சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மழை ரெடி, மக்கள் ரெடியா?

ஓரு நாட்டின் விவசாய உற்பத்திக்கு நீரே ஆதாரம். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. மழையையே நம்பியுள்ள நம் நாட்டில் தேவையான நீர் வளங்களைப்பெற ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. மழை வளம் பொய்த்தால

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:27 am

ஓரு நாட்டின் விவசாய உற்பத்திக்கு நீரே ஆதாரம். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. மழையையே நம்பியுள்ள நம் நாட்டில் தேவையான நீர் வளங்களைப்பெற ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. மழை வளம் பொய்த்தால் பெரிதும் பாதிக்கப்படுவது அந்நாட்டு மக்களே.

தூய்மையான மழை நீர் பூமியின் சேர்க்கையால் சுவையிலும், குணத்திலும் வேறுபடுகிறது. உணவு தானிய உற்பத்திக்கு உதவும் ஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர் என்ற மூன்று வகை நீர்களையும் உருவாக்குவது மழை தான். பொன் விளையும் பூமி முழுவதும் இன்று வானளாவிய கட்டடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், நிலமும், நீரும் தங்கள் பண்புகளை இழந்து வறட்சியை விதைத்து வருகின்றன. தமிழகத்தில் சராசரி மழையின் அளவு குளிர் காலத்தில் (ஜனவரி பிப்ரவரி) 46.4 மில்லி மீட்டர், கோடைக்காலத்தில் (மார்ச் - மே) 140.9 மில்லி மீட்டர், தென்மேற்குப் பருவமழையின்போது (ஜூன் - செப்டம்பர்) 334 மில்லி மீட்டர், வட கிழக்குப் பருவமழையின்போது (அக்டோபர் - டிசம்பர்) 459 மில்லி மீட்டர் ஆக இருக்கும்.

தமிழகத்தில் கிடைக்கும் மொத்த மழைப் பொழிவின் மூலமாகக் கிடைக்கும் நீரில் 85 சதவீதம் விவசாயத்திற்காகவும், 15 சதவீதம் வீடு மற்றும் தொழிற்சாலைகளின் உபயோகத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. மழை நீருக்கு "வீழ்புனல்' என்ற பெயரும் உண்டு. திருஞானசம்பந்தர் "வேள்வி நற்பயன் வீழ்புனலாவது' என்றும். "வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக' என்றும் குறிப்பிடுவதால் இதனை அறியலாம்.

மழை நீரை வீணாக்காமல், நிலத்துக்குள் அதனை மடைமாற்றிப் புகுத்தி சேமித்து வைப்பதே மழை நீர் சேகரிப்பு. நிலத்தடி நீர் நம் எதிர்காலத்திற்காக இயற்கையின் சேமிப்பு. வடகிழக்குப் பருவமழையை வரவேற்றுப் பாதுகாக்கும் நீர்நிலைகள் அதாவது ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் முதலியவற்றில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தற்போது 41,262 ஏரிகள் உள்ளன. அனைத்து ஏரிகளும் 20% முதல் 52% வரை தூர்ந்து போயுள்ளன. மழையை எதிர்பார்த்து ஏரிகளையும், குளங்களையும், கிணறுகளையும் செப்பனிட்டு உரிய மராமத்துப் பணிகளை மேற்கொண்டால் அதிக மழை நீரைச் சேமித்துவைத்து அக்கம்பக்கத்து கிராம மக்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் காக்கலாம்.

திருக்கோயில்களில் இருக்கும் குளங்கள் உட்பட அனைத்துக் குளங்களும் குப்பைகளைக் கொட்டும் பள்ளமாக மாறிவருவதால் அவைகளை அகற்றி, குறிப்பாக அவைகளின் மீது வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி மழை நீர் தங்க வழி செய்ய வேண்டும்.

ஏரி, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அரசைக் குறை கூறி பயனின்லை. பெரும் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது உறுதி என்பதால், முன்னரே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மழைக் காலத்தில் தேங்கியுள்ள நீரில் தங்கும் ஈக்கள் மற்றும் கொசுக்களின் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைக் காலங்களில் மின்சாரம் மூலம் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும். அதைத் தடுக்க பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். வந்தபின் வருந்துவதை விட, வரும் முன் வராமல் தடுப்பதே சாலச் சிறந்தது. வீடுகளிலும் அடுக்கக வளாகங்களிலும் ஏற்கெனவே அமைத்த மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைச் சீரமைத்து அதிக நீரைத் தக்கவைப்போம். பயன்படுத்தாத கிணறு, தொட்டி ஆகியவற்றையும் சீரமைத்து நீர்ப்பிடிப்பை அதிகப்படுத்துவோம். குளம், குட்டை, ஏரிகளில் நீர் சேரவும் நீரைப் பாதுகாக்கவும் அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நம்மாலான உதவிகளைச் செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.