சமீபத்தில் இந்திய தொழில்நுட்ப மையங்களில் (ஐ.ஐ.டி.) நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் சம்பளம், சலுகைகள் என ஆசை வார்த் தை காட்டி கடை விரித்தன. ஆனால், அதில் கலந்து கொண்டவர்களில் மூன்று மாணவர்களும், ஒரு மாணவியும் அவர்களின் ஆசை வார்த்தைகளைப் புறக்கணித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் நம்பிக்கை ஊட்டுவனவாய் உள்ளன. தங்களுடைய கல்வித் தகுதிக்கும், திறமைக்கும் இந்த வேலை ஏற்றதாக இல்லை என்று கூறியதோடு, தங்களது தகுதிக்கும், திறமைக்கும் மிகவும் குறைவான சம்பளத்தைத் தந்தாலும், தங்களது திறமையை, தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் நிறுவனத்தில் பணிபுரியவே ஆசைப்படுகிறோம் என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக சம்பளம், சலுகைகள் இவற்றிற்கு அடிபணிந்து போகாமல் தங்களது தகுதியையும், சுய சிந்தனையையும் அறிவையும், திறமையையும் வளர்த்தெடுக்கத் துணை நிற்கும் நிறுவனங்களில் பணியாற்ற முன்வந்துள்ளது இளைய சமுதாயத்தின் இணையில்லா எழுச்சியைக் காட்டுகிறது. இந்த எழுச்சி இளையோரிடம் பரவலாகும் எனில், உலகத் தரத்திற்கு நிகரான இந்தியாவின் வளர்ச்சி என்பது வெகு தொலைவில் இல்லை.