அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான்!

நாடக உலகில் சிரிப்பு நடிகராகத் தோன்றி, சினிமா உலகில் அப்பாவாகி, அப்புறம் தயாரிப்பாளராக மாறி இன்று கதாசிரியராகவும் இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் வி.கே.ராமசாமி.
அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான்!
Updated on
1 min read

நாடக உலகில் சிரிப்பு நடிகராகத் தோன்றி, சினிமா உலகில் அப்பாவாகி, அப்புறம் தயாரிப்பாளராக மாறி இன்று கதாசிரியராகவும் இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் வி.கே.ராமசாமி.

இவருடைய வளர்ச்சியின் பரிமாணம் என்ன? அனுபவங்கள் எப்படிப்பட்டவை? அவருக்கே உரிய பணியில் அவரை பேச வைத்த பொழுது:

எனக்கு 57 வயசு ஆகுதுங்க.ஏழு வயசிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்த்துட்டேன்.நாடகத்திலே 15 வருஷம்.சினிமாவிலே 35 வருஷம். ஆக 50 வருஷமா நடிச்சிகிட்டே இருக்கேன். 

நாடக கம்பெனியில் நான் சிரிப்பு நடிகனாத்தான் இருந்தேன். நாகேஷ் மாதிரி ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லாம் பண்ணுவேன். 
"தியாக உள்ளம்" நாடகத்திலே பேங்கர்  சண்முகம் பிள்ளைங்கிற 60 வயசுக்காரர் வேடம் பண்ணினேன். அப்போ எனக்கு வயசு 15.ஏ .வி.எம் செட்டியாரு அந்த நாடகத்த பாத்தாரு.அதையே 'நாம் இருவர்' படமா எடுக்கச்சே எனக்கே அந்த வேஷத்தை கொடுத்துட்டாரு. அதுதான் என் முதல் படம். அதுக்கப்பறம்  எக்கச்சக்கமான படங்களிலே அப்பாவாகவே நடிச்சுட்டேன். 

பாகவதர், சின்னப்பா, மஹாலிங்கம், எம்.ஜி.ஆர்.சிவாஜி கணேசன் இப்போ புதுசு புதுசா வறவங்க  அத்தனை  தலைமுறையிலயும் நடிச்சு, நடிச்சுட்டு இருக்குற ஒரே ஆசாமி நான் ஒருத்தன்தான். 

நான் வாழ்க்கையில செட்டில் ஆனது 1969 ல தான்.அதாவது என்னோட என் சம்சாரம் ரமணி இணைஞ்சதுக்கு   அப்புறம்தான் எனக்கு உண்மையான வாழ்க்கை ஆரம்பமாச்சு. 

அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான்.   அது என் சொந்தக் கதை. வாழ்க்கை வரலாறு மாதிரி 36 பக்கம் எழுதி வச்சிருந்தேன். விவகாரம் வந்து கோர்ட்டுக்கு போக வேண்டியதாயிடுச்சு. என் வாழ்க்கை வரலாறும் கோர்ட்டுக்கு போயிருக்கு. 

எனக்கு டைரக்சன்ல என்ன அனுபவம்னு நீங்க கேக்கலாம். ஒரு அனுபவமும் இல்லை.இந்த 35 வருசமா பார்த்தது, பேசினது,நடிச்சது, படம் எடுத்து, கேள்விப்படறது எல்லாமே அனுபவம்தான்.     

குடிப்பழக்கம் எல்லாம் முன்னே இருந்தது. இப்போ நிறுத்திட்டேன். அதுக்கும் ரமணிதான் காரணம். ரேஸுக்கு கூட போறத நிறுத்திட்டேன். 

சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் ரொம்ப நாள் சிநேகிதம்.அவரு கூட என்னை நீ பொழைக்க தெரியாதவன்டா என்பார். 

அவர் சொன்னதும் வாஸ்தவம்தான். இத்தனை வருஷம் இத்தனை படங்களில் நடிச்சும் கடன்காரனாயிருக்கேன்னா பாருங்களேன். 

சந்திப்பு: திரைஞானி 

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.08.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com