சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

எங்கு போய் முடியுமோ?

ஆசையே அழிவுக்குக் காரணம்' என்றார் புத்தபிரான். ஆனால், "ஆசைப்படு அதுவே உன் குறிக்கோளை அடைய உதவும் உந்து சக்தி' என இப்போது கூறுகிறார்கள். இதை இப்போதுள்ள சமுதாயத்தினர் "சொத்தின் மீது ஆசை வை' என்று தவறாக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:09 am

ஆசையே அழிவுக்குக் காரணம்' என்றார் புத்தபிரான். ஆனால், "ஆசைப்படு அதுவே உன் குறிக்கோளை அடைய உதவும் உந்து சக்தி' என இப்போது கூறுகிறார்கள். இதை இப்போதுள்ள சமுதாயத்தினர் "சொத்தின் மீது ஆசை வை' என்று தவறாக நினைத்து இயற்கையின் தலைமகளான நிலமகளையே உடமையாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு உற்பத்தியை மேற்கொள்ளவும், உயிரினங்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைகளுக்காகவும் நிலம் தேவை.

இன்று விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அவை வீட்டுமனைகளாகவும், எங்கும் பன்னடுக்கு கட்டடங்களாகவும் மாறி வருகின்றன. தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாய நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் அதிபர்கள், கல்வி அதிபர்களின் கைகளில் உள்ளன. நல்ல விளைச்சல் நிலத்தை அழிப்பதுடன் விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் ரியல் எஸ்டேட் தொழில் கெடுத்து விட்டது. இதைத் தடுக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்.

முன்பெல்லாம் தோட்டப் பயிர்களான வாழை, கத்திரிக்காய், வெண்டைக்காய், பூசணி வகைகள், கீரைகள், பாகற்காய், அவரைக்காய், முருங்கைக்காய் முதலிய காய்கறிகள் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டு மிகக் குறைந்த விலையில் சென்னைக்குக் கிடைத்து வந்தன. ஆனால், அவை உற்பத்தியான இடங்கள் அனைத்தும் இன்று வீட்டுமனைகளாக மாறி விட்டதால் காய்கறிகள் உட்பட நிலம் தொடர்புடைய அனைத்துப் பொருள்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகின்றன.

இதனால், அனைத்து வகையான விளைபொருள்களும் வெளிமாநிலங்களிலிருந்து மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது.

விளைபொருள்களின் விலை உயர்வு என்பது இனி தவிர்க்க முடியாததாகி வருகிறது. அரசு, மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கேட்டாலும் நிலத்தை கொடுக்காத விவசாயிகள், இன்று ரியல் எஸ்டேட் தரகர்கள், கல்வி நிறுவன அதிபர்கள் மற்றும் பன்னாட்டு தொழில் முதலாளிகள் விவசாய நிலத்தை விவசாயிகளே எதிர்பார்க்காத விலைக்கு கேட்கும்போது விற்றுவிடுகின்றனர்.

விவசாய நிலங்கள் நம் வயிறு சம்பந்தப்பட்டது. ஆனால், நிலங்களைக் கபளீகரம் செய்யும் ரியல் எஸ்டேட் வசதி சம்பந்தப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். வேட்டையாடிய காலத்திலிருந்து இப்போதுதான் விவசாய காலத்திற்கு வந்து, பண்பட்ட மனிதர்களாகி வருகிறோம். விவசாய நிலம் சுருங்கினால் நாம் மீண்டும் வேட்டை காலத்திற்கே திரும்ப வேண்டியதுதான்.

தங்களுக்குத் தெரிந்த தொழிலை சொந்த நிலத்தில் செய்யும் விவசாயிகள் நிலத்தையும் விட்டு தொழிலையும் விட்டு வேறு வேலை தேடி அலைய வேண்டிய துர்பாக்கியநிலை இன்று ஏற்பட்டு விட்டது. தங்களது வாழ்வாதாரத்தை நினைத்து பெருமூச்சு விடுகிறார்கள். இதுதான் அவர்கள் தற்போது கண்ட பலன். எதிர்கால பாதிப்பு தங்கள் எதிர்கால சமுதாயத்தினருக்குத்தான் என்பதை அவர்கள் உணராமல் இருக்கிறார்கள். விளைநிலங்கள் அனைத்தும் இன்று பன்னடுக்கு காங்கிரீட் கட்டடங்களாக மாறி வருவதால் நீர் மட்டமும் குறைந்து வளமான பூமி வறண்ட பூமியாகிவிட்டது. நிலத்தின் மீது கொண்ட பேராசையால்தானே போட்டியும், பொறாமையும், வன்முறையும் பெருகி வருகின்றன.

நிலம் மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்தால் மரங்களும், விலங்குகளும் பறவையினங்களும் காப்பாற்றப்படும். மனிதன் வளமாக வாழ வேண்டுமானால் வளமான உணவு தேவை. அந்த வளமான உணவை வழங்குவது நிலம் தான் என்பதை நாம் மறக்கலாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.