நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

இப்படியெல்லாம் நடக்குமா என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று நடக்கிறது. நகரங்களில் சாலையோரங்கள், பூங்காக்கள், கல்லூரி மைதானங்கள், விளையாட்டு மைதானங்களில் தனி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:53 pm

பெ. சுப்ரமணியன்

இப்படியெல்லாம் நடக்குமா என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று நடக்கிறது. நகரங்களில் சாலையோரங்கள், பூங்காக்கள், கல்லூரி மைதானங்கள், விளையாட்டு மைதானங்களில் தனியாகவும், கூட்டமாகவும் காலை மற்றும் மாலை வேளையில் உடல் வியர்க்க, விறுவிறுக்க நடக்கிறார்கள். அன்றைய நிலையைக் காட்டிலும் இன்று அதிகப்படியானோர் நடக்கிறார்கள். தனியாகவோ, மற்றவர்களோடோ அல்லாமல் குடும்ப சகிதமாகவும் நடக்கின்றனர்.

நடைப்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால் அதைப் புரிந்து கொண்டவர்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த அளவுக்கு நடப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்தான் என்ன? நடந்தே ஆக வேண்டும், நடந்தால்தான் மீதமிருக்கும் வாழ்நாளை ஆரோக்கியமாகக் கடத்த முடியும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி வருகிறோம்.

முன்பெல்லாம் நடைப்பயிற்சி என்பது தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர்பதவிகளை வகிப்பவர்கள், மேல்வகுப்பினர் சார்ந்ததாக இருந்தது. இவர்களைப் பொறுத்தமட்டில் உடல்சார்ந்த உழைப்பு மிகக் குறைவு. அதனால் ஏற்படும் ஆரோக்கியக் குறைவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஆனால், இன்று எந்த இடமாக இருந்தாலும் உயர் அதிகாரிகள், மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோர், அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண ஊழியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் வரை நடைப்பயிற்சி செல்கிறார்கள். நடைப்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

சிறிய நகரங்களில் உள்ள தெருக்களில் குடும்பத் தலைவிகள் இருவர் நின்று பேசிக் கொண்டிருக்கும் போதுகூட, "நடந்துகிட்டே பேசுவோமே' எனக் கூறக் கேட்கலாம். பெரு நகரங்களில் இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் சிறு நகரங்கள், கிராமங்களில் இத்தகைய காட்சிகளைக் காணலாம்.

நகரங்களில் வாழ்வோர் நிலை இப்படி என்றால் கிராமங்களில் வாழ்வோரின் நிலை வேறாக உள்ளது. கிராமங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு சார்ந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் நடைப்பயிற்சி என்ற ஒன்று தனியாக மேற்கொள்ள வேண்டியதில்லை என கருதுகின்றனர்.

அன்றாடம் காலையில் எழுந்து கால்நடைகளைப் பராமரித்துவிட்டு சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட்டு மதிய உணவுடன் வேலைக்குச் செல்கின்றனர். மாலை வரையில் உடல் நோகும் அளவுக்கு வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் நடந்து கொண்டிருக்கிறார்கள். மாலை வீடு திரும்பியதும் இரவு உணவை முடித்துவிட்டு உடல் அயர்வு காரணமாக நிம்மதியாக உறங்குகின்றனர்.

இன்றும் நகரங்களில் நடைப்பயிற்சி செல்பவர்களைக் காணும் கிராமத்து தாத்தாக்கள், "எங்க காலத்துல தினமும் நாலு மைல் நடந்து சென்று பள்ளிக்குப் போனோம்' என்றும், கிராமத்து அப்பாக்கள், "என்னோட வயசு காலத்துல எட்டு மைல் தூரம் சைக்கிள் மிதித்துச் சென்றோம்' என்றும் கூறக் கேட்கலாம். அவர்கள் முதுமையிலும் சைக்கிள் ஓட்டிச் செல்லும் அளவுக்குத் திடகாத்திரமாக இருந்தார்கள்.

