காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகர்ப்புற நரகம்

உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மனிதனின் வாழ்வியல் புலத்தில் அன்றாட அத்தியாவசியமான தேவைகளாகக் கருதப்படுகின்றன. இவற்றுக்கான தேடுதலில் அவன் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறான்.

News image
Updated On :11 ஜனவரி 2015, 9:49 pm

முனைவர் எஸ். ஸ்ரீகுமார்

உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மனிதனின் வாழ்வியல் புலத்தில் அன்றாட அத்தியாவசியமான தேவைகளாகக் கருதப்படுகின்றன. இவற்றுக்கான தேடுதலில் அவன் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறான். இதற்காக, தொடர்ந்து இடப் பெயர்வும் செய்தவண்ணம் உள்ளான். பொதுவாக, மாநகரங்கள், நகரங்கள் நோக்கியே இந்த இடப் பெயர்வுகள் நடக்கின்றன. வேலை நிமித்தமாக, குடும்பம் குடும்பமாக, ஆணும், பெண்ணுமாக, தனியாக கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். பெரு நிறுவனத்தார் இதற்கென்று தரகர்களை நியமனம் செய்துள்ளனர்.

முன்னர் தோட்டத் தொழில் செய்ய தொழிலாளர்களை அழைத்துச் செல்ல கங்காணிகள் இருந்ததுபோல. தரகர்களின் ஆசை வார்த்தையிலும், சொற்ப பண உதவியிலும் மயங்கி கொத்தடிமைகள் போல இவர்கள் பணியிடம் நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு கட்டடப் பணியாளர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, ஆட்டோ ரிக்ஷா தொழிலாளியாக, தெரு சுத்தம் செய்பவர்களாக, மேம்பாலம் கட்டும் கையாள்களாக பணியமர்த்தப்படுகின்றனர். சில நிறுவனங்கள் வீடு என்ற பெயரில் குடிசைகள் அமைத்துக் கொடுக்கும்.

பலர் கால்வாய் கரையோரம், சாலை ஓரம், பாலங்களின் அடியில், அரசு காலி மனைகளில் தாங்களே குடிசைகள் அமைத்து வாழிடங்களாக்கிக் கொள்வர். இந்தக் குடிசைகள் போக்குவரத்து சாலை வசதிகளோ, கழிவுநீர் ஓடைகளோ, கழிப்பிடங்களோ எதுவுமின்றி சுகாதாரமற்றே காணப்படும். கோழி, பன்றி, ஆடு, மாடுகளோடு இவனும் வாழ்ந்து வருவான். அழைத்து வரப்பட்ட பணி முடிவடைந்தாலும் அப்பகுதி அவனுக்குப் பழக்கப்பட்டுப் போனதால் அங்கே நிரந்தரமாகத் தங்கவே ஆசைப்படுகிறான். தேர்தல் காலங்களில் வாக்கு வங்கிகளாக இச்சேரிவாழ் மக்கள் பெரிதும் பயன்படுத்தப்படுவதால் அரசியல்வாதிகளின் கவனம் முழுக்க இவர்கள் மீதே குவியும். இங்கு வசிப்போருக்குச் சொந்தமாக நிலம் இல்லாமல் இருந்தாலும் அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மின்சார இணைப்புகளையும், குடிநீர் இணைப்புகளையும் அமைத்துக் கொடுக்கின்றனர். பராமரிப்பின்மையால் பல நேரங்களில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு தீ விபத்தால் உயிரிழப்பும், உடைமையிழப்பும் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

குடிநீர்க் குழாய்களும், சாக்கடையும் ஒரே இடத்தில் இருப்பதால் சுகாதாரமற்ற குடிநீருக்கே பழகிப் போயினர். குளிப்பதும், துவைப்பதும், கழிப்பதும் பொது வெளியானதால் சுகாதாரமும், சுற்றுச்சூழலும் மாசுபட்டு கொள்ளை நோய்களுக்கும் ஆளாகிப் போகின்றனர். எந்த வேலைக்காக அழைத்து வரப்பட்டார்களோ அந்த வேலை முடிவுற்றதும் நிராதரவாகிப் போகின்றனர். வாழ்க்கையை நகர்த்த சிலர் சமூக விரோதிகளின் கைப்பாவைகளாகின்றனர்.

சிலர் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்துவதிலும், விற்பதிலும் ஈடுபடுகின்றனர். பொதுக் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க பயன்படுத்தப்படுகின்றனர். ஆண், பெண் இருபாலரிடத்தும் போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் கோலோச்சிய வண்ணம் உள்ளன. கல்வி அவர்களுக்கு எட்டாக்கனி. பொது மருத்துவ வசதிக்கான எந்த ஏற்பாடுகளும் அங்கில்லை.

அந்த இடத்திற்கு எத்தனை பேர் வந்தனர், போயினர் என்பதற்கு எந்தப் புள்ளிவிபரக் கணக்குகளும் இல்லை. இப்படிப்பட்ட வாழிடங்களைக் கொண்டோருக்கு உணவும், உடையும் சொற்ப அளவில் கிடைத்தாலும், நிரந்தர இருப்பிட வசதியில்லை. சுத்தமான தெருக்களோ, தேவையான தெருவிளக்குகளோ, சரியான சாலை வசதிகளோ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரோ, குழந்தைகள் விளையாடுவதற்கான பொதுவிடங்களோ, மருத்துவ மையங்களோ இப்படி வாழ்வாதாரத்திற்கான தேவைகள் எதுவுமே இல்லை. கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தும் போதிய தண்ணீர் வசதியின்மையால் மூடியே கிடக்கின்றன. இப்படிப்பட்ட வறிய, சுகாதாரமற்ற வாழ்வை மேற்கொண்டு வரும் மக்கள் வாழும் இடங்களைத்தான் நகமங எனப் பெயரிட்டழைக்கின்றனர். அங்கு வாழ்வோர் அனைவரும் ஏழைகளுமல்ல.

தமிழகம் முழுக்க நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள நகமங-களின் எண்ணிக்கையும், அதில் வசிப்போரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட வேண்டும். கழிப்பறை வசதி கொண்ட வீடுகள், சுகாதாரம் நிறைந்த தெருக்கள், சாலை இணைப்புகள், சுத்தமான குடிநீர் வசதிகள், மூடப்பட்ட சாக்கடைகள், பொது சுகாதார மையங்கள், விளையாட்டுத் திடல்கள், சிறுவர் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கல்வி பயில்வதற்கான வசதிகள் வழங்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்குமான வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்கள் குற்றப் பின்னணியினராக மாறுவதினின்றும் தடுக்க முடியும். வாழ்வை வளமாக்குவதற்கான விழிப்புணர்வு மையங்களையும், ஆலோசனை மையங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ உதவி மிக மிக அவசியம். இவ் வசிப்பிடங்களின் அருகில் மதுபானக் கடைகள் திறப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.