இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

மாநிலக் குழந்தைகள் ஆணையமே வருக!

 இந்தியாவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைகள் சட்டம் இயற்றப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் 1946, டிசம்பரில் சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதியம் ஒன்றை அமைக்கும்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:09 pm IST

 இந்தியாவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைகள் சட்டம் இயற்றப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் 1946, டிசம்பரில் சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதியம் ஒன்றை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தால் உருவாக்கப்பட்ட ஐ.நா. குழந்தைகளுக்கான சர்வதேச அவசர நிதியம் (யுனிசெப்) குழந்தைகளின் நலனுக்காகச் சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. 1959-ம் ஆண்டில் ஐ.நா. சபையால் குழந்தை உரிமைகளுக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது.

 இந்தியாவில் 1949-ம் ஆண்டு ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் கிளை தொடங்கப்பட்டது. 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 24-ம் கோட்பாடு குழந்தைத் தொழிலாளர்கள் முறையை முற்றிலும் தடை செய்தது. நம் அரசியலமைப்புச் சட்டத்தில் 39-ம் கோட்பாட்டில் குழந்தைகள் சுதந்திரமான சூழ்நிலையிலும் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடன் வளர்வதற்கும் அப்படி வாழ்வதற்கான வாய்ப்புகளை அளிப்பதற்கும் குழந்தைகள் உழைப்பு சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கும் வறுமை காரணமாக குழந்தைகள் நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நம் அரசியலமைப்புச் சட்டத்தின் 45-ம் கோட்பாட்டில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்விக்கான உரிமைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 இந்திய அரசு 1974-ம் ஆண்டு குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையை உருவாக்கியது. 1985-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து பிரிக்கப்பட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறையானது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது. இத்துறையானது 2006-ம் ஆண்டில் அமைச்சகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.

 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களானது தனியாக ஒரு சட்டத்தின் மூலம் வகைப்படுத்தப்படவில்லை. பொதுவாக இக்குற்றங்களானது இந்திய தண்டனைச் சட்டத்திலும் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்புச் சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளைக் கொலை செய்தல், கருக்கலைப்பு, சிசுக் கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல், பணத்துக்காகவும் பிச்சையெடுக்க வைப்பதற்காகவும் திருமணத்துக்காகவும் அடிமைகளாகப் பயன்படுத்துவதற்கும் குழந்தைகளிடம் உள்ள சொத்தைக் கைப்பற்றுவதற்கும் குழந்தைகளைக் கடத்துதல், விபசாரத்துக்காகப் பெண் குழந்தைகளை விற்பது - வாங்குவது, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் புரிவது போன்றவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாக இந்திய தண்டனைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக 26,694 குற்றங்கள் நடைபெற்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 ஐ.நா. குழந்தை உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை டிசம்பர் 11, 1992 அன்று இந்தியா ஏற்றுக்கொண்டது. இதன் அடிப்படையில் 2005-ம் ஆண்டு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டமானது இந்தியாவில் இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது அமைக்கப்பட்டது.

 இளையோர் நீதிச் சட்டம், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் போன்ற பல சட்டங்கள் குழந்தைகள் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

 இவ்வாறு நடைமுறையில் உள்ள குழந்தைகள் நலச் சட்டங்களை ஆய்வு செய்வதும் குறைகளைக் களையத் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசைக் கேட்டுக் கொள்வதும் இச்சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதும் குழந்தைகள் ஆணையத்தின் பணிகளில் ஒன்றாகும்.

 குழந்தைகளின் உரிமைகள் மீறப்படும்போதும் குழந்தை நலச் சட்டங்கள் சரிவர அமலாக்கம் செய்யப்படாமல் இருக்கும்போதும் குழந்தைகள் நலன் குறித்த கொள்கைகள், வழிகாட்டுதல்கள் போன்றவை பின்பற்றப்படாமல் போகும்போதும் இதுகுறித்த புகார்களின் மீதோ அல்லது தன்னிச்சையாகவோ, தக்க விசாரணைகளை நடத்த வேண்டியது குழந்தைகள் ஆணையத்தின் முக்கியப் பணியாகும்.

 மாநிலக் குழந்தைகள் ஆணையங்களை அமைக்கும் ஒவ்வொரு மாநில அரசும் குழந்தைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களுக்கான பதவிகளில் அறிவாற்றலும் நீதி நிர்வாகத் திறமையும் உள்ளவர்களை நியமிக்க வேண்டும். ஆணையத்துக்கான பணிகளை விரைவாகச் செய்திட போதுமான பணியாளர்களை மாநில ஆணையங்களில் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும்.

 கே.வீ. ராமராஜ்,

 ஹோசூர்.

 இளையோர் நீதிச் சட்டம், குழந்தை திருமண

 தடுப்புச் சட்டம்,

 குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம்,

 கொத்தடிமை முறை ஒழிப்பு

 சட்டம் போன்ற பல

 சட்டங்கள் குழந்தைகள் நலன்களுக்காக

 உருவாக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.