ஆனால், நகரங்களில் அடுக்குமாடிக் கட்டடங்களில் இயங்கும் அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வயதினர் மாடிக்குச் செல்வதற்குக் கூட லிஃப்ட்டுக்குக் காத்திருக்கின்றனர். இதற்கு அவர்களின் உணவுமுறைப் பழக்கமே காரணமாகும். சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும் என்ற நிலை மாறி எப்போதும் எவ்வகை உணவையும் சாப்பிடலாம் என்ற நிலைக்கு மாறிவிட்டனர். அதன் எதிரொலிதான் இந்தக் காத்திருப்பு.

இன்றைய இளைஞர்கள் நடுத்தர வயதைக் கடக்கும் முன்பாகவே உடற்பருமனால் சகஜமாக நடமாட சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் சிறார்கள்கூட வயதுக்கு மீறிய உடற்பருமனால் பள்ளிப்பையைச் சுமந்து செல்வதையே சுமையாகக் கருதுகின்றனர். பள்ளியில் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறைக்குச் செல்லக்கூட மற்றவர்கள் உதவியை நாட வேண்டியுள்ளது.

இவற்றுக்கெல்லாம் எத்தகைய மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டாலும் நிரந்தரத் தீர்வு தொடர் நடைப்பயிற்சியே என்கிறது மருத்துவ உலகம். நீரிழிவு நோய் மற்றும் உடற்பருமனால் அவதிப்படுவோர்க்கு நடைப்பயிற்சியே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இன்று நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் என்பதே உண்மை.

நோய்களுக்கு ஆட்படாதவர்கள் அன்றாடம் வழக்கமாகக் கொள்ளாமல் நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இத்தகையோர் பள்ளி விடுமுறை நாள்களில் தங்கள் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்வதைக் காண முடிகிறது. இது ஒருவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றுதான் கூற வேண்டும். ஒரு காலகட்டத்தில் சில நோய்கள் நகரங்களில் வசிப்போர்க்கும், வசதிபடைத்தவர்களுக்கும் மட்டுமே வரக்கூடியது என்றும், அவை பணக்கார வியாதிகள் என்றும் கருதப்பட்டது. ஆனால் இன்று எந்த நோய், எந்த வயதினருக்கு வரும் என அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர்.

நடைப்பயிற்சியின் கட்டாயம் அல்லது அவசியத்தைப் புரிந்துகொண்டவர்கள் நடக்கத் தொடங்குகின்றனர். ஏற்கெனவே நடந்து கொண்டிருப்பவர்களுடன் புதிது புதிதாக பலர் நடக்கத் தொடங்குகின்றனர். ஒருவகையில் இது நல்ல மாற்றம் என்றுதான் கூற வேண்டும்.

அன்றாடம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியால் நமது உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. தசைகள் வலுப்பெற்று நுரையீரல் பலமடைகிறது. நரம்பு மண்டலங்கள் விழிப்படைகின்றன. நடக்க நடக்க வியர்ப்பதால் வியர்வைச் சுரப்பிகள் தொடர் இயக்கத்துக்கு உள்ளாகின்றன. தேவையற்ற சதைகள் குறைந்து உடற்தோற்றம் பொலிவு பெறுகிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை வராமல் தடுக்கப்படுவதுடன் ஒருவேளை வந்தாலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். பொதுவாக தினமும் நாற்பது நிமிடங்கள் வரை நடப்பது நல்லது என்கிறார்கள்.

இளைஞர்கள் என்றால் ஐந்து கிலோ மீட்டர் வரையும், முதியவர்கள் நான்கு கிலோ மீட்டர் வரையும் நடக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயினும் நடைப்பயிற்சிக்கு வரைமுறை உண்டே தவிர, வரம்பு கிடையாது. முடிந்தவர்கள் நிறையவும், மற்றவர்கள் முடிந்தவரையும் நடக்கலாம்.

நடப்பது நல்லதே எனும்பட்சத்தில் நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்போதுதான் மீதமிருக்கும் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் பாதுகாக்க முடியும். அதனால் நடப்பது நடக்கட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.