சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மூத்தோர் சொல் அமிழ்தம்

ஒரு இளைஞன் மிகுந்த கோபத்துடன் அண்ணல் நபிகள் அவர்களிடம்

News image
Updated On :1 அக்டோபர் 2012, 1:53 pm

ஒரு இளைஞன் மிகுந்த கோபத்துடன் அண்ணல் நபிகள் அவர்களிடம் வந்தான். ""இறைத் தூதர் அவர்களே, இந்தக் கிழவனின் தொல்லைகள் தாங்க முடியவில்லை. ரொம்பவும் படுத்துகிறார்'' என்று படபடப்புடன், உதடுகள் துடிக்க, முகம் சிவக்க முறையிட்டான்.

 ""நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய்?'' என நபிகள் வினவினார்.

 "வேறு யார், என் தந்தைதான். நான் சம்பாதித்து வரும் பொருளை எல்லாம் எடுத்துக் கொள்கிறார். அடிக்கடி பணம் கேட்கிறார். என் சட்டைப்பையில் பணமிருந்தால், என்னிடம் கேட்காமலேயே எடுத்துக் கொள்கிறார்'' என்றான்.

  நபிகள் அவன் தந்தையை அழைத்து வரக் கட்டளையிட்டார். சற்றுநேரத்தில் வயதான முதியவர் நபிகளை வணங்கியபடி வந்து நின்றார். அவரால் சரியாக நடக்க முடியவில்லை, பேச முடியவில்லை, முகத்தில் வரிவரியாய் முதுமையின் வடுக்கள் இருந்தன. பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார். அவரிடம் நபிகள், ""பெரியவரே, உங்களைப் பற்றி உங்கள் மகன் சொன்னதெல்லாம் உண்மைதானா?'' என்று கேட்டார்.

 ""நபிகள் அவர்களே, இவன் என் மகன், இவனை வளர்த்து ஆளாக்க நான்பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல; இவனை என் மார்பிலும், தோளிலும் போட்டு வளர்த்தேன். இவன் பலவீனனாக இருந்தபோது, நான் பலசாலியாக இருந்தேன். இவன் ஒன்றுமில்லாதவனாக இருந்தபோது, நான் பணக்காரனாக இருந்தேன். அப்பொழுதெல்லாம் என் பொருள்களை எல்லாம் எடுத்து இவன் பயன்படுத்தியபோது நான் தடுக்கவில்லை. நான் அதை சந்தோஷமாகவே எடுத்துக் கொண்டேன். அப்போது நான் அவனைக் கண்டிக்கவில்லை. இவன் கேட்காமலேயே நான் இவனுக்குப் பல நன்மைகள் செய்தேன். நான் உணவின்றி, உறக்கமின்றி  இரவு-பகல் என்று பாராமல் உழைத்துக் கஷ்டப்பட்டு கிடைத்த ஊதியத்தில், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி இவனை நான் தேவையான அளவுக்குப் படிக்க வைத்தேன். வேலையும் வாங்கிக் கொடுத்தேன். எனக்கு என்று எதையும் நான் வைத்துக் கொள்ளவில்லை, என் செல்வங்கள் எல்லாம் கரைந்து இன்று நான் பலவீனனாகிவிட்டு அவன் பலசாலியாகி விட்டான். ஆனாலும், இவன் எனக்கு எதையும் தருவதில்லை. நானாக எடுத்துக் கொண்டாலும் தடுக்கிறான். இது நியாயமா நபிகளே?'' என்று கேட்டார் முதியவர்.

 முதியவர் பேசப்பேச அண்ணலாரின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. பிள்ளைகளின் நன்மைக்காகப் பெற்றோர்கள் செய்யும் தியாகங்களை நினைத்துப் பார்க்கும்போது எழுந்த நெகிழ்ச்சி அது. அப்போது நபிகள் அந்த இளைஞனைப் பார்த்து ""நீயும், உன்னுடைய சம்பாத்தியமும், பொருள்கள் அனைத்தும் உன் தந்தைக்குரியவை. இன்று நீ உன் தந்தைக்குச் செய்ததைப்போல, நாளை உன் மகன் உனக்குச் செய்வான். ஆராய்ச்சி வேண்டாம், அனுபவம் பெரியது. பெரியோர்கள் வீட்டில் இருப்பது உனக்குத் துணையாகும். அவர்களைத் தனிமைப்படுத்தக் கூடாது, பாதுகாப்பது உன் கடமை'' என்று அவனிடம் கூறினார். அதைக் கேட்ட இளைஞன் கூனிக் குருகி நபிகளிடம் மன்னிப்பு வேண்டி நின்றான்.  

 பயிருக்கு வேலிபோல, கோட்டைக்கு மதில்போல, ஒரு வீட்டுக்கு முதியவர்கள் பெற்றோர்கள் துணை அவசியம். முதுமை என்பது பட்டறிவும், படிப்பறிவும் இணைந்து கனிந்த அனுபவ அகராதி, அவர்களை உதாசீனப்படுத்தினால் நம்மை நாமே உதாசீனப்படுத்துவது போலாகும். அக்காலச் சமுதாயத்தில் வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்களது வார்த்தை அமிழ்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. அவர்களை அன்புடனும், பண்புடனும் பராமரித்துப் பாதுகாத்து வந்தார்கள்.

 இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 96 மில்லியன். இது மொத்த மக்கள்தொகையில் 8.2 சதவீதமாகும். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட இமாசலப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், ஹரியாணா, ஒடிசா, மகாராஷ்டிரம், ஆந்திரம், கேரளம், கோவா ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியைவிட மூத்த குடிமக்கள் அதிகம் உள்ளனர்.

 பிள்ளைகளின் கவனம் பெற்றோர்களின் மீது இருக்க வேண்டும் என்பதற்காகவும், பெற்றோர், முதியோர் பிள்ளைகளுக்கிடைய ஒரு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு, பெற்றோர்-முதியோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல் வாழ்வுரிமைச் சட்டம் எந்த அளவுக்குப் பயன் அளிப்பதாக உள்ளது என்பது அச்சட்டம் அமலாக்கத்தின் மூலம்தான் தெரியும். ஆனால், தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தங்கள் பிள்ளைகள் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வாசல்படியை ஏறக்கூடாது என்பதற்காக எந்தப் பெற்றோரும் இந்தச் சட்டப்  பயன்பாட்டை அனுமதிப்பது இல்லை.

 இன்று முதியோர்களுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம். சமீபகாலமாக சொத்துகளுக்காக முதியோர்களைக் கொல்வதும், குடும்பப் பிரச்னை காரணமாக முதியோர்கள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய பிள்ளைகளே அவர்களை ஒதுக்கினால், யார்தான் அவர்களைக் காப்பார்கள்? 

 நமக்கு வயது அதிகமாகி விட்டதே என்ற எண்ணத்தினாலேயே பலர் மன நிம்மதியை இழக்கிறார்கள். இனி வாழ்க்கையில் முயற்சி செய்து முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கலக்கமடைந்து விடுகிறார்கள். வயது முதிர்ந்தபோது முதிர்ச்சியின் காரணமாகத் தோன்றும் மனஅமைதியின்மை மிகவும் கடுமையானதாக இருக்கும், தனிமையுணர்ச்சி  வாட்டும். அதற்கு முதுமைப்பருவத்தில் கடவுள் சிந்தனையில் தீவிரம் காட்டுவதும், தெய்வப் பணிகளில் மனதை அதிகமாக ஈடுபடுத்துவதும் மனதுக்குப் புதுத் தெம்பையும், உற்சாகத்தையும் ஊட்டும்.

 பிறருக்குப்  பயன்படுமாறு வாழ்கின்ற காலம் முதுமைப்பருவமே. தியாகம், அன்புணர்ச்சி, தொண்டு, பிறர்நலம் பேணுதல்,  தன்னல மறுப்பு,  ஆன்மிகம் ஆகியவை முதுமையில்தான் எழுச்சி பெறுகிறது. 

இதனால், சாந்தம், அமைதி, தெளிவு, ஒளி, மங்கலம் ஆகியவைகளோடு இணைந்த தெய்வீகப் பொலிவுத் தோற்றம் ஒருவகையான விளக்க முடியாத அழகை முதுமைக்குத் தருகிறது. அதனாலேயே, அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து இருகரம் கூப்பி வணங்குகிறோம். அவர்களது அன்புக் கட்டளைகளை மறுப்பின்றி ஏற்று நிறைவேற்றுகிறோம். இவ்வாறான மாபெரும் சக்தி முதுமைக்கு மட்டுமே உண்டு. 

 ஊர்தோறும் அறிவு சான்ற பெரியோர்கள் இருந்தால் தான் நாட்டில் நல்ல அமைதியாக வாழ்க்கையை ஊர்மக்கள் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கு வழிவகுக்கும். அவர்களது அன்பும், பாசமும், அரவணைப்பும் நமக்கு அவசியமாகும். அவர்களைப்  பாசமுடன் பராமரிப்பது பெற்ற மக்களின் பொறுப்பாகும். நாமும் நாளை முதியோர்கள் ஆவோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  (இன்று உலக முதியோர்கள் தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.