெய்வம் காம உணர்ச்சியோடு வரும் என்று நான் புராணங்களில் கூடப் படித்ததில்லை…’

இதை அடுத்து பாரதியின் காதல் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சினிமா டூயட்டைப் போல் பாடுகிறாள் காளி பராசக்தி. பிறகு பிச்சமூர்த்தி, கு.ப.ரா. எழுதிய வசன கவிதைகளைப் பற்றி இலக்கியரீதியாகப் பேசுகிறாள். பிறகு அவனுடைய எழுத்து பற்றியும் பேச ஆரம்பிக்கிறாள். முகஸ்துதி செய்கிறாள். கடைசியாக, நேரடியாக, ‘பெண் இன்பத்துக்கு மிஞ்சின இன்பம் ஏது? Sex is the prime-mover of life இல்லையா? உங்களுக்கு வசிய சக்தி கொடுக்கிறேன். And the cream of feminine beauty will be yours. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறாள். அப்படியும் அவன் மறுக்கவே அவள் போய் விடுகிறாள். உடனே இன்னொரு பெண்ணுரு அவனைக் கேட்கிறது. ‘என் அருமை மாலி, உனக்குக் காமம் மிக அதிகம். அதனால்தானே முற்றிய கர்ப்பிணி என்கிற அறிவை இழந்து மனைவியைத் துன்புறுத்தி, வயிற்றிலிருந்த சிசுவின் உயிரைப் பலியிட்டாய்? ஆனால் நீ சுவைத்த இன்பம் இருக்கட்டும், உடம்பு முழுவதும் வலியால் துடித்துக் கொண்டு இருந்த நிலையில் காமாட்சி பெற்ற இன்பத்துக்கு ஈடு உண்டா?’

அதன் பின்னர் காமம் பற்றி வரும் சொல்லாடல்கள் அனைத்தும் பேரிலக்கியங்களில் கூடக் காண்பதற்கு அரிதானவை. பொறுங்கள். இதை நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்லவில்லை. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் க்ளாஸிக்கான ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸின் காமச் சொல்லாடல்களுக்கு நிகரானவை அவை.

‘பொண்ணு வேணும் பொண்ணு வேணும் பொண்ணு வேணும் டா உன்னை நீ அறிந்திடப் பொண்ணு வேணும் பொண்ணு வேணும் பொண்ணு வேணும் டா’ - என்று ஆரம்பமான பாட்டு கலவியின் பலவகைக் கோணங்களையும் கோணல்களையும் யதார்த்தமும் ஆபாசமுமான சொற்களால் வருணித்தபடி வளர்ந்துகொண்டே இருந்தது. மாட்டுச்செக்கு சுற்றும்போது ஞொய் ஞொய் என்றோர் ஓசைவருமே, அது போன்ற குரல் ஒலி தவிர, அவனுக்கு உலகத்தைப் பற்றின மற்ற உணர்வுகள் அனைத்தும் உறங்கிப் போயின. தான் என்னும் உணர்வு வெகு வெகு ஆழத்தில் இருந்தது; இசை ஒலி வெகு வெகு மேலே தொலைவிலிருந்து வருவதாய், வந்து கொண்டு இருப்பதாய், வந்து கொண்டே இருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. ஐந்து, பத்து, இருபது, முப்பது நிமிடங்கள் . . . இல்லை, நேரம் என்பதே வெறும் ஓசைதான் என்றும், அந்த ஓசை காம அறிவும் உணர்வும் கொண்டது என்றும் தோன்றியது. ஒரே மாதிரிக் குரலில் பாட்டாக வடிவெடுத்து வந்த, காம ஒலியுண்ட சொற்கள் அவனைச் சுற்றிலும் கொசுக்கள் போலவும், ஈக்கள் போலவும், வண்டுகள் போலவும், பூச்சிகள் போலவும் மொய்த்துக்கொண்டு ரீங் . . . க்ரிங் என்று ரீங்காரம் செய்தன. காம ஒலியுண்ட சொற்கள் எறும்புகள் போலவும், புழுக்கள் போலவும் அவனுடைய உடல் எங்கும் ஏறி அடர்ந்து ரோமத் துவாரங்கள் வழியாக அவனைக் கடித்துத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட முயன்றன. நேரம் செல்லச் செல்லச் செல்ல…

