ஆந்திர மாநிலத்தின் தலைநகர் எது என்கிற குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு (திருத்த) மசோதா-2026 நாடாளுன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.
காங்கிரஸ் தவிர்த்து அத்தனைக் கட்சிகளின் ஆதரவுடன் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இனிமேல் மாநிலத்தின் தலைநகர் குறித்த பிரச்னை எழுப்பப்படாது என்று நம்பலாம்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம், முந்தைய டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஆந்திரம், தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. 2014-இல் நிறைவேற்றப்பட்ட ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஒன்றுபட்ட மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் தெலங்கானாவுக்குத் தரப்பட்டது.
ஆந்திரம், தெலங்கானா இரண்டு மாநிலங்களும் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஹைதராபாதைத் தலைநகராக வைத்திருக்க ஆந்திர பிரதேச மறு சீரமைப்புச் சட்டம்-2014 வழிவகை செய்திருந்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள், ஆந்திர மாநிலத்துக்கு தனியான தலைநகர் ஏற்படுத்த வேண்டும் என்று அந்தச் சட்டம் தெரிவித்தது.
2014-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்தது. நிர்வாகத்தைப் புதிதாக உருவாக்க முடிவு செய்து 'அமராவதி' என்கிற தலைநகருக்கு மாற்றப் போவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். புதிய தலைநகருக்கான திட்டமிடல் முடுக்கிவிடப்பட்டு, அதற்குத் தேவையான
நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன. உலகளாவிய அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, புது தில்லி, சண்டீகர் நகரங்களைவிட மேம்பட்ட கட்டமைப்புடன் 'அமராவதி' என்கிற பசுமைத் தலைநகரை உருவாக்கும் முனைப்பில் இறங்கினார் முதல்வர் நாயுடு.
இந்தியாவில் எந்தவொரு முயற்சியும் அரசியல் மனமாச்சரியங்களில் சிக்கிக் கொள்வது புதிதல்ல. அமராவதியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு புறம், அசுர வேகத்தில் புதிய தலைநகருக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன என்றாலும், நிலம் கையகப்படுத்துதல் மட்டுமல்லாமல், அமராவதியை உருவாக்குவதற்கான நிதியுதவியை மத்திய அரசிடம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அதனால் தெலுங்கு தேசம் கட்சிக்கும் மத்திய ஆட்சியில் இருந்த தோழமைக் கட்சியான பாஜகவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து கூட்டணி முறிந்தது.
2019 பொதுத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி தோல்வியைத் தழுவி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அமராவதி அரசியல் தலைநகரம்; விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரம்; கர்னூல் நீதித்துறை தலைநகரம் என்று மூன்று தலைநகரங்கள் ஆந்திரத்தில் செயல்படும் என்று அறிவித்தது புதிதாகப் பொறுப்புக்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.
2022 மார்ச் மாதத்தில், இந்தக் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அமராவதியிலிருந்து தலைநகரம் இன்னொரு நகரத்துக்கு மாற்றுவதை நிராகரித்தது நீதிமன்றம்.
2014-15-இல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை மாற்றும் நிர்வாக அதிகாரம் அரசுக்குக் கிடையாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து, அப்போது ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனு விசாரணையில் இருக்கும்போது, இப்போது மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், பதவிக்கு வந்த
சந்திரபாபு நாயுடு அரசு புதிதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பழைய மனுவைத் திரும்பப் பெற இருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இப்போது நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு, 'அமராவதி' மட்டுமே ஆந்திரத்தின் தலைநகரம் என்பதைத் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதி செய்ய முற்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் 28, 2026 அன்று ஆந்திர சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், மத்திய அரசு முந்தைய ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-இல் திருத்தம் மேற்கொண்டு முந்தைய மூன்று தலைநகர் நிர்வாகத்தை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது.
கடந்த அக்டோபர் 22, 2025 அன்று 'அமராவதி' நிர்மாணத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தும்கூட, சட்டப்படி அதற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இப்போது அனைத்துத் தடையும் நீங்கி விட்டது. உலக வங்கி ரூ.13,000 கோடி நிதியுதவி வழங்கியிருப்பதுடன், எந்தவிதச் சிரமுமம் இல்லாமல் 33,000 ஏக்கர் நிலத்தையும் நாயுடு அரசு கையகப்படுத்திவிட்டது.
ஐபிஎம் க்வாண்டம் பள்ளத்தாக்கு திட்டம் உள்பட பல சர்வதேச நிறுவனங்கள் அமராவதியில் இயங்கக் காத்திருக்கின்றன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்தக் கனவுத் திட்டம், புதிய இந்தியாவின் அடையாளமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினா் அன்னதானம்

நவீன தொழில்நுட்பத்துடன் தேவஸ்தான கோயில்கள் மேம்பாடு: முதல்வா் சந்திரபாபு நாயுடு

2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள குடும்பத்துக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை: மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை அறிவித்த ஆந்திர முதல்வா்

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


