ஓவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில், 86-வது அரசியல் சட்டத் திருத்தப் பிரிவு, கல்வி அனைவருக்கும் அடிப்படை உரிமை என்று தெரிவிக்கிறது. ஆனால், மனித வளம் ஏராளமாக உள்ள நம் நாட்டில் இன்னும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய குழந்தைகள் தத்தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடைகளிலும், உணவகங்களிலும், தொழிற்சாலைகளிலும், கட்டட வேலைகளிலும் உள்ளத்தையும், உடலையும் வருத்தி உழைக்கிறார்கள். அவர்களை அந்த நரகத்திலிருந்து மீட்டெடுத்து, அவர்களின் வருங்காலம் செழித்து, நாட்டின் சிறந்த குடிமக்களாக மலர்ந்து மணம் வீச அவர்களை பள்ளி என்னும் கற்பகதருவை வலம் வரச் செய்வது அரசின் கடமையாகும்.
இந்தியாவில்தான் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உள்ளது. வீட்டில் நிலவும் வறுமை, கல்வியின்மை, வழிகாட்டிகள் இன்மை ஆகியவை இதற்கு முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன.
எனவே, குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு முறை என்பது அரசுக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கி வருகிறது.
இந்தியாவில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் குறைந்த சம்பளத்தில், அதிக நேரத்தில், போதிய உணவின்றி கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.
பல குழந்தைகள் சிறு வயதிலேயே பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களால் தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த திராணியற்றவர்களாகி விடுகின்றனர். இதனால் அந்த சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அவர்களின் உடல்நிலையும், குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. கல்வியின் அரிச்சுவடியையே அறியாமல் வளரும் இவர்கள் எதிர்காலத்தில் சமூகக் குற்றவாளிகளாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது.
வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் பல சிறுவர்களின் எதிர்காலக் கனவுகள் இந்தக் கடைகளின் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடிந்து விடுகின்றன. மொட்டிலேயே பூக்களைக் கருக வைக்கும் இந்நிலைமை இந்தியாவில் வளர்ந்து வருகிறது.
14 வயதுக்கும் கீழான குழந்தைகளைப் பணியில் அமர்த்துவதைத் தடைசெய்ய குழந்தைத் தொழிலாளர்கள் (தடை செய்தல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல்) சட்டம், 1986 வகை செய்கிறது. இது 13 வகையான தொழிற்சாலைகளிலும், 52 வகையான பணிகளிலும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது எனத் தெரிவிக்கிறது.
நம் நாட்டில் வறுமைக்கோட்டுக்கும் கீழே இருக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பணம் காய்க்கும் மரம் போன்றவர்கள். தம் குழந்தைகளால் கிட்டும் வருமானமும், பலனும் குறைவாகவேயிருந்தாலும், அக்குழந்தைகளின் தயவின்றி வாழ முடியாத நிலைக்குப் பெற்றோர்களின் வறுமை உள்ளது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதாலேயே குழந்தைத் தொழிலாளர்கள் கொடுமை தீரும் என உறுதியாகக் கூற முடியாது. ஏழை மக்களிடையே காணப்படும் வறுமையை ஒழிக்க அரசு நிரந்தத் தீர்வு காணவில்லையெனில், இப்பிரச்னை தொடரும். அனைவருக்கும் கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய இரண்டும் இணைந்து பணியாற்றினால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்கலாம். குழந்தைத் தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி வசதிசெய்து கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும்.
அபாயகரமான தொழில்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தடுக்கும் சட்டமிருந்தும் அதை முழுமையாகச் செயல்படுத்த மாநில அரசுகள் முன்வர வேண்டும். சிறுவர், சிறுமிகளை வேலைக்கு அமர்த்தும் நிர்வாகத்தினர்மீது அரசு உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வையுடனும், விடாமுயற்சியுடனும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் இந்தச் சவாலை முறியடிக்கலாம்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அனைவருக்கும் கல்வி என்ற கனவு இந்தியா விடுதலையடைந்து 60 ஆண்டுகளாகியும் நனவாகவில்லை. குழந்தைகள் கல்வி அறிவு பெறுவதன் மூலமே ஒரு நாட்டின் வளர்ச்சி மேன்மை அடையும். குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்கச் செய்வோம். அவர்களை எந்தவிதத்திலும் மனம் மற்றும் உடல்ரீதியாக கொடுமைக்கு ஆளாக்கக் கூடாது.
பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் இந்நாட்டின் குடிமக்களே. அவர்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளையும் பெறுவதற்குரிய எல்லா உரிமைகளும் இருப்பினும் அவை மறுக்கப்படும் நிலையில் அவற்றை நாமாக முன் வந்து அளிப்பது தலையாய கடமையாகும்.
குழந்தைகள் செம்மையாக வளருவதற்காக வகை செய்வது தான் நமது நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சியின் லட்சியமாகத் திகழ வேண்டும். சொல்லப் போனால் இதுதான் முழு முதற் கொள்கையாக இருக்க வேண்டும்.
தோட்டத்தில் வளரும் மலர்களைப் போன்றவர்கள் குழந்தைகள். அவர்களை மிகவும் அக்கறையுடன், ஆதரவுடனும், அன்புடனும், பாசத்துடனும் வளர்க்க வேண்டும்.
ஏனெனில், அவர்கள்தான் ஒரு நாட்டின் நல்ல எதிர்காலங்கள், நம்பிக்கை நட்சத்திரங்கள், வருங்கால நல்ல குடிமக்கள் என்றார் பாரதத்தின் முதல் பிரதமர் நேரு. பூக்களைப் பறிக்காதீர்கள், அவை மலர்ந்து மணம் பரப்பக் கூடியவை.
பாறப்புறத் இராதாகிருஷ்ணன், எண்.25, புதிய எண்.41,
பரசுராமன் ஈஸ்வரன் கோயில் தெரு, அயனாவரம், சென்னை-23.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


