சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வறுமையே உன் நிறமென்ன?

நம் நாட்டின் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பட்ஜெட் தொடரின் கூட்டுக் கூட்டத்தில், உணவுப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதனால் சமூகத்தில் அடித்தட்டு மக்களும், ஏழைகளும், நடுத்தர மக்களும

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:44 pm

நம் நாட்டின் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பட்ஜெட் தொடரின் கூட்டுக் கூட்டத்தில், உணவுப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதனால் சமூகத்தில் அடித்தட்டு மக்களும், ஏழைகளும், நடுத்தர மக்களும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது உண்மைதான். இவர்களுக்கு நிவாரணம் கிடைக்க விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். எந்த நிலையிலும் யாரும் பட்டினியால் மடியக் கூடாது என்ற நோக்கத்துடன் உணவுக்கு உத்தரவாதம் வர வகைசெய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.

மலைபோல் குவிந்த தானியம் ஒருபுறம், கொடும் பசியுடன் வாடும் கோடிக்கணக்கான மக்கள் மறுபுறம் என நம் நாட்டின் நிலைப்பாட்டை தேசிய ஊடகங்களும், பன்னாட்டு ஊடகங்களும் குறிப்பிடுகின்றன. 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் மொத்தம் அரிசி, கோதுமை இருப்பு 5.8 கோடி டன்களாகும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில் 14 லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகி இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது. இந்த உணவு தானியங்களைப் பத்திரமாகச் சேமித்து வறுமையில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன, அதில் வெளிப்படைத் தன்மை இல்லை, இதைச் சீர்செய்ய வேண்டுமானால் பொது விநியோகத் திட்டத்தை முழுமையாகக் கணினிமயமாக்குவது எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அரசு செய்து முடிக்க வேண்டும். பின்தங்கிய மாவட்டங்களில் பட்டினி, சத்துக்குறைவால் உயிரிழப்பு என்பது தொடர்கதையாகவுள்ளது, இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது அரசின் கடமை, இதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

ஏழ்மையை ஒழிக்க, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இல்லாதார் இல்லாமை நிலை வேண்டும் என்ற நிலையை நம் நாட்டில் உருவாக்க இத்தீர்ப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

உலகத்தில் வறுமையின் காரணமாக யாரையும் பட்டினியால் சாகவிடக் கூடாது என்றும், குறைந்தபட்சம் 1,200 கலோரி உணவாவது கிடைக்க வேண்டும் என்றும் ஐ.நா. உணவு விவசாய நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் எவ்வளவு பேர் வறுமையில் வாடுகிறார்கள் என்பதை அரசு நியமித்த ஒவ்வொரு குழுவும் வெவ்வேறாக எடுத்துரைத்துள்ளது. ஆனால், இந்தியாவின் திட்டக் குழு சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் அறிக்கையை ஏற்று நம் நாட்டில் 37 சதவீதம் மக்கள் பசி, பட்டினியுடன் வறுமையில் வாடுவதாகத் தெரிவித்துள்ளது.

உலகத்தில் பட்டினியால் வாடும் மக்களின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளது.

சத்துணவுக் குறைவால் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகின் மக்கள் தொகையில் 4-ல் ஒரு பங்காகும். நம் நாட்டில் உழைப்போர்பெறும் சம்பளம் கூடுதலாக இருக்கலாம். ஆனால், வாங்கும் சக்தி அவர்களுக்கு இல்லை. நாட்டில் விவசாயம் நலிந்து வருகிறது. ஆண்டுதோறும் பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் குடியிருப்புகளாகவும், கல்வி வியாபாரக் கல்லூரிகளாகவும், தொழிற்சாலைகளாகவும், நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கில் விவசாயிகள் பிழைப்பைத் தேடி நகர்ப்புறங்களில் குடிபுகுவதால், நகர்ப்புறங்களில் வறுமை அதிகரித்து வருகிறது.

2008-ம் ஆண்டில் மட்டும் கடன்சுமை காரணமாக இந்தியாவில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மக்கள்தொகை அதிகரிக்க, அதிகரிக்க விவசாயம் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து, விளைநிலங்களின் பரப்பளவு தொடர்ந்து சுருங்கி வருகிறது.

நாடு முழுவதிலும் பொது விநியோகத் திட்டத்திலுள்ள குறைபாடுகளைக் களைய அவ்வப்போது அரசு மக்கள் பங்கேற்புடன் கூடிய ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் விரைவில் கொண்டுவர வேண்டும்.

இந்நிலையில் இலவச அரிசியைத் தமிழக அரசு ரேஷன் மூலம் வழங்குவது பெருவாரியான மக்களிடையே பெரும் வரவேற்பை குறிப்பாக கிராமப்புறங்களில் பெற்றுள்ளது. அதேசமயத்தில் அரிசி கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தைச் சீர்செய்து ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களின் கையிருப்பை அதிகப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் வறுமையும், பசி, பட்டினியும் அரசியலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் இலவச திட்டங்கள் அள்ளி வீசப்பட்டு ஏழைகள் விளையாட்டுப் பொருள்களாக்கப்படுகிறார்கள். "வறுமையே போ' என இந்திரா காந்தி சூளுரைத்தார். நம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம்போய்ச் சேருவதற்குள் அது கை மாறிய பனிக்கட்டியாக மாறி விடுகிறது என்றார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.

நம் நாடு அனைத்து வளங்களும் ஒருங்கேபெற்ற உன்னத திருநாடு. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, ஒழுக்கம், அறிவு, நற்சிந்தனை, உழைப்பு ஆகியவற்றை பொருத்தே அமைகிறது. "தொந்தரவுகள் இல்லாமல், மக்கள் தங்கள் உழைப்பின் பயனை நுகர்ந்து கொண்டிருக்கிற நிலைமை எதுவோ, அதுவே அமைதி' என்றார் அர்த்தசாஸ்திர பண்டிதன் சாணக்கியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.