மெய்யாலுமா?
2ஜி வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் மத்தியப் புலனாய்வுத் துறை தாமதம் செய்வதற்குக் காரணம் இருப்பதாகக் கூறுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துப் பிட


2ஜி வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் மத்தியப் புலனாய்வுத் துறை தாமதம் செய்வதற்குக் காரணம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துப் பிடிவாதம் பிடிக்கும் நீதித்துறையின் மீது, குறிப்பாக வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள்மீது ஏதாவது களங்கம் ஏற்படுத்த முடியுமா என்று தீவிரமாகப் புலன் விசாரணை நடத்தி வருகிறதாம் மத்திய அரசு. இதற்காக இந்த நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகக்கூடக் கூறப்படுகிறது. அரசிடம் சில டேப்புகள் சிக்கியிருப்பதாகவும் அவை விரைவிலேயே வெளியிடப்பட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறதே, மெய்யாலுமா?
-------------------------------------------------------------------------
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது, தமிழகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவி இருக்காது என்பது ஆளும் கட்சித் தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல். உள்ளாட்சித் தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில், கேப்டனின் பட்டாலியனில் விரிசல் விழத் தொடங்கி இருப்பதாகவும், மொத்தமாகப் பத்து பேர் சேர்வதற்காகத்தான் ஆளும்கட்சித் தரப்பு காத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கட்சி பிளவுபட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தால் மட்டும் போதாது, சின்னமும் முடக்கப்பட வேண்டும் என்று திட்டமாம். இதற்கான திட்ட மதிப்பீடு பல கோடி என்று கேள்வி.
வலையில் முதலில் விழுந்திருப்பது ஐந்தாவது படைவீடு அமைந்திருக்கும் சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினராம். "ஆட்சியிலா இருக்கிறோம் கவலைப்பட?' என்று கேட்டாலும் தே.மு. (தேர்தலுக்கு முன்னால்) இருந்த தைரியும் குறைந்து, நாமும் தி.க. (திராவிடர் கழகம்) போல ஆகிவிடுவோமோ என்கிற பயம் வந்திருக்கிறதாமே, மெய்யாலுமா?
-------------------------------------------------------------------------
புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்கைந்து மாதங்கள்தான் ஆகின்றன. கயிலையங்கிரிக்குத் தலைகீழாய் நடந்து சென்ற அம்மையாரின் பெயர் கொண்ட ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில், மத்திய அமைச்சர் திடீர் சோதனையிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக சீர்படுத்தப்படாமல், தொடர்ந்து புதுவை ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மருத்துவமனைத் தலைமை மருத்துவருக்கு அமைச்சர் சரமாரியாக "டோஸ்' விட்டுவிட்டுக் கிளம்பினார். அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்களும் ஊழியர்களும் "இத்தனைக் காலமும் ஆட்சியில் இருந்தபோது இல்லாத அக்கறை மத்திய அமைச்சருக்கு இப்போது வந்திருக்கிறதே' என்று கேட்டு "எல்லாம் அரசியல் படுத்தும் பாடு' என்று தலையில் அடித்துக் கொண்டார்களாமே, மெய்யாலுமா?
-------------------------------------------------------------------------
சூப்பர் ஸ்டார்' மீண்டும் எப்போது நடிக்கத் தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு திடீர்த் தகவல். ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12 ஆகும். இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிசம்பர்
13-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார்களாம். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில், அனைத்து ரஜினி மன்ற நிர்வாகிகளையும் அழைத்துச் சிறப்பாகப் பிறந்த நாளைக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிறந்த நாள் விழாவின் ஹைலைட்டாக ரஜினிகாந்தே தனது ரசிகர்களிடம் பல விஷயங்களை மனம் விட்டுப் பேச இருக்கிறாராமே, மெய்யாலுமா?
