உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

நிலப் போர்வை

கடுங்கோடையிலும் கூட லேசான துண்டை உடலில் போர்த்திக் கொண்டால்தான் நம்மில் பலருக்கு தூக்கம் வரும். மேலாடை இல்லாமல் திரியும்

News image
Updated On :7 ஜூலை 2015, 12:49 pm

S.V.P.வீரக்குமார்

.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }
டுங்கோடையிலும் கூட லேசான துண்டை உடலில் போர்த்திக் கொண்டால்தான் நம்மில் பலருக்கு தூக்கம் வரும். மேலாடை இல்லாமல் திரியும் மனிதர்களை நாம் சற்றே மனம் கோணித்தான் பார்ப்போம். ஒரு சிறிய மேல் துண்டையாவது தோளில் போட்டுக் கொண்டால் மட்டுமே பார்ப்பவர்களுக்கும், போட்டுக் கொள்பவர்களுக்கும் ஒரு சிறிய திருப்தி ஏற்படும். ஆனால் பூமா தேவி, பூமித்தாய், அன்னை பூமி எனத் தாயின் பெயரால் அழைக்கப்படும் மண்ணுக்கு ஆடை கொடுக்க நினைக்கின்றோமா? அடர்ந்த கானகத்தை தன் ஆடையாய் வைத்திருந்த அன்னை பூமியை துச்சாதனத்தனமாய்த் துகிலுரித்து, மலைகளை மொட்டையடித்து, மரங்களை வெட்டியழித்து கொஞ்சம் கொஞ்சமாய் நிர்வாணமாக்கி வருகிறோம். வந்துவிட்டோம்.

எடுத்ததை எப்படியாவது திரும்ப கொடுப்பதுதான் நாகரிகம், அதனால்தான் மரம் வளர்க்கப் பேரியக்கமே நடைபெறுகிறது. ஆனால் தினந்தோறும் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க, உடையளிக்க, வசிப்பிடம் அளிக்க மண் தேவை. உணவளிக்கும், உடையளிக்கும் பூமியை மரம் நட்டு போர்வையாக்கிவிட்டால் உணவு உற்பத்தி குறைந்து பசி, பஞ்சம் பட்டினி வந்துவிடும்தானே? ஆக இந்த உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் பூமிக்கு என்ன போர்வை கொடுக்கலாம் என சிந்தித்துச் செயல்படுத்தியதுதான் நிலப்போர்வை எனும் மூடாக்கு.

விவசாய பூமிக்கு என்னென்ன வகையில் எல்லாம் மூடாக்கு வழங்கலாம்?

1. மூடு பயிர்கள், உயிர் மூடாக்கு

2. காய்ந்த வேளான் கழிவினால் மூடாக்கு

3. நெகிழி மூடாக்கு எனும் மல்ச்சிங் ஷீட்

முதலாவது மூடுபயிர்கள் மூடாக்கு. மூடு பயிர்கள் என்பது மண்ணை மூடி அதனுடைய வளத்தை காத்திட வளர்க்கப்படுகின்ற பயிர்களாகும். இந்த மூடு பயிர்கள் மண்ணின் வளத்தை உயர்த்துவது, மண்ணின் பெளதீக வடிவமைப்பை மேம்படுத்துவது. அத்துடன் பண்ணை கால்நடைகளுக்கும் உணவாக பயன்பட்டு வருவாயை அதிகரிக்கவும் உதவுகின்றது. இந்த மூடுபயிர்களால் மண்ணில் உள்ள சத்துக்கள் அதிகரிக்கின்றன. பயறு வகைப் பயிர்களின் வேர் முடிச்சுக்கள் இவை வழியே கிரகிக்கப்படும் தழைச்சத்தை சேர்த்துவைத்து மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றது. பயிரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் களையை கட்டுப்படுத்துகின்றது. நிலத்தை தயார் செய்யவும், களையை நீக்கவும் செலவு செய்யும் பணம், நேரம் மற்றும் உடலுழைப்புத் தேவையினை கணிசமாகக் குறைக்கின்றது. உரம், களைக்கொல்லி, உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற செலவினங்களைக் குறைக்கின்றது. மண்ணின் வடிவமைப்பை, இலை மக்குகளை மண்ணில் சேர்ப்பதன் மூலம் மூடுபயிர்கள் மாற்றுகின்றது.
 

Story image
Story image

என்ன மாதிரியான விவசாயம் செய்ய திட்டம் வைத்திருக்கின்றோம். இதற்கு மூடுபயிர்கள் ஏற்றதுதானா? அந்தப் பகுதியில் கிடைக்கின்ற தட்ப வெப்ப நிலை எப்படி உள்ளது. ஆண்டிற்கு கிடைக்கும் மழையின் அளவு என்ன? எந்தெந்த பருவத்தில் அதிகம் கிடைக்கின்றது? நிலத்தின் நீர் பிடிக்கும் தன்மை எவ்வளவு? மண்ணின் பெளதிக இயல்பு என்ன? அந்தப் பகுதியில் இயல்பாய் நிலவி வரும் வேளாண்முறைகள் என்ன, இதற்கு ஏற்ப பல்வேறு வகையான தாவரங்கள் மூடுபயிராக வளர்க்கலாம் என்றபோதிலும், காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துகின்றதும் விரைவில் வளர்ந்து நிலப்போர்வையாகும் இயல்பை உடையதுமான அவரைக் குடும்ப வகைத் தாவரங்களை விரும்பி நிலப்போர்வையாக பயன்படுத்துகின்றனர்.

அவரைக் குடும்ப பயிர்களின் வளர்ச்சி வேகமும், அதிக அளவில் ‘தழைகளை’ உற்பத்தி செய்கின்ற இயல்பும் காற்றிலுள்ள தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி  மண்ணின் வளத்தை கூட்டுகின்ற செயலும், பல்வேறு வகையான வளமுள்ள மண்ணின் தன்மை, பல்வேறு வகையான வடிவமைப்பு உள்ள மண், மண்ணின் மாறுபட்ட கார, அமிலத்தன்மை போன்ற வேறுபட்ட மண்ணின் தன்மையிருந்தாலும் அவரைக் குடும்ப பயிர்கள் சமாளித்து வளர்கின்றது.

நல்ல வறட்சி தாங்குவது, வறண்ட காலங்களில் மட்டுமே நமக்கு மூடுபயிர்களின் பயன் அதிகம் தேவைப்படுகிறது. ஆகவே வறட்சியான காலத்தில் செழித்து வளரும் மூடு பயிர்கள் நிலப்போர்வையாக இருக்க ஏற்றது. அத்துடன் மூடுபயிர்கள் எளிதில் நோய்க்கு ஆளாகாமல், பூச்சிகளை தாங்கி எதிர்த்து நிற்கின்ற திறனுடையதாகவும் இருக்க வேண்டும். மூடு பயிர்களை பண்ணையிலிருந்து எளிதில் அப்புறப்படுத்த ஏதுவான இயல்பை உடையதாக இருக்க வேண்டும். பச்சையாக இருக்கும் போதும் காய்ந்து சேமித்து வைக்கும் போதும் கால் நடைகளுக்கு தீவனமாகக் கூடிய பயிராக இருப்பது சாலச்சிறந்தது.

ஒவ்வொன்றிலும் நன்மை தீமைகள் இருப்பது என்பது இயல்பானதுதான். மூடுபயிர்களாலும் குடியானவர்களுக்கு சில பிரச்னைகள் வரத்தான் செய்கின்றன. மூடுபயிர்களை சாகுபடி செய்து நிலைநிறுத்துவது கடினமான பணி. மூடுபயிரை நிலைநிறுத்த முக்கிய பயிரைக் காட்டிலும் அதிக அளவில் கவனமும், உழைப்பும் செலுத்த வேண்டியுள்ளது. சில வகை மூடு பயிர்கள் நமது முக்கிய பயிரைக் காட்டிலும் விரைவாகவும், வீரியமாகவும் வளர்ந்து பயிருடன் போட்டிபோட்டு அவற்றை வளரவிடாமல் செய்துவிடும். சிலவகை மூடுபயிர்கள் மிகவும் பலமான இயல்பை உடையதாக இருக்கின்றன. அவற்றை பண்ணையிலிருந்து அகற்றுவது கடினமான பணியாக இருந்துவிடும். அபரிதமான மூடுபயிர் வளர்ச்சியால் அதன் அடர்ந்த தன்மையை பயன்படுத்தி பாம்பு போன்ற மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினங்களும், கோழி போன்ற வீட்டு பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் நரி, கீரி போன்ற உயிரினங்களும் மறைந்து வாழப் பயன்படும்.

அடுத்தது உலர் போக்கு. இது மிகவும் ஏற்ற மூடாக்கு வகை. பண்ணையிலுள்ள வேலியைக் கவனித்து பார்த்தோமானால் உலர் மூடாக்கின் அருமை புரியும். நமது பண்ணையில் நாம் தேவையில்லை என நினைக்கும் பண்ணைக் கழிவுகளான தென்னை மட்டை, வாழைசோகை, பயிருக்குப்பின் கிடைக்கும் தாள் போன்றவற்றை பண்ணையில் வேலியோரத்தில் கரையான் அரித்து, மண்ணோடு மக்கி போகட்டும் என்ற எண்ணத்தில் போடுவது இயல்பு. வேலியைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உழவு செய்யப்படாமல், உரம் எதுவும் கொடுக்கப்படாமல், பூச்சி நோய்க்கு மருந்து தெளிக்காமல், களை எடுக்காமல், தண்ணீர் பாய்ச்சாமல் எந்தவிதமான விவசாய வேலையும் செய்யாமல் வேலியில் உள்ள பயிர்கள், செடிகள், கொடிகள், மரங்கள் அரோக்கியமாக வளர்கின்றது. தோட்டத்தின் வேலியில் உள்ள ஆரோக்கிய வளர்ச்சியை தோட்டத்தில் உள்ள பயிர்களில் காண முடியாது. அதற்கு நாம் பண்ணையிலிருந்து ஒதுக்கும் கழிவுகளை வேலியில் போடுவதும், இயல்பாகவே வேலிப்பயிர்களில் காய்ந்து உதிரும் இலை சருகுகளும், மரங்களில் வந்து அமரும் பறவைகள், வேலியில் வசிக்கும் விலங்குகளின் கழிவுகளில் கிடைக்கின்ற சத்துமே ஆகும்.

வேளாண் கழிவுகளை நன்கு காய்ந்தபின் போடப்படும் உலர் மூடாக்குகளால் மிகுந்த நன்மை கிடைக்கின்றது. மூடுபயிர்கள் போன்று இவைகள் முக்கிய பயிர்களோடு தண்ணீர்,  உரத்திற்குப் போட்டி போடாது. கையாள்வது சுலபம். விரைவில் மண்ணுடன் மக்கும் தன்மை உடையது. தரையுடனிருப்பதால் மனிதன், கால்நடைகளுக்குத் தீங்கு கொடுக்கும் உயிரினங்கள் தங்குவதற்கு வாய்ப்புக் குறைவு, விவசாய நிலத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் முக்கால் அடி உயிரத்திற்கு பரவிக் கிடக்கும் மேல் மண்ணே ஆகும். இந்த மேல் மண் தான் விவசாயத்தின் ஆதார பீடம். இது உருவாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது மண்ணியல் வல்லுநர்களின் கூற்று. இந்த மேல் மண் பலத்த காற்றினாலோ, தொடர்ந்து பெய்யும் மழையினால் உண்டாகும் வெள்ளத்தினாலோ அரிமானம் ஏற்பட்டால் மண் சக்தியை இழந்துவிடும். உலர் மூடாக்கு மண் அரிமானம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கின்றது. சூரிய வெப்பம் நேரடியாக மண்ணின் மீது பட்டு நீர் ஆவியாகாமல் பாதுகாக்கின்றது. உலர் மூடாக்கு மக்கி உரமாக மாறி மண்ணிற்கு வளத்தைக் கூட்டுகின்றது. மண்ணில் ஈரப்பதம் எப்போதும் பாதுகாக்கப்படுவதால் நுண்ணுயிர்கள் பெருகி வளர்கின்றது.

