நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடை தேடும் வினாக்கள்

ஜப்பான் நாட்டில், புகுஷிமாவில் நிகழ்ந்த அணு உலை விபத்துக்குப் பின்னர், அத்தகைய விபத்து கூடங்குளத்தில் ஏற்படாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதிருப்போமா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டாமா'' -

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:24 pm

சா. பன்னீர் செல்வம்

ஜப்பான் நாட்டில், புகுஷிமாவில் நிகழ்ந்த அணு உலை விபத்துக்குப் பின்னர், அத்தகைய விபத்து கூடங்குளத்தில் ஏற்படாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதிருப்போமா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டாமா'' - என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். அதாவது, புகுஷிமா விபத்து நிகழும் வரை, அத்தகைய விபத்துக்கு வாய்ப்பான நிலையில்தான் கூடங்குளமும் இருந்தது. அதன்பின்னர் அந்த விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுவிட்டது என்கிறார். அதாவது, புகுஷிமாவில் நிகழ்ந்தது மாதிரியான விபத்துதான் கூடங்குளத்திலும் நிகழக்கூடும். வேறுவகையான விபத்து நிகழவே நிகழாது என்கிறார். - எப்படி?

செர்னோபிலில் ஏற்பட்ட அணு உலை விபத்து பூகம்பத்தால் நிகழ்ந்ததல்ல; சுனாமியால் ஏற்பட்டதல்ல; மனிதத் தவறுகளால் ஏற்பட்டதுதான். ஆனால், அந்த மனிதத் தவறுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டுவிட்டன - என்கிறார்கள் கூடங்குளம் அணுசக்தி விஞ்ஞானிகள்.

அதாவது, செர்னோபிலில் நிகழ்ந்த மனிதத் தவறுகள் தவிர, உலகில் வேறெங்கும், வேறு எந்த மனிதனும் வேறு வகையான மனிதத் தவறு செய்யவேமாட்டான் எனச் சொல்கிறார்கள் நம் அணுசக்தி விஞ்ஞானிகள். - எப்படி?

அனைத்து யூகங்களுக்கும் அப்பாற்பட்டு நிகழ்வதுதான் விபத்து. ஆனால், கூடங்குளம் அணுமின் உலை அமைப்பு, அதன் இயக்கம், அங்கு ஏற்படும் அணுக்கழிவுக்கான பாதுகாப்பு என அனைத்து நிலைகளிலும் நாங்கள் யூகிக்கும் விபத்துகள் மட்டுமே ஏற்படக்கூடும். எங்களின் யூகங்களை மீறி வேறு வகையான விபத்து ஏற்படாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். - எப்படி?

சிந்தனைக்குறைவு, கவனக்குறைவு - இரண்டும் மனிதனின் இயற்கை குணங்கள். அணுமின் உலையில் தொடர்புடைய விஞ்ஞானிகளும், அங்கு பணியாற்றும் மற்றவர்களும் மனித இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகப் பிறவிகளா?. - எப்படி?

உலகில் யாருடைய சிந்தனையும் முழுமையானதல்ல. ஒரு காலத்திய விஞ்ஞான முடிவு, பின்னர் மற்றொரு விஞ்ஞானியால் மாற்றப்படுகிறது. ஆக, எந்த முடிவும் நிரந்தரமல்ல என்பதுதான் அறிவியலின் அடிப்படையாகிறது. ஆனால், இன்னின்ன பகுதிகளில் மட்டுமே நிலநடுக்கம் ஏற்படும் என்பது என்றென்றும் மாறாத நிரந்தர முடிவு என்கிறார்கள். - எப்படி?

சூரிய, சந்திர கிரகணங்கள் எந்தெந்த தேதிகளில் நிகழும் என்பதை இன்றைய அறிவியலுக்கு முன்பே நம் முன்னோர்கள் கணித்துரைத்திருக்கிறார்கள். ஆனால், பூமியின் உட்பகுதியில் எந்தெந்தத் தேதிகளில் நடுக்கம் உண்டாகும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் கூறவில்லை. இன்றைய அறிவியலாளரில் எவரேனும் எந்தெந்தத் தேதிகளில் உலகின் எந்தெந்தப் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்படும் என்பதை கால அட்டவணையிட்டுக் கூறத் தயாரா? முடியாது.

காரணம், பூமியின் உட்பகுதி மாற்றங்கள், கோள்களின் இயக்கம்போல் ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டவையல்ல. புகுஷிமாவிலும், துருக்கியிலும் இன்ன தேதியில் நில நடுக்கம் உண்டாகும் என்பதை முன் கூட்டியே எச்சரிக்காதவர்கள், கூடங்குளத்தில் ஏற்படாது என்பதை மட்டும் நம்பச் சொல்கிறார்கள். - எப்படி?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை நம்மை அலைக்கழிக்கின்ற நிலையில், கூடங்குளத்தில் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறோம். எனவே, "அஞ்சற்க' என அபயமளிக்கிறார்கள். முதலாம் தலைமுறை தொழில்நுட்பக் குறைபாட்டால்தான், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் உண்டாயிற்று. அதுவும் குறைபட்டதால்தான் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் உருவாயிற்று. மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் மட்டும் முந்நூறு தலைமுறைக்கும் போதுமானது என்பது எப்படி?

ஓரிடத்தில் ஒரு பேருந்து விபத்துக்கு உள்ளான பின்னரும், அந்தப் பேருந்தைப் பழுதுநீக்கி அல்லது புதிய பேருந்தை அதே வழித்தடத்தில் விடுகிறோம்.

அணுஉலை விபத்துக்குப் பின்னர், அந்த இடத்தில், அல்லது அந்த நாட்டின் இன்னொரு பகுதியில் புதிய அணுஉலை அமைப்பாரில்லை - என்ன காரணம்?

அணுகுண்டு வீச்சு, அணுஉலை விபத்து இரண்டும் ஒன்றுதான். இரண்டின் வழியாகவும் வெளிப்படும் அணுக் கதிர்வீச்சால் மனிதர் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும், பஞ்சபூதங்களும் நஞ்சாதல் உண்மை. மின்சாரத் தேவைக்காகச் சாகவும் தயார் என மக்கள் கூறுகிறார்களா? அப்படியொரு வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா? ஒருசாரார் சாகவும் தயார் எனக் கூறினாலும், அவர்களுக்காக மற்றவர்களும், ஏனைய உயிரினங்களும் சாக வேண்டுமா?

உலகில் பல ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் அணுஉலைகள் பலவற்றில் இதுவரை விபத்து நிகழவில்லை என்பதால், அணுஉலை ஆபத்தில்லாதது எனும் வாதம் அறிவார்ந்த வாதமாகுமா? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. செர்னோபில், புகுஷிமா என இயற்கை நமக்கு இரண்டு சூடு வைத்துவிட்டது; போதாதா?

உலகிலுள்ள அனைத்து அணுஉலைகளும் விபத்தான பின்னர், ஆமாம், அணுஉலை ஆபத்தானதுதான் - என ஒப்புக்கொள்வதற்கும், அப்போதே சொன்னோமே, கேட்டீர்களா? - எனக் குத்திப் பேசுவதற்கும் யாருமே இருக்கமாட்டோம்.

நமது பெருமதிப்பிற்குரிய அறிவியல் வித்தகர்களும், அறிவியலைத் தூக்கிப்பிடிக்கத் துடிக்கும் அறிவு ஜீவிகளும், நம்மை ஆளுகின்ற - ஆளத்துடிக்கின்ற தலைவர்களும் மேற்கண்ட ஒவ்வொரு கேள்விக்கும் திட்டவட்டமான - தெள்ளத் தெளிவான - காரணகாரியப் பொருத்தமான பதில்கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அவ்வாறின்றி, இன்னின்னவாறாக அனைத்துப் பாதுகாப்பும் செய்யப்பட்டிருக்கிறது என்பதையே திரும்பத் திரும்பக் கூறுவதும், நான் யார் தெரியுமா? என்னைவிட உனக்கு ரொம்பத் தெரியுமோ? என மேட்டிமை நீட்டுதலும் அறிவியல் ஆகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.