-------------------------------------------------------------------------
பூலனாய்வுத் துறையைக் கையில் வைத்திருக்கும் காவல்துறைத் துணைத் தலைவர், அதிகார மையத்துக்கு நெருக்கமாக இருப்பதில், பல அதிகாரிகளுக்குப் பொறாமை. அதிலும் குறிப்பாக, இந்திய போலீஸ் பணியில் மத்தியத் தேர்வாணையக் குழுவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அதிகாரிகளால், இந்தப் பொறுப்பான பதவியில், மாநிலத் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி உயர்வு பெற்ற ஒருவர் செயல்படுவதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று கேள்வி.
அவரிடம் வேலை காட்டினால் வேல் பாய்ச்சி விடுவார் என்கிற பயத்தில், வெளிப்பார்வைக்கு அவரைப் பொன்னே, மணியே என்றெல்லாம் புகழ்ந்தாலும் மனதிற்குள் ஏகப் புழுக்கமாம். அவரைப் பற்றிப் போட்டுக் கொடுக்க ஏதாவது கிடைக்கிறதா என்று துருவித் துருவி புலன் விசாரணைக்காரரைப் பற்றியே புலன் விசாரணை செய்கிறார்களாமே சில காக்கிச்சட்டைகள், மெய்யாலுமா?
-------------------------------------------------------------------------
சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை மாநாட்டில், காளஹஸ்தியுடன் தொடர்புடைய நாயன்மாரின் பெயர்கொண்ட மாநகரக் காவல் ஆணையரைப் பாராட்டி விருது வழங்கிய முதல்வர், தலைநகரக் காவல்துறை ஆணையரைப் பாராட்டாதது ஏன் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருந்தாலும், நாளும் அதிகரித்துவரும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்றவற்றைத் தடுக்க முடியாமல் அவர் திணறுவதுதான் காரணமாம். அதுமட்டும் இல்லாமல், உள்ளாட்சித் தேர்தலின்போது, எதிர்க்கட்சியினர் அவிழ்த்துவிட்ட வன்முறையைத் தடுக்க ஆளும் கட்சி அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும் முயன்றதை மறைத்து, அவர்கள் தான் ஏதோ ரௌடித்தனத்தில் ஈடுபட்டதாகத் தவறான தகவல் அளித்துவிட்டார் என்பது முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும், ஒரு காரணம் என்று கேள்வி. அதிரடி மாற்றத்துக்குத் தயாராகிறதாமே சென்னை மாநகரக் காவல்துறை, மெய்யாலுமா?
-------------------------------------------------------------------------
சமயக் குரவர்களில் ஒருவரின் பெயரைக் கொண்ட அந்தத் தலைவர், தனக்குத் தலைவர் பதவி கிடைக்காததில் சோர்ந்து போய், இனி அடுத்து எங்கே போவது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டதாகத் தகவல். மீண்டும் அதிமுகவுக்குப் போகத்தான் அவருக்கு ஆசை என்றாலும், அங்கே வரவேற்கப்படாத விருந்தாளி என்பதால், செய்வதறியாமல் திகைக்கிறார் என்று சொல்கிறார்கள். எதிர் முகாமுக்குப் போகலாம் என்றால் அங்கே இப்போது கோலோச்சுபவர்களில் பலர், முன்பு இலைக் கட்சியில் இவருக்கு எதிர் கோஷ்டியில் இருந்தவர்கள். இருந்தாலும், கட்சிப் பிளவின்போது சேவலைக் காப்பாற்ற இவரோடு கைகோத்து செயல்பட்ட ஐந்து எழுத்து இனிஷியல்காரரின் உதவியுடன் சூரியனில் சங்கமித்துவிடலாமா என்று யோசிக்கிறாராமே அந்த எம்.ஜி.ஆரின் இளவல், மெய்யாலுமா?
-------------------------------------------------------------------------
முதல்வர் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை மாநாட்டில் 43 புதிய திட்டங்களை அறிவித்தது ஒருபுறம் இருக்கட்டும். பெருவாரியான அதிகாரிகள், தாங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற பயத்தில் எந்தத் திட்டத்தையும் முனைப்புடன் நிறைவேற்றாமலும், உற்சாகத்துடன் செயல்படாமலும் இருக்கிறார்களாமே, மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...