ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை பல முறை சூடு பட்டும் நம் மக்கள் உணர மறுப்பதைதான் கொல்கத்தாவில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் 30 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியும், அங்குள்ள அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதும் பல அதிர்வலைகளை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசு அந்தத் தனியார் நிநி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தர 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தாலும், மக்களின் வரிப் பணத்தை இம்மாதிரியான ஊழல்களுக்கு தானம் செய்ய அரசுக்கு உரிமையில்லை என அங்கு எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன.
தனியார் நிதி நிறுவனங்களின் கவர்ச்சியான விளம்பரங்களும், அதிகப்படியான வட்டி விகிதங்களும் அதன் தொடர்ச்சியாக மோசடிகளும் இன்று ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாததாகி விட்டன. இம்மாதிரியான மோசடி நிகழ்வுகள் நம் நாட்டில் முதன்முறையல்ல, பல முறை நடந்தாலும் மக்களின் அதிக பணத்தாசை அவர்களின் கண்களை மறைத்து எளிதில் பணக்காரர்களாகி விடத் துடிக்கிறார்கள். தனியார் நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வட்டி தருவதாக வாக்கு அளிக்கும் போது அதன் பின்னணி அறியாத அப்பாவி பொது மக்கள், எதிர்காலத்தில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகும் என்ற கனவில் தாங்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தையும் இழந்து காவல் நிலையம், நீதிமன்றம் என அலைவது என்பது இன்று வாடிக்கையாகி விட்டது.
நிதி நிறுவன மோசடி என்பது அதிக வட்டி கிடைக்கும் என்ற நப்பாசையினாலும், தேன் தடவிய நஞ்சுருண்டைகள் போன்ற இலவச இணைப்பாக கவர்ச்சிகரமான போலி திட்டங்களினாலும், அம்மாதிரியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவது என்பது சாதாரண பிரச்னையாகி விட்டது. மரங்களையும், பறவைகளையும் காட்டி முதலீடு செய்ய தூண்டி பணத்தை கபளீகரம் செய்வதும், பின்னர் நாட்டை விட்டு பறப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஈமு கோழி முதலீடு தமிழகத்தையே உலுக்கியது.
ஆசை வேண்டும். ஆனால், பேராசைதான் கூடாது. பல நேரங்களில் அரசும் போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என எச்சரித்தும் அப்பாவி பொது மக்கள் இம்மாதிரியான தனியார் நிதி நிறுவனங்களில், தங்களின் அறியாமையினால் தனியார் நிதி நிறுவனங்களின் அதிகப்படியான வட்டி விகிதம் என்ற வசீகர மாயஜாலங்களில் மயங்கி, பின்னர் தேனில் விழுந்த ஈயாக, குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுப் பெற்றவர்கள் மாதம் அதிக வட்டி சம்பளம் போல் கிடைக்கும் என்ற ஆதங்கத்தில், தங்களின் பணம் கிணற்றில் போட்ட கல்லாக மாறி விட்ட நிலையில் தங்களையும் மாய்த்துக் கொள்கிறார்கள்.
பல முதலீட்டாளர்களின் முதலீடு ஒரே சமயத்தில் முதிர்ச்சியடையும் போது அந்தத் தொகையைக் கொடுக்க இயலாத நிறுவனம், ஒரு முதலீட்டாளரிடம் மறுக்கும் போது அது பல முதலீட்டாளர்களையும் கவலையடைய செய்து, அனைவரும் ஒரே சமயத்தில் அந்த நிறுவனத்தை முற்றுகையிடும் போதுதான் அந்த நிறுவனத்தின் சாயம் வெளுக்கிறது. மேலும், அரசும் இத்தகைய தனியார் நிதி நிறுவனங்களின் மீது எப்போதும் ஒரு கண் வைத்து கண்காணிக்க வேண்டும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதை உணர்ந்து, அத்தகைய நிதி நிறுவனங்களின் எதிர்கால சேமிப்பை உறுதி செய்த பின்னரே, அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கும் நிலையில் உள்ளதா, அந்த அளவுக்கு அந்த நிதி நிறுவனம் போதுமான வங்கி இருப்பு வைத்துள்ளதா அல்லது அந்த நிறுவனத்தின் சொத்து கணக்கு தணிக்கை செய்யப்பட்டுள்ளதா போன்ற அடிப்படை ஆதாரங்களை ஆராய்ந்த பின்னரே அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும், ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தன வாரியத்திடம் தனியார் நிதி நிறுவனங்கள் அனுமதி பெற்ற பின்னரே தனியார் சீட்டு நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும். கருப்புப் பணத்தை ஒழிக்க விரும்பும் எந்த அரசும் தனியார் நிதி நிறுவனங்களை ஆதரிக்காது. இல்லையென்றால் இம்மாதிரியான மோசடிகளுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். இம்மாதிரி பல கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் தான் இயங்க முடியும் என்பதற்கு கொல்கத்தாவில் இயங்கிய தனியார் நிதி நிறுவனம் ஓர் எடுத்துக்காட்டு.
முதலீடு செய்யும் தொகைக்கு, விண்ணை முட்டும் வட்டி விகிதம் என்றால், அங்கு அபாயமும் அதிகம் இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும். தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு அதிக வட்டி கிடைத்து பணம் இரட்டிப்பானால் சந்தோஷமடைந்து தங்களின் அதிர்ஷ்டத்தை எண்ணி புலங்காகிதம் அடைந்து, அந்த நிறுவனத்தியில் மற்றவர்களையும் முதலீடு செய்ய தூண்டுவதும், பின்னர் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றும்போது கதறுவதும் அரசை குறை கூறுவதும் தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பதற்கு ஒப்பாகும். திவால் ஆகிவிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து எவ்வாறு பணத்தைத் திரும்ப பெற இயலும் என்பதை முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நிதி நிறுவனத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்து பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி தரலாம் என்பது சட்டப்படியான சாத்தியக் கூறாக அமைவதில்லை. மேலும், அந்த நிறுவனத்தின் மற்ற முதலீடுகளை முடக்கச் செய்து, அதன் சொத்துகளை விற்று பணத்தை திருப்பி தரப்படும் என்பதும் பல வருட காலமாகும்.
இப்போதெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும் பொதுத் துறை வங்கிகளும், தபால் நிலையங்களும், அரசு நிறுவனங்களின் சார்பில் இயங்கும் நிதி நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் அதிக வட்டி தருவதில்லை என்றாலும், அங்கு நமது முதலீட்டிற்கு பங்கம் ஏதும் விளையாமல் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு கணிசமான வட்டியும் கிடைக்கும். அங்கு முதலீடு செய்வது என்பது நமது நாட்டின் வளர்ச்சிக்கு நாம் ஒத்துழைப்பு தருவது போலாகும். அவ்வாறு நாம் முதலீடு செய்யும் பணமே அரசின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடாக அமைகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு ஏற்புடைய வட்டி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தால் இம்மாதிரியான மோசடிகள் அரங்கேறாது. போராசை பெருநஷ்டமாகும் என்பதை மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுபவர்கள் என்று தான் உணர்வார்களோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா் தொகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் உறுதி

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது
ஈரோடு கிழக்கு, கோபி தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


