சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மதியை மழுங்கடிக்கும் மது

இன்று நாட்டில் நடக்கும் பல குற்ற நிகழ்வுகளுக்கு மதுவே மூலக் காரணமாக அமைந்து வருகிறது.

News image
Updated On :8 டிசம்பர் 2013, 10:17 pm

இன்று நாட்டில் நடக்கும் பல குற்ற நிகழ்வுகளுக்கு மதுவே மூலக் காரணமாக அமைந்து வருகிறது. குடிபோதையால் தற்கொலை, கொலை, கொள்ளை, சூறையாடல்கள், தெருச்சண்டைகள், கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் கொலை, சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் அதனால் ஏற்படும் உயிர் பலிகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் ஆகியவைகளுக்கும், சமூகத்தில் நிலவும் அனைத்து குற்றங்களுக்கும், தீமைகளுக்கும் மது பழக்கம் காரணமாகியுள்ளது.

ரோமானிய சாம்ராஜ்யம் அதீதமான மது பழக்கத்தினாலேயே அழிந்து போனதாக வரலாறு தெரிவிக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர் கி.மு.330}ஆம் ஆண்டு பெர்சேபோலிஸ் நகரில் இருந்த அரச மாளிகை தீக்கிரையான போது மது போதையில் இருந்ததாக புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவன் மது நோய்க்கு அடிமையாகி தான் இறந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

குடிப்பவனின் உடலை மது கரையான் போல் அரித்து விடுகிறது. குடல் புண் ஏற்பட்டு, குடல் நாளங்கள் வெடிப்பது, கல்லீரம், இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயல் இழப்பது, வாய், தொண்டை உணவுக் குழாய்களில் புற்று நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற உயிர்கொல்லி நோய்கள் ஏற்படுவது, மூளை நரம்பு மண்டலம் தாக்கப்படவும் மது பழக்கம் முக்கிய காரணமாகிறது. உலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழக்கம் அமைந்துள்ளது. மனித மூளையில் தடை செய்யும் மையத்தை இயங்க விடாமல் மது தடுப்பதால், தான் மிக்க சக்தி வாய்ந்தவன் என்றும், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அளவுக்கு அதிகமாக தற்பெருமையும் மற்றவர்கள் மீது தேவையற்ற எரிச்சலும், கூச்சமின்மையும் ஏற்பட்டு சுற்றுப்புற சூழலுக்கும், சமூகத்திற்கு இடைஞ்சலான காரியங்களை குடிகாரர்கள் செய்ய தயங்குவதில்லை. தொடர்ந்து மனிதன் மதுவைக் குடித்தால், அது அவன் உயிரைக் குடிக்கிறது. மது ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுப்பதோடு அவனது குடும்ப அங்கத்தினர்களின் வாழ்க்கையும் கெடுத்து சமூக சீர்கேட்டிற்கு வழி வகுக்கிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் கோர்சகாப் என்ற மனநோய் ஏற்படும். இதனால், சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமலும், ஜீரண மண்டலம் பாதிப்படைந்தும், வைட்டமின் சி1, தயாமின், நியாசின் முதலிய வைட்டமின்கள் உடலில் குறைந்தும், மூளை நரம்பு அணுக்கள் சிறிது சிறிதாக சிதிலமடைந்தும் போவதால் மனக் குழப்பம் ஏற்படும். இதனால், பயம், பதற்றம், பரபரப்பு, தூக்கமின்மை, தற்கொலை உணர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் 21 வயதிற்குட்பட்டவரிடம் மது அருந்துவது 2 சதவீதமாக இருந்து, 2010ல் 14 சதவீதமாக இருந்து, இப்போது 19 சதவீதமாக அதிகரித்துள்ளது. மது அருந்தும் பழக்கத்தினால் இந்தியாவில் ஆண்டுதோறும் 23 லட்சம் பேர் மரணத்தை தழுவுகின்றனர் என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய பள்ளிக் குழந்தைகளில் 35 சதவீத பேருக்கு தந்தை இல்லை, காரணம் மது பழக்கம் என்றும், கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மது குடிப்பதற்காக செலவிடுகிறார்கள் என்றும் சமீபத்தித்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல் மது எனும் அரக்கனால் பிடுங்கப்பட்டு விடுவதால், குடும்பம் வறுமையிலிருந்து மீள முடியவில்லை.

குடி என்பது வளர்ந்து கொண்டே வரும் ஒரு சமூகத் தீமை, மலேரியா நோய் மனிதனின் உடல்நலத்தை மட்டும் பாதிக்கும், மது உடலோடு ஆன்மாவையும் பாதிக்கும், நீங்கள் கண்ணியமாக வாழ விரும்பினால், குடிப்பழக்கத் தீமையை அடியோடு விட்டொழிக்க வேண்டும் என்றார் மகாத்மா காந்தியடிகள். மது என்னும் மனநோய் குடிமக்களை கூண்டோடு அழிக்கிறது. மனிதனைப் பிடித்து விட்ட, மதுவென்னும் பேயை விரைந்து அடிந்து விரட்ட வேண்டிய நிலையில் இக்கால இளைஞர்கள் உள்ளார்கள்.

மது அருந்துதலை பழக்கம், மனபலவீனம் என்று கருதாமல் அதை ஒரு தொற்று நோயாகக் கருத வேண்டும். இந்த நோய்க்கு மருத்து தேவையில்லை மன மாற்றம் தான் தேவை. மது அருந்துவது ஒரு கெட்ட பழக்கம் மட்டுமல்ல அது ஒரு தீய நோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மதுவை சட்டத்திட்டங்களால் மட்டும் ஒழித்து விட முடியாது. மதுவுக்கு அடிமையாகிவிட்ட தனி மனிதன் சுயக்கட்டுப்பாட்டுடன், தன் நலம், குடும்ப நலம், சமூக நலங்களைக் கருதி மது பழக்கத்தை அவனே விலக்கினாலொழிய மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.