Story image
Story image

வாழும் சூழலும், உணவும் கிடைப்பதால் மண் புழுக்களின் நடமாட்டம் அதிகரிக்கின்றது. மழைநீர் வேகம் தடுக்கப்பட்டு அந்தந்த இடங்களிலேயே மண்ணிற்குள் செல்கின்றது. இதனால் மண் அரிப்பும் தடுக்கப்பட்டு, மழைநீர் அறுவடையும் நடந்து நிலத்தடி நீர் மட்டம் உயர்கின்றது. பனி நீரும் அறுவடை செய்யப்பட்டு நிலத்திற்கும், பயிருக்கும் கொடுக்கப்படுகின்றது. சூரிய ஒளி மறைக்கப்படுவதால் களைகள் வளர்வது குறைகிறது. அதனால் களை எடுக்கும் செலவு குறைகின்றது. மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலை உண்டாக்கப்படுவதால் பயிரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிக அளவு சேருவதால் வெளி இடு பொருட்களான உரத்தின் தேவை குறைகின்றது. அங்ககப் பொருட்கள் அதிகமடைவதால் மண்ணின் நீர் பிடிப்பு தன்மையும் கூடுகின்றது. விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கின்றது.

மூடாக்கு மண்ணோடு கலப்பதாலும் மண்ணின் ஈரத்தன்மை குறையாமல் இருப்பதாலும், இலை மக்குகள் அதிகப்படுவதாலும் மண்ணின் பொலபொலப்புத்தன்மை மாறுவதில்லை. ஆகவே அடிக்கடி உழவு செய்கின்ற வேலையும் குறைகின்றது. மண்ணில் மக்குகள் அதிகப்படுவதால் வெளி உரத்தின் தேவையும் குறைவு. களைகளை எடுத்து அதையே மூடாக்கிட்டால் சூரிய ஒளி நேரடியாக மண்ணுக்கு கிடைக்காததால் களைகள் முளைப்பதும் குறைவது. மண்ணில் போர்வை போல உலர் மூடாக்கு செயல்படுவதால் நீர் ஆவியாதல் மூலம் நீர் இழப்பு தவிர்க்கப்படுகின்றது. மண் தொடர்ந்து வளப்படுவதால் பயிர் நன்கு செழிப்பாகவே இருக்கும். சொட்டு நீர்ப் பாசனம் போன்ற நவீன பாசன முறைகளுக்கும் உலர் மூடாக்கு ஏற்றதாக உள்ளது. தென்னை போன்ற மரப்பயிர்களில் உலர் மூடாக்கின் பலன் பெரிய அளவில் இருக்கின்றது.

மூடுபயிர், உலர் மூடாக்கு ஆகிய இரண்டுமே ஒரு பண்ணையில் இருக்கும், கிடைக்கும் பொருளைப் பயன்படுத்தி விவசாயிகளாலேயே எளிதில் செய்யப்படுகின்ற யுக்தி, இதற்கு பொருளாதார முதலீடு இல்லையென்றாலும் வேலையாட்களின் தேவை மிக அதிகம். வேலையாட்கள் தேவையைக் குறைத்து எந்தவிதமான பயிருக்கும் ஏற்றபடியாக வந்துள்ள நவீன மூடாக்குமுறைதான் நெகிழி மூடாக்கு (mulching sheet). இது இயற்கை விவசாயத்திற்கு விரோதியா இல்லையா என்பது கேள்விக்குரியது. செயற்கை நூலிழை ஆடை உடுத்து, பெட்ரோலிய எரிபொருள் வாகனத்தைப் பயன்படுத்தி பயணம் செய்து, மின்ணனு ஊடகத்தை பயன்படுத்தும் இயற்கை போராளிகள், காகித உழவர்கள் இதனை கடுமையாக எதிர்க்கக்கூடும். இருக்கும் தண்ணீர் பற்றாக்குறையும், மின்சார இடையூறும், நீர்ப்பாசனத்தை கேள்விக்குறியாக்கி, கேலிக்கிரியதாக்குகின்றது. நெகிழி மண்ணில் விட்டுவிட்டால் 100 சதவிகிதம் ஆபத்தானதுதான். அதில் மறுப்பும் மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் இந்த மல்ச்சிங் ஷீட் என்பது நிலத்தடி போர்வையாகப் பயன்படுத்தி, பயிர் அறுவடை காலம் பூர்த்தியானதும் அப்புறப்படுத்தக் கூடிய வசதியுள்ளது. இந்த மூடாக்கை அப்படியே மண்ணில் விட்டுவிடுவதுதான் தவறேயன்றி பயன்படுத்தியபின் அப்புறப்படுத்துவதனால் மண் கெட்டுவிடுவதில்லை. இயற்கையும் பாழ்ப்பட்டுப் போவதில்லை. இவைகள் மறு சுழற்சிக்கு ஏற்றவைதான். அதனால் சூழலும் மாசுபடப்போவதில்லை.

மூடுபயிர்களால் ஏற்படுத்தப்படுகின்ற மூடாக்கோ, உலர் மூடாக்கோ சிறு வெள்ளாமையான காய்கறிப் பயிருக்கு ஏற்றவை அல்ல. நிலத்தின் ஈரப்பதம் என்பது நாம் கொடுக்கின்ற பாசன நீரை மட்டும் பொருத்த விஷயமல்ல. ஈரப்பதம் வெப்பநிலை, ஆவியாகும்தன்மை, மண்ணின்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். இந்த மூடாக்கு மண்ணின் ஈரத்தன்மையை காற்றில் ஆவியாதலையும், சூரிய வெப்பம் மண்ணில் படுவதையும் தடுத்துத் தக்க வைக்கின்றது. மண்ணில் போர்வையாக மூடப்படுவதால் பூச்சிகள் மண்ணின் வழியாக ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குச் செல்லும் செயல் குறைகின்றது. பூச்சிகளுக்கு ஏற்ப வாழும் சூழல் அமையாததால் பூச்சிகளின் வரத்துக் குறைகின்றது. களை நிர்வாகம் என்பது காய்கறி சாகுபடியில் பெரும் தொல்லை கொடுக்கக் கூடிய வேலை. களைப்பயிர்கள் காய்கறிக்கான உணவு, ஈரம் வாழுமிடம் போன்றவற்றில் பங்குபோட்டு களைகளில் அதிவேக வளர்ச்சியினால் மகசூல் பெரிதும் பாதிப்படைகிறது.

களைக்கொல்லி என்னும் மண்ணை மலடாக்கும் ரசாயனம் தெளிப்பது தவிர்க்கப்படுகின்றது. அதிகச் செலவு பிடிக்கும் களையெடுக்கும் செலவினமும் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றது. மண்ணை முழுவதும் போர்வை போல மூடி, சொட்டு நீர்ப் பாசன அமைப்பை உள்ளே நிறுவி, காய்கறிப் பயிருக்கு ஏற்ற இடைவெளியில் சிறிய துளையிட்டு அதில் நமக்கு தேவையான செடி அல்லது விதையை நடவு செய்கின்றோம். துளையில் நாம் நடவு செய்த விதையோ, செடியோ மட்டும்தான் முளைத்துவரும். அதனை களை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றது.

Story image

நெகிழி மூடாக்கு பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் தக்காளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை நேரிடையாக மண்ணில் படாமல் வளர்வதால் தரமும், உருவ அமைப்பும் சிறப்பாக அமைகின்றது. வெள்ளரி, தர்பூசணி போன்றவைகள் மண்ணில் ஒட்டாமல் வளர்வதால் அதன் தோற்றமும், நிறமும், அழகாக இருக்கின்றது. பீன்ஸ் வகைகள், சோயாபீன், முட்டைகோசு, வெள்ளரி, வெங்காயம், லெட்யூஸ் கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணி, தக்காளி, தர்பூசணி போன்றவைகள் நெகிழி மூடாக்கு போர்வை போர்த்திய நிலத்தில் சாகுபடி செய்ய ஏற்றவையாகும். நெகிழி மூடாக்கு பயன்படுத்தி அறுவடை முடிந்தபின்னர் முழு அளவையும் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும். மண்ணுடன் மக்கிவிடக் கூடிய தன்மை உடைய (Bio degrable) மூடாக்கு தாள்களும் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனையாகிறது.

இந்த நெகிழி மூடாக்கின் ஆரம்ப முதலீடும், அதனை கொண்டு வரவழைத்து நிலத்தில் போர்வையாக மூடுகின்ற வேலையும் சற்றே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம். ஆனால் உயரும் தரமும், மகசூலும்,குறையும் களைச் செலவும், அவற்றை மறக்கடிக்கின்றன. ஆரம்ப காலக்கட்டத்தில் நெகிழி மூடாக்கை நிலத்தில் போர்வையாக விரிக்க அதனை மகசூல் முடிவடைந்ததும் திரும்ப சுருட்டி வைப்பதும் சிரமமான வேலை போலத் தோன்றும். ஆனால் அதனைச் சிறிய அனுபவத்தில் லகுவாக செய்யலாம். பழகப் பழக கை வந்த கலையாகிவிடும்.

LPDE (Low density poly ethylene) என்னும் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் மல்ச்சிங் ஷீட் 10 மைக்ரான் முதல் 200 மைக்ரான் வரை தடிமனில் கறுப்பு, வெள்ளி நிறங்களில் கிடைக்கின்றது. காய்கறிப்பயிர்களில் மட்டும் பெரிய அளவில் பயன்பட்டு வந்த இந்த நெகிழி மூடாக்கு கொய்யா, எலுமிச்சை போன்ற மரப்பயிர்களிலும் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நெகிழி மூடாக்கு கொண்டு சாகுபடி செய்யும்போது கிடைக்கின்ற மூன்று லாபங்கள். 1. அதிகரிக்கும் உற்பத்தி 2. தண்ணீர் சிக்கனம். 3. களைக் கட்டுப்பாடு.

தேசிய தோட்டக்கலை அமைப்பு (National Horticultural Mission) ஒரு பயனாளிக்கு 2 ஹெக்டேர் பரப்பளவிற்கு மிகாமல் நெகிழி மூடாக்கு அமைக்க மானியம் வழங்குகின்றது. ஹெக்டேர் ஒன்றிற்கு ரூபாய் 10000 வீதம் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகின்றது. இந்த மானியம் தோட்டக்கலை துறையினரின் மூலம் பயனாளிகளுக்குக் கிடைக்கின்றது.

Story image

சுருங்கக் கூறினால் மூடு பயிர்களின் உயிர் மூடாக்கு, காய்ந்த வேளாண் கழிவுகளால் உலர் மூடாக்கு, நெகிழி மூடாக்கு என எந்த முறையை உழவர் பயன்படுத்தினாலும் கிடைக்கும் பலன் ஒன்றே.

  1. மூடாக்கு மண்ணைப் பகலில் குளிர்ச்சியுடனும், அதே சமயம் இரவு நேரத்தில் கதகதப்பான வெப்பத்துடனும் வைக்க உதவுகின்றது.

   2. மண்ணின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆவியாதலை தவிர்க்கின்றது.

   3. மண்ணின் மக்குத்தன்மையை அதிகரிக்கின்றது.

   4. தண்ணீர் அதிகமாகும் காலத்தில் ஏற்படுகின்ற மேல் மண் அரிமானத்தை தடுக்கின்றது.

   5. அறுவடை செய்யும்போது நிலப்போர்வையின் மேல் பழங்கள் விழுவதால் பழங்கள் அடிபடாமலும், சுத்தமாகவும் கிடைக்கின்றது.

   6. அதிக மழைநீர் மண்ணினுள் புகுந்து நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு கிடைக்கிறது.

   7. நீர்ப்பாசனம் செய்யப்படவேண்டிய கால அளவு இடைவெளி அதிகரிப்பதால் நீர்ச்சிக்கனம், மின்சக்தி அல்லது எரிபொருள் சிக்கனம் உண்டாகின்றது.

இந்த மூன்று வகை மூடாக்குகளில் அவரவரின் தேவைக்கும், வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ற முறையை பயிருக்குத் தக்கபடி பயன்படுத்தவேண்டும். இயன்றவரை அருகில் எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு மூடாக்கு அமைப்பது சிக்கனமானது. மூடாக்கு நிலமகளுக்கு ஆடை. இந்த ஆடையை எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் பயன்படுத்தி பலன் அடைவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.