பகுதி 7 - திருவெம்பாவை - 1
திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி இறைவன் புகழைப் பாடும் பாடல்கள் இவை.
திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ, வன்செவியோ நின்செவிதான்!
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள், என்னே, என்னே,
ஈதே எம் தோழி பரிசு ஏலோர் எம்பாவாய்!
*
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப் பகல் நாம்
பேசும்போது எப்போது, இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேர் இழையாய், நேர் இழையீர்,
சீசீ, இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்து அருள வந்து அருளும்
தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர், யாம் ஆர், ஏல் ஓர் எம்பாவாய்!
பொருளின்பம்
(துயிலெழுந்த பெண்கள் தங்கள் தோழியை அழைக்க வருகிறார்கள், அவள் இன்னும் எழவில்லை. ஆகவே, இவ்வாறு பாடுகிறார்கள்).
ஆதியும் அந்தமும் இல்லாத அரிதான, பெரிய சோதியாகிய சிவபெருமானை நாங்கள் பாடினோம், அதைக் கேட்டபிறகும் நீ தூங்குகிறாயா? வாள்போல் கூர்மையான, பெரிய கண்களைக் கொண்ட பெண்ணே, உன்னுடைய காதுகள் கொடுமையான காதுகளோ?
மாதேவனான சிவபெருமானின் திருவடிகளை நாங்கள் வாழ்த்தினோம், அந்த ஒலி வீதியெல்லாம் கேட்டது, உடனே, இவள் மெய் மறந்து, மலர்கள் தூவிய படுக்கையின்மேல் நின்றாள், புரண்டாள், அசைவற்றுக் கிடக்கிறாள், இந்தப் பக்தி நிலையை எப்படிப் பாராட்டுவது!
பாவைபோன்ற பெண்ணே, இவளைப் பார், இதுபோன்ற பக்தியை நீயும் பெறுவதற்கு ஆண்டவனை வேண்டு,
வாசலில் நிற்கும் பெண்கள்: ‘அழகிய ஆபரணங்களை அணிந்தவளே, ராத்திரி நேரமோ, பகல் நேரமோ, நாம் பேசும்போதெல்லாம், என்னுடைய பாசம் அந்தப் பரஞ்சோதிக்குதான் என்று சொல்வாயே, ஆனால் இப்போது அவனை வணங்க வராமல் தூங்குகிறாயே, மலர்கள் நிறைந்த இந்தப் படுக்கைமீது நேசம் உண்டாகிவிட்டதா?’
உள்ளே இருக்கும் பெண்: ‘சீசீ, இப்படியெல்லாமா பேசுவது? இது விளையாடுகிற நேரமா?’
‘விண்ணோர்கள்கூட, இந்தப் பெருமானை வாழ்த்த நமக்குத் தகுதி உண்டா என்று எண்ணிக் கூசுகின்ற மலர்ப்பாதங்களை உடையவன் சிவபெருமான், நமக்கு அந்தத் திருவடிகளைத் தருவதற்காக வந்து அருள் செய்கிறான், அந்த ஒளி நிறைந்த தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்மீது அன்பு செய்ய நாம் யார்? நமக்கு அந்தத் தகுதி உண்டா?’
‘பாவைபோன்ற பெண்ணே, இதை எண்ணிப்பார்!’
சொல்லின்பம்
வாள்: ஒளி
தடங்கண்: பெரிய கண்
வளருதியோ: தூங்குகிறாயோ
செவி: காது
கழல்: ஆண்கள் அணியும் வீர ஆபரணம், இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிப்பிடுகிறது
போது: மