தேடித்தேடி வாசிப்போம்
உலக அளவில் ஓர் ஆண்டில் ஒருவர் 2,000 பக்கங்களைப் படிக்கிறார். ஆனால், நம் நாட்டிலோ 30 பக்கங்களை மட்டுமே படிக்கும் பழக்கம் உள்ளது.


உலக அளவில் ஓர் ஆண்டில் ஒருவர் 2,000 பக்கங்களைப் படிக்கிறார். ஆனால், நம் நாட்டிலோ 30 பக்கங்களை மட்டுமே படிக்கும் பழக்கம் உள்ளது. வாசிப்புப் பழக்கம் பெருகப் பெருக அறிவு பெருகும். உள்ளம் விசாலம் கொள்ளும். குற்றங்கள் குறையும். அதனால்தான், புத்தகங்களின் குவி மையமாகத் திகழும் ஒரு நூல்
நிலையக் கதவு திறக்கப்படும்பொழுது, ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது என்றார் சுவாமி விவேகானந்தர். நூலகத்தை மனித மாளிகையின் சிந்தனைச் சாளரம் என்பர். புத்தகங்களே புரட்சிக்கான வெடி
மருந்துக் கிடங்குகள். தூக்குக் கயிறு அழைத்த கடைசிப் பொழுதிலும் கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டிருந்தவன் பகத் சிங். அலை கடலின் சூறாவளியில் சிக்கி ஆவி துறக்கும் நிலையிலும் கீட்சின் கவிதைப் புத்தகத்தைச் சட்டைப் பையில் வைத்திருந்தான் ஷெல்லி. ரஸ்கினின் "கடையனுக்கும் கடைத்தேற்றம்' நூல் காந்திஜியின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது. நெப்போலியன் வாட்டர்லூ யுத்தத்தில்கூட மாக்கியவல்லியின் "பிரின்ஸ்' நூலைப் பிரியவில்லை. ஸ்டோவ்வின் "அங்கிள் டாம்ஸ் கேபின்' நூல் ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது. புத்தக வாசிப்பு அழியும் உலகில் அழியாத மனிதர்களை உருவாக்கும்.
வாசிப்பை எங்ஙனம் நிகழ்த்தல் வேண்டும் என்பதைப் பற்றி பேகன், "சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும். சில புத்தகங்களை அப்படியே விழுங்கிவிட வேண்டும். சில புத்தகங்களை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்' என்பார். வாசிப்பு ஒரு மனிதனை நெறிப்படுத்தவும், முறைப்படுத்தவும் செய்யும். ஒரு புத்தகத்தை வாசிப்பது ஒரு புதிய நண்பனைப் பெறுவது போன்ற இனிய அனுபவம் கொண்டது. அதே புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசிப்பது நெடுநாள் பிரிந்த நெருங்கிய நண்பனைத் திரும்பவும் சந்திப்பது போன்ற சுகமான அனுபவமாகும். பாரோ மன்னன் தான் வாசித்த புத்தகங்களின் இருப்பிடத்தை "மன மருத்துவ நிலையம்' என்றான்.
வாசிப்பின் தேவை உணரப்பட்டதின் விளைவால் அதை மேம்பாடு அடையச் செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய சமூகம் தலைப்பட்டது. அதன் ஒரு வழித்தடம் புத்தகக் கண்காட்சிகள். மற்றொரு வழித்தடம் நூலக உருவாக்கங்கள். பிரிதொரு வழித்தடம் நூல் அறிமுகக் கூட்டங்கள் மற்றும் அரசு நூலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாசகர் வட்டங்கள். இன்னொரு வழித்தடம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் வாசகர் வட்டங்கள்.
மாவட்ட, மாநகரத் தலைநகரங்கள் தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது பெருகி வருகின்றன. மின் புத்தகங்கள் வெளியிடும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் 13 நாள்கள் புத்தகக் கண்காட்சியில், 13 லட்சம் பேர் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 13 கோடி ரூபாய்க்கு மேலாகப் புத்தகங்கள் விற்கப்பட்டிருக்கின்றன.
ஆங்கிலப் புத்தகங்களுக்கு நிகராக, தரமான தமிழ்ப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. தமிழ் வாசகர்களுக்குத் தரமான வாசிப்புத் தளம் பெருகப் பெருக கருத்துப் பரவலுக்கான இடமும் அதிதீவிரம் அடையும். ஆனால் படைப்புக்களில் பயன்படுத்தப்படும் மொழி இறுக்கம் வாசிப்பிற்கு இன்று தடையாய் உள்ளது என்ற குற்றச்சாட்டு உண்டு. ஒரு காலத்தில் கவிதையை யாப்பு முழுமையாக ஆக்கிரமித்திருந்ததால் அதை சரிவர அறிந்தவர்கள் மட்டுமே அதனுள் புக முடிந்தது. அனைவருக்குமான கவிதையாக்கம் உருப்பெற வேண்டுமென்ற சிந்தனையின் விளைவே புதுக்கவிதை என்னும் புது முயற்சிக்கு வித்திட்டது. இதனால் கவிதை எழுதுவோரின், வாசிப்போரின் எண்ணிக்கையும் பெருகியது. காலப்போக்கில் மேற்கத்திய தாக்கத்தால் செறிவு, அறிவு ஜீவித் தனம் என்ற காரணங்கள் கற்பிக்கப்பட்டு மொழி இறுக்கத்துடன் கவிதைகள் எழுதப்பட்டதும் நெருங்கி வந்தவர்கள் விலகி ஓடத் தொடங்கினர். எனவே எல்லோருக்குமான மொழியில் எழுதப்படுவதின் மூலம் வாசிப்போரின் எண்ணிக்கைப் பெருக வாய்ப்புண்டு.
ஒரு காலகட்டத்தில் வாடகை நூலகங்கள் பல பெருநகரங்களில் இருந்தன. காலப்போக்கில் அவை காணாமல் போயின. புதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வாங்குவது கடந்த பல ஆண்டுகளாக இல்லாமல் ஆனதால் பொது நூலகத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் குறைந்து போனது. அலைபேசி, மெமரி கார்டு, இணையம், முகநூல், மின் நூலகம் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் வருகையும், தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பும் புத்தக வாசிப்பை விழுங்கிவிட்டதாகக் கருதலாம்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிகழ்வுகளில் எத்தனை புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன என்பதைக் கணக்கெடுத்தால் மிக மிகக் குறைவே. மாணவர்களும் பாடத்திட்டத்திற்கு அப்பால் எதுவும் படிப்பதில்லை. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புத்தக வாசிப்பிற்கென்று துணைப் பாடம் என்றொரு பகுதி இருந்தது. இப்பொழுது அது இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் புத்தக வாசிப்பிற்கென்று பள்ளி, கல்லூரிகளில் நேரம் ஒதுக்குவதில்லை. ஒதுக்கப்பட்டாலும் பிற துறைப் பாடங்களே அந் நேரத்தில் நடத்தப்படுகின்றன. கல்வியில் மனப்பாடமே முதன்மையிடம் வகிக்கிறது. படித்தல், புரிதலுக்கான இடம் அங்கில்லை. பாடப் புத்தகங்களை வாசிக்காமலேயே வழிகாட்டி நூல்களின் துணையோடு அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும் என்ற இழிநிலை மாணவர் மனதில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாசகர்களுக்குத் தரமான வாசிப்புத் தளம் இன்னும் உருவாகவில்லை. நடக்க நடக்கத்தான் தூரம் குறையும். படிக்கப் படிக்கத்தான் பார்வை விரிவடையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...