காலம் கடந்த முடிவு!
"பட்டால்தான் தெரியும் கெட்டால் தான் புரியும்'' என்றொரு சொலவடை கிராமப்புறங்களில் உண்டு. பெண் குழந்தைகள் தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசின் முடிவு இப்படித்தான் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல


"பட்டால்தான் தெரியும் கெட்டால் தான் புரியும்'' என்றொரு சொலவடை கிராமப்புறங்களில் உண்டு. பெண் குழந்தைகள் தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசின் முடிவு இப்படித்தான் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது தெரியவந்துள்ளது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 914 ஆகக் குறைந்துள்ளது. இது 2001-ல் 927 ஆக இருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் ஆண் குழந்தைகள் மீதான ஆர்வம், உயர்தரமான மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவை காரணமாக சிசுக்கொலை மற்றும் கருக்கொலை நிகழ்வால் ஒட்டுமொத்த அளவில் 6 வயது வரையிலான குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2011 கணக்கெடுப்பின்படி 6 வயது வரையான குழந்தைகளின் எண்ணிக்கை 158.8 மில்லியனாகும். இது 2001 கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 5 மில்லியன் குறைவாகும். ஒவ்வொரு கணக்கெடுப்பின் போதும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருவது எதிர்காலச் சமூகத்துக்குச் சவால் விடுப்பதாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஆனால், அதற்கான முயற்சிகள் ஆக்கபூர்வமாக எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதைத் தடுக்க புதிய கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இது காலதாமதமான முடிவு என்றாலும் வரவேற்கப்பட வேண்டியதாகும். அதே வேளையில் இக்குழுவின் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானதாக இருந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும்.
முன்பு, பழைய சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். அப்போது கருக்கொலை, சிசுக்கொலை போன்றவை பற்றி அறிந்திருக்கவில்லை. குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாகவும் இருந்தனர். மேலும் அதிகமான குழந்தைகள் இருப்பது எதிர்காலத்தில் பாதுகாப்பானது என்றும் கருதினர்.
இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகமான குழந்தைகள் இருந்தன. காலப்போக்கில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி, கல்வியறிவு காரணமாக குறைவான குழந்தைகளே போதுமானது என்ற மனநிலை மக்களிடையே ஏற்பட்டது. இந்த மனநிலையில் எந்த குழந்தைகளாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டனர்.
படிப்படியான நாகரிக வளர்ச்சி காரணமாக இரண்டு குழந்தைகள் இருந்தாலும் அதில் ஒன்று ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இதன் பின்னரே கருக்கொலைச் சம்பவங்கள் நிகழத் தொடங்கின. மருத்துவ வசதிகள் வளர்ச்சியடையாத அந்தக் காலகட்டத்திலும் கருக்கொலைச் சம்பவங்கள் பல்வேறு முறைகளில் நடந்தது.
ஆண் குழந்தை மீதான ஆர்வம் காரணமாக உயிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு சோதனைகளுக்கு பெண்கள் தங்களை உள்படுத்தினர். கர்ப்பிணிப் பெண்களிடம் காணப்படும் அறிகுறிகளைக் கொண்டு கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என "கணித்து' வயதான பெண்களின் வழிகாட்டுதலின் பேரில் கருக்கொலைச் சம்பவங்கள் நடந்தன.
அப்போது ஆண் குழந்தை மோகம் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆண் குழந்தை மோகம் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் அறிவியல் தொழில்நுட்பம் காரணமாக கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு மருத்துவ வசதிகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.
இதனால் கருக்கொலை என்பதெல்லாம் சாதாரண நிகழ்வாகிவிட்டது.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து பாலினம் பற்றிக் கூறுவது சட்டவிரோதச் செயல்தான் என்றாலும், சில மருத்துவமனைகளில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றிய ரகசியத்தைக் கூறிவிடுகின்றனர். கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிய ஸ்கேன் செய்யவரும் பெண்கள் ஆண் குழந்தை என்றால் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் பெண் எனில் கருக்கொலை செய்கின்றனர்.
நகரங்களில் வாழ்வோரும், கல்வியறிவு பெற்றவர்களும் மட்டுமே அறிந்திருந்த மருத்துவ வசதிகள் பற்றி கிராமங்களில் வாழ்வோரும் அறிந்துள்ளனர். இதற்கு ஆண் குழந்தை மீதான மோகம் மற்றும் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி கூறுவதுமேயாகும்.
கிராமங்கள், நகரங்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் இதுபற்றி அறிந்தவர்களாக உள்ளனர். இதனால் முதல் குழந்தையே ஆணாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெண்களிடையே குறைந்து வருகிறது.
இத்தகைய சூழலில் காலம் கடந்த முடிவாக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். பாலினம் பற்றிக் கூறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகள் மக்களோடு தொடர்புடைய சுகாதாரத் துறை போன்ற மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்.
மேலும் கருக்கொலைக்கான தண்டனையை தயவுதாட்சன்யமின்றி வழங்கும்போதுதான் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும்.
மாற்றம் ஏற்படுவது கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கையில்தான் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...