பருத்துக் கொழுத்து வளர்ந்து ஆடு மாடுகள் போலவும் சிங்கம், புலிகள் போலவும், யானை, காண்டாமிருகங்கள் போலவும் அவன் மேலேறி மிதித்துத் துவைத்தபடி ஓடின. காம ஒலி - அவனை மண்ணில் அறைந்து மண்ணைத் தோண்டி மண்ணுக்குள் புதைப்பதாகத் தோன்றியது; நீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து அவனைச் சுற்றிச் சுழற்றி இழுத்துக்கொண்டு செல்வதாய்த் தோன்றியது; காட்டுத் தீயாக மூண்டு பல்லாயிரம் நாக்குகளால் அவனை நக்கி நக்கிப் பொசுக்குவதாய்த் தோன்றியது; பெரும் காற்றாய் சூறாவளியாய் அவனை மூலைக்கு மூலை எறிவதாய்த் தோன்றியது. அவனை நீராக்கி ஆகாசத்தில் தூவுவதாய்த் தோன்றியது. அவள் பாடப்பாட, அவள் வாயிலிருந்து வெளியே வந்த ஒவ்வொரு சிறு சொல்லும், சிற்றொலியும் ஓரிடத்தில் விழுந்து குவிந்து கொண்டே போவது போலவும், அவை குவிந்து கூடி ஒரு பெரும் சொல்பாறையாகவும் பேரொலியாகவும் உருக்கொண்டு விட்டது போலவும், அப்பெரும் சொல்பாறையையும் பேரொலியையும் யாரோ படீர் என்று அடித்து உடைத்து நொறுக்கி நுணுக்கி அணுவளவு அணுவளவு சிறு சிறு சொல்லாகவும் ஒவ்வொரு ரோமக்காலிலும் மிகச்சுளுவாய் ஊடுருவி உள்ளே நுழைவதுபோலவும் அவன் உணர்ந்தான் . . . தான் என்னும் உணர்வு தனக்குள் எங்கோ புதைந்திருந்த அப்பெரும் ப்ரமத்திலும், ‘கால்ஷியம் இஞ்செக்‍ஷன் போல் - எனக்குக் காமவெறி இஞ்செக்‍ஷன் செய்யப்படுகிறது’ என்ற எண்ணம் அவனுக்குள் இழையோடியது . . . ஒலியுண்ட காமமோ, காமம்கொண்ட ஒலியோ, அது இப்போது சொற்கள் என்ற தோற்றத்திலிருந்து ஒரு புதிய உலகமாகப் பரிணமிக்கத் தொடங்கியது.’

‘அனாதி காலமாக ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் வேண்டித் துடிதுடிக்கும் வேட்கையின் வீறு அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது. அக்கணமே, அவனுக்கு அருகிலும் சுற்றிலும் தொலைவிலும் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாய்க் கலவியின்பம் நுகர்ந்து, நுகர்ந்ததால் வெறியாசை கொண்டு மீண்டும் மீண்டும் என்று… லோ…ல்…லோ என்று சொல்லிழந்த கூக்குரலிட்டுக் களித்தாடிடும் காட்சி அவனுக்கு முன்னால் எழுந்தது…’

Transgressive fiction என்பதன் உச்சக்கட்ட உதாரணம் காதுகள். எம்.வி. வெங்கட்ராம் குறைந்த பட்சம் எழுத்தாளர்களால் கொண்டாடப்பட்டவர். ஆனால் அவரது உண்மையான சாதனையை தி. ஜானகிராமன் போன்ற அவரது நெருங்கிய நண்பர்களைத் தவிர அடுத்த தலைமுறை எழுத்தாளர் பலரும் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் உச்சபட்ச சாதனையைப் புரிந்த எழுத்தாளர்கள் கூட – உதாரணமாக, அசோகமித்திரன் – நவீனத்துவத்தின் சாத்திய எல்லைகளை வந்தடைந்ததோடு அவர்களின் பயணம் முடிந்து விட்டது. அந்த எல்லையைத் தாண்டியவர்கள் என ப. சிங்காரத்தையும் எம்.வி.வெங்கட்ராமையும் மட்டுமே சொல்லலாம்.

Story image

பின்குறிப்பு: அவசியம் கருதியே இந்தக் கட்டுரையில் காதுகளிலிருந்து நீண்ட மேற்கோள்களைத் தந்திருக்கிறேன். அதற்காகக் காலச்சுவடு பதிப்பகத்துக்கு என் பிரத்தியேக நன்றி. காதுகளை மின்நூலாக வாங்கிப் படிக்க:

(எம்.வி.வி. பற்றிய இந்தக் கட்டுரை அடுத்த இதழில் முடியும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.