தற்கொலை தீர்வாகுமா?
பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை, மகள் ஓடிப்போனதால் மனமுடைந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் தற்கொலை, ஊனமுற்ற இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை - இவையனைத்தும் ஒரே நாளில் வெளியான செய்


பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை, மகள் ஓடிப்போனதால் மனமுடைந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் தற்கொலை, ஊனமுற்ற இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை - இவையனைத்தும் ஒரே நாளில் வெளியான செய்திகள்.
பொதுவாக தற்கொலைக்கு கோழைத்தனமான செயல், நொடியில் எடுக்கும் முடிவு, விளைவுகளை அறியாமல் செய்யும் விபரீதம் என பலவாறாக விளக்கங்கள் சொல்வதுண்டு. ஆனால் பிரச்னையை எதிர்கொள்பவர்கள் தீர்வுகாண முடியாதபோது தற்கொலையைத் தான் நாடுகின்றனர். இதனாலேயே மனித வாழ்வில் பிரச்னை அதிகரிப்பது போன்று தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
தற்கொலைக்கு குடும்பப் பிரச்னை, தீராத நோய், தொழிலில் நஷ்டம், தேர்வில் தோல்வி, முறைகேடான உறவு, காதல் தோல்வி என பல காரணங்கள் உண்டு. ஆனால் மன அழுத்தம்தான் தற்கொலைக்கான தூண்டுதலாகும்.
பெரும்பாலோர், தங்கள் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சினூடே, ""செத்துவிடலாம் போலிருக்கிறது'' என தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தி விடுகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும் தேவை. இவை கிடைக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணத்தை கைவிட அதிக வாய்ப்புள்ளது.
எத்தகைய பிரச்னை எழுந்தாலும் அதற்குத் தற்கொலை தான் தீர்வு என கருதுகின்றனர். ஆனால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தேர்வில் தோல்வி என்ற காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டனர். உடனடி சிறப்புத் தேர்வு மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட முடியும் என்றபோதும் தற்கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன.
பிரச்னையால் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் தான் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அப்போது எது சுலபமான வழி என தெரிகிறதோ அல்லது நினைக்கின்றனரோ அதன்படி தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒட்டுமொத்த அளவில் அதிகப்படியானோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 2007-ம் ஆண்டு 1,22,637 பேரும், 2008-ல் 1,25,017 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் 2007-ல் 13,811 பேரும், 2008-ல் 14,425 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். புது தில்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் அதிகமான தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன.
பெருநகரங்களில் நடக்கும் தற்கொலைக்கு மன அழுத்தம் தரக்கூடிய வாழ்க்கைப் போராட்டங்களே காரணமாகும். குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்னையால் ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், பெண்கள் குடும்பப் பிரச்னை, வரதட்சிணைக் கொடுமை, தகாத உறவு முறை, விவாகரத்தில் மனமுடைதல் போன்றவற்றால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஆயினும் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள் என பாகுபடுத்திப் பார்க்கும்போது ஆண்கள் 64 சதவீதம், பெண்கள் 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால் இளமைப் பருவத்தினரிடையே ஆண்கள் 49 சதவீதம் பெண்கள் 51 சதவீதம் என்று உள்ளது. இதன்படி பார்க்கும்போது இளமைப் பருவத்தில் ஆண், பெண் மனநிலை ஒரே நிலையில் இருப்பது தெரிகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் அதிகபட்சம் தங்களுக்கான காரணங்களுக்காக மட்டுமே தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்களோ, கணவனின் கள்ளத்தொடர்பு, குடிப்பழக்கம், குழந்தைகளின் உடற்கோளாறு, வரதட்சிணைக் கொடுமை போன்ற மற்றவர்கள் சார்ந்த பிரச்னைகளுக்காகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
2008-ம் ஆண்டு புள்ளி விவரப்படி 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 10,027 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை எண்ணம் உடையவர்களைக் கண்டறிந்து ஆலோசனை, அறிவுரை கூறும்பொருட்டு சென்னை போன்ற பெருநகரங்களில் சில தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற அமைப்புகளை அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
இளம் வயதினரிடையே எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது வேகம் இருக்குமளவுக்கு விவேகம் இருப்பதில்லை. அதனால் அந்த வயதினருக்கு கூறும் அறிவுரை, ஆலோசனைகள் அவர்களைப் பக்குவப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். மாறாக அவர்கள் மனமுடையும் வகையில் இருக்கக் கூடாது.
தற்கொலைச் சம்பவங்களைத் தடுப்பதில் மற்றவர்களைக் காட்டிலும் பெற்றோருக்கு பெரும்பங்கு உண்டு. கணவன் - மனைவி வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது அவசியமாகும். அவர்களிடம் மாற்றம் இருப்பது தெரிய வந்தால் அது பற்றி பேசி தீர்வு காண வேண்டும். மாறாக அதிரடியான நடவடிக்கைகள் கூடாது. இது அவர்கள் மனஉளைச்சலுக்கு வழிவகுக்குமே தவிர, மனநிம்மதியைத் தராது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...