சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

(தார்மிக) பயம் வேண்டும்!

ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் சத்தியத்தை நிலைநாட்டுவது தார்மிக பயம்தான். தனி மனிதன் சத்தியத்தையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்ட பயம் அவசியமாகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2013, 11:00 pm

ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் சத்தியத்தை நிலைநாட்டுவது தார்மிக பயம்தான். தனி மனிதன் சத்தியத்தையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்ட பயம் அவசியமாகிறது. கப்பலுக்கு வழி காட்ட கலங்கரை விளக்கம் உதவுது போல, வாழ்க்கைக்கு வழிகாட்ட பய உணர்ச்சி உதவுகிறது. குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை பயம் என்பது ஒரு நல்ல நண்பனைப் போல கூடவே இருந்து நன்மையையும், தீமையையும், இன்பத்தையும், துன்பத்தையும் பிரித்துக் காட்ட உதவுகிறது.

அது வாழ்க்கையின் ஆதார சுருதியாக பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு நிலைகளில், பல்வேறு நேரங்களில், பல்வேறு வழிகளில், பல்வேறு இடைவெளிகளில் வெவ்வேறாக ஒவ்வொரு மனிதனிடமும் பயணிக்கிறது.

கடவுளிடம் காட்டப்படும் பக்தி உணர்வு அச்சத்தினால் ஏற்பட்டு அருளாக வெளி வருகிறது. நாம் கடவுளுக்கு பயந்து நடந்து கொண்டால், மனிதனுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை என்பது காந்தியடிகளின் கருத்து. மனசாட்சிக்கு பயந்து நடக்கிறார் என்பதாலேயே ஆங்கிலேயர்கள் காந்திஜியைக் கண்டு பயந்தார்கள்.

நம்பிக்கையை உண்டாக்கும் பயம், நம்பிக்கையை சிதைக்கவும் செய்யும் என்பார்கள். அறியாமையின் வெளிப்பாடே பயம் என்பதால் அது பல தவறுகளுக்குக் காரணமாகி, இறுதியில் திறமையை வெளிப்படுத்தவும் உதவுகிறது. தொலைநோக்கு சிந்தனை, விவேகமான செயல்பாடு ஆகியவற்றின் தாயாக பயம் விளங்குகிறது. அன்றாட வாழ்வில் ஒருவருக்கு ஏற்படும் பய உணர்வுதான் அவரைப் பொறுப்புடனும், விழிப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட உதவுகிறது.

சமூகத்தில் குற்றங்கள் பெருகாமல் இருப்பதற்கும் காரணம் மற்றவர்கள் அவரவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு மாறாக நடந்து அவப்பெயரை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற பய உணர்ச்சிதான்.

மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் வேறு பல தொழில்களில் ஈடுபடுபவர்களும் தங்களின் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பய உணர்வினால் திறமையாகச் செயல்பட்டு, தங்கள் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். யாரும் எந்தக் குறையும் கூறக் கூடாது என்ற பய உணர்வுதான் சரியாக நடந்து கொள்வதற்குக் காரணமாக உள்ளது. மற்றவர்கள் எதுவும் சொல்லி வெட்கப்பட வைத்துவிடக் கூடாது என்ற பய உணர்வு, ஒரு செயலைத் திறமையாகச் செய்து முடிக்க உதவுகிறது.

கல்வித் துறையின் உயர் அதிகாரி ஆய்வு செய்வாரே என்ற அச்சம் தலைமையாசிரியருக்கு இருக்கிறது. அதனால் மாணவர்களை அதிக மதிப்பெண்களைப் பெற வைக்க வேண்டும் என்று ஆசிரியர்களைப் பயமுறுத்துகிறார். ஆசிரியர்கள், தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்து, மாணவர்களைப் பயமுறுத்துகிறார்கள், மாணவர்களுக்குத் தேர்வு பயம் தோன்றி, தேர்வில் தோல்வி அடையக் கூடாது என்ற பயத்தில் வெற்றி பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள்.

எனவே, பெற்றவர்களிடம் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கும், முதியோர்களிடம் இளையதலைமுறையினருக்கும் பயம் இருந்தால் யாருக்கும் எந்தவிதமான தீங்கும் வராது. குடும்பச் சூழலில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கும் பய உணர்ச்சி அவசியமாகிறது.

பயத்தின் தாக்கம் என்பது நமக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவரோ பாதிக்கப்பட்டாலோ, நோய் வரும்போதோ, மனதை வருத்தும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டாலோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழில் சம்பந்தமாக பின்னடைவு வந்தாலோ மன ரீரியாகவும், உடல்ரீதியாகவும் செய்யும் திறனில் தொய்வு ஏற்படும்போதோ பயம் ஏற்படுகிறது; அதுவே பிரச்னையைத் தீர்க்கும் கருவியாகவும் அமைந்து நம்மை திருத்திக் கொள்ள உதவுகிறது. பயம் என்பது ஒருவனை ஆக்கவும் வல்லது, அழிக்கவும் வல்லது. பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பய உணர்வே, வெற்றிக்கான பாதையை இட்டுத் தருகிறது. பயமே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் வெற்றிக்கும் முதல் படிக்கல்லாக அமைகிறது.

இன்று எந்தச் செயல் செய்வதிலும் பயம் இல்லாத காரணத்தினாலேயே எங்கும் முறையற்ற செயலும், ஒழுங்கீனங்களும் பெருகி வருகின்றன. அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளிடத்தில் பயம் வேண்டும், அதிகாரிகளிடம் அலுவலர்களுக்கு பயம் இருக்க வேண்டும். அலுவலர்களிடம் மற்ற பணியாளர்களுக்கு பயம் இருக்க வேண்டும். அப்போதுதான் அலுவலகப் பணி சங்கிலித் தொடர்போல் தொய்வில்லாமல் இருக்கும். இதில் ஒரு கண்ணி துண்டித்தாலும் எந்தப் பணியும் சரிவர நடக்காது. இது போன்றே ஒவ்வொரு பணியிலும் தங்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்தால் அப்பணி சிறந்து அனைவரும் பயன் பெறுவர்.

பயத்துடன் செயல்களைச் செய்வதானது ஆரம்பத்தில் தன்னம்பிக்கையைக் குறைப்பதாக இருந்தாலும், தோல்வியைத் தந்தாலும், நம் குறைகளையும், தவறுகளையும் திருத்திக் கொண்டு அடுத்த முறை நம் பணியைச் செவ்வனே செய்ய உதவுகிறது. அதாவது பயம் என்பது நம் மன உறுதியைச் சோதிப்பதற்காகவே ஏற்படுகிறது. தவறுகள் குறித்து வருந்தி சுயசோதனை செய்து கொண்டு இடுக்கண்களை எதிர்கொள்ள உதவுகிறது.

பயம் கூடவே பணிவும் இருப்பதால் மற்றவர்கள் நம் மீது கொண்டுள்ள நல்ல எண்ணமும் அதிகமாகி நம் மனதைப் புண்படுத்தாமல் இரக்கம் காட்டவும் உதவுகிறது. பயம் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுவதைக் குறைத்து பொறுமையயும் போதித்து, நம்மை திட்டுபவர்கள் அல்லது துன்புறுத்துபவர்கள் மீது நம் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தாமல், கோபத்தைக் கட்டுப்படுத்தி பகையை மறக்கச் செய்து மனவலிமையையும் தருகிறது.

சமுதாயம் எப்படிப் போனாலும், அதன் தாக்குதலைக் கடந்து தம் நல்வாழ்வுக்கு வேண்டிய அறவழியை வகுத்துக் கொண்டு தனி மனிதன் நேர்மையுடன் வாழ வழிகாட்டுவது பயமே. "அச்சமே கீழ்களது ஆசாரம்' என்றாலும் "அஞ்சுவது அஞ்சாமை பேதமை' என்பதை மறக்கக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.