தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மெய்யாலுமா?

சுக்கிலபட்சம் என்கிற வடமொழி வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு இலங்கேஸ்வரனின் பெயர் கொண்ட அதிகார மையத்திற்கு நெருங்கிய வட்டாரத்திடமிருந்து தகவல் வந்ததும் மகிழ்ச்ச

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:16 pm

மீசை முனுசாமி

சுக்கிலபட்சம் என்கிற வடமொழி வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு இலங்கேஸ்வரனின் பெயர் கொண்ட அதிகார மையத்திற்கு நெருங்கிய வட்டாரத்திடமிருந்து தகவல் வந்ததும் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார். விடிந்தால் மந்திரி என்கிற சந்தோஷத்தில் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாகப் பிரகாசித்தது. பட்டியல் வந்தபோது தனது மந்திரிக் கனவு தகர்ந்துவிட்ட சோகத்தில், குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியாவது கிடைக்காதா என்று ஏங்கத் தொடங்கி விட்டாராமே, மெய்யாலுமா?

********

இந்த ஆட்சியில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கு எப்போது கஷ்டகாலம் பிறக்கும் என்று சொல்லவே முடியவில்லை என்று அங்கலாய்க்கிறார்கள் உயர் அதிகாரிகள். கடந்த ஆட்சியில் விவேகமாகச் செயல்பட்டு அதிகார மையத்தின் செல்லப்பிள்ளையாக இருந்தவர், இந்த ஆட்சியில் எப்படி திடீரென்று ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக மாறினார் என்று கேட்டால், மனித உரிமை எவ்வளவு முக்கியமோ அதேபோல ஜாதி உணர்வும் முக்கியம்தானே என்கிறார்கள். எல்லாம் தொப்புள் கேபிள் உறவால் கிடைக்கும் மகத்துவம் என்கிறார்களே, மெய்யாலுமா?

********

சகோதரர்களின் சாமர்த்தியத்தைப் பற்றி இந்தியத் தலைநகரில் பிரஸ்தாபிக்காதவர்களே கிடையாது. பிரஸ் கிளப்பில் போய் உட்கார்ந்தால், பீரும் கையுமாக உட்கார்ந்து கிசுகிசுக்களையும், வதந்திகளையும் பரிமாறிக்கொள்ளும் ஜீன்ஸ் பேண்டும், டி-ஷர்ட்டுமாகக் காட்சியளிக்கும் யுவயுவதியர், சகோதரர்கள் பற்றித் தாங்கள் எந்தச் செய்தி கொடுத்தாலும் காட்சி ஊடகங்களில் அவை தணிக்கை செய்யப்பட்டு விடுகின்றன என்று கதைகதையாகச் சொல்கிறார்கள். மத்திய புலன்விசாரணைத் துறையே சகோதரர்களின் சார்பாகவும், எதிராகவும் இரண்டாகப் பிளந்து கிடப்பதாக ஒரு பெண் நிருபர் நமது தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார். இன்னொரு ஆண் நிருபர், இந்த வழக்கில் சகோதரர்களுக்கு எதிராக இருந்த இரண்டு உயர் அதிகாரிகள் விருப்ப ஓய்வுபெற்று " செட்டில்' ஆனதன் பின்னணியில் சகோதரர்களின் தயவும், நிதியும் இருப்பதாகக் கூறுகிறார்களே, மெய்யாலுமா?

********

அதிகாரவர்க்கத்தைப் பொறுத்தவரை ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் அவர்களுக்குக் கவலையில்லை. ஆட்சிக்கு வந்ததும் அத்தனை செயலாளர்களையும் அழைத்து முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்கள் பற்றிய விவரங்களை எல்லாம் தரும்படி முதல்வர் உத்தரவிட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், சிறுதுரும்புகூட அசையவில்லையே ஏன் என்று கேட்டால், பதிலில்லை. முந்தைய ஆட்சியில் அமைச்சர்களைவிட அதிகமாகச் சம்பாதித்ததே அதிகாரிகள்தானாம். எந்த ஊழலைப் பற்றி விசாரித்தாலும் ஏதாவது சில அதிகாரிகளுக்கும் அதில் பங்கு இருப்பதாகவும் அதனால் யாரும் யாரையும் காட்டிக்கொடுக்க விரும்பாததால்தான் எந்த முறைகேடுகளும் வெளிவருவதில்லையாமே, மெய்யாலுமா?

********

 

ஆய "கலை' அறுபத்தி நான்கையும் பிரயோகித்துத் தான் தென் சென்னையின் அமைச்சராகிவிட வேண்டும் என்று முயற்சி எடுத்தவரின் கனவுகள் விதிமுறைமீறல் கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட "சீல்'போல முடக்கப்பட்டுவிட்ட நிலையில் வளைய வருகிறாராம். தேர்தலில் ரௌடிபோலச் செயல்பட்டார் என்றும், கட்டடங்களுக்குச் சீல் வைக்காமல் பாதுகாக்க ஓர் அமைச்சருக்குப் பணம் வாங்கிக் கொடுத்தார் என்றும் அம்மா ஆவேசப்பட இவர் திகைத்துப்போய் நின்றாராமே, மெய்யாலுமா?

********

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு நிகரான பதவி தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் பதவி. இதற்கு விண்ணப்பிக்கக் கடந்த செப்டம்பர் மாதமே காதும் காதும் வைத்தாற்போலக் கடைசித் தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு முக்கியமான நியமனத்துக்கு ஏன் வெளிப்படையான அறிவிப்போ, தேர்வோ இல்லை என்று வருத்தப்படுகிறார்கள் தகுதியானவர்கள். விண்ணப்பம் பெறப்பட்டும், நியமனம் தாமதப்படுவதற்குக் காரணம் பேரம் பேசப்படுவதால்தான் என்கிறார்களே, மெய்யாலுமா?

********

அறிவு வாழும் ஆலயமாகத் திகழ்ந்த இடம் இப்போது உள்கட்சி ஜனநாயகம் இல்லாமல் இருக்கிறது என்று தலைநகரிலிருந்து ஒருவர் பொருமினால், தென் மாவட்டத்தில் இருந்து இன்னொரு உடன்பிறப்பு, "தலைமை செயலிழந்து முடங்கிவிட்டது' என்று சலித்துக்கொள்கிறது. தாமிரபரணியின் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதுபோலத் தலைமைக்குக் குடும்பக் கவலைகள் பெருகிவிட்ட நிலையில் தனது ராஜிநாமாவைப் பற்றிச் சிந்திக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது என்று மாலை நேரத்தில் நண்பர்களுடன் புலம்புகிறார் அவர். பதவி விலகுகிறேன் என்று மாநகரப் பொறுப்பைத் தூக்கி எறிய முற்பட்டால், "வேண்டாம் ராஜா' என்று அண்ணனிடமிருந்து தம்பிக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தார். கிணற்றில் போட்ட கல்லாகி விட்டதே தனது ராஜிநாமா விவகாரம் என்று தன்னையே நொந்து கொள்கிறார் அவர், மெய்யாலுமா?

********

வடசென்னையில் புகழ்பெற்ற மருத்துவமனையின் பெயரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டிருக்கும் அந்த வசந்தமான மாநிலங்களவை உறுப்பினர், செய்வதறியாது தவிக்கிறாராம். அவர்மீது நீதிமன்றத்தில், போலி ஆவணங்களை வைத்து ஜாமீன் வாங்கியதில் தொடங்கிப் பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல்துறையில் பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆளும்கட்சியின் செல்வாக்கில் அவர்மீது சுமத்தப்பட்ட புகார்கள் அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு, மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். புகார்களை தூசு தட்டுவோம் என்று மிரட்டியே, காவல்துறையில் இவரைக் கரும்புச் சக்கையாகப் பிழிந்து எடுக்கிறார்களாம். முதல்வரின் கவனத்துக்கு விஷயம் போனால், என்னவாகுமோ என்கிற பயத்தில் நடமாடுகிறாராமே, மெய்யாலுமா?

********

இந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் புணே அருகில் நியமிக்க இருக்கும் ஒரு நவீன நகரம் "லாவசா'. இதற்கு அனுமதி அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கான அனுமதியைத் தர மறுக்கிறது. ஆனால், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மத்திய உணவு அமைச்சர் சரத் பவாரின் பின்துணையுடன் உருவாகி வரும் நகரம் என்பதால், அரசியல் வெப்பத்தை இந்தப் பிரச்னை அதிகரித்திருக்கிறது. இதற்கு அனுமதி மறுத்ததால்தான் ஓர் அமைச்சர் அகற்றப்பட்டார் என்றுகூடக் கூறப்பட்டது. ஜெயராமனுக்கு ஜெயந்தி கொண்டாடி மகிழ்ந்தவர்கள் ஜெயந்திக்கு ஜெய் போடத் துடிக்கிறார்கள். நடையாய் நடந்துதான் மிச்சம் ஜெய்போட முடியவில்லையாம். வெறுங்கையில் முழம்போடப் பார்ப்பதுதான் காரணம் என்று அமைச்சரவை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனவே, மெய்யாலுமா?

********

 

பேட்டைக்காரருக்குப் பதவி போனதற்குக் காரணம் பேப்பர் செய்திதான் என்கிறார்கள். போதாக்குறைக்கு அவரது பகுதியிலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னைப் பிரமுகரை வாழ்த்தியும் வரவேற்றும் அதிகமாக விளம்பரங்கள் பத்திரிகைகளில் வந்ததும் காரணமாம். காவல்துறை உயர் அதிகாரியை அமைச்சராக இருந்தவர் அழைத்து வேண்டுகோள் விடுத்ததை அந்த அதிகாரி மிரட்டினார் என்று பத்திரிகையில் கிசுகிசு வந்தது, இவரைப் பழி வாங்குவதற்காகவே காத்திருந்த காவல்துறை அதை ஊதிப் பெரிதாக்கி விட்டதாம். அது போதாதென்று, மாநகராட்சித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வெளியான விளம்பரங்களில் முதல்வருக்கு மட்டுமே முக்கியத்துவம் என்பது மீறப்பட்டவுடன் பாவம் கோபமெல்லாம் சாதுவாக இருந்த மேலிடத் தமிழன்மீது திரும்பிவிட்டதாகக் கூறுகிறார்கள். யாரோ செய்த தவறுக்கு இவர் பாவத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறாரேமே, மெய்யாலுமா?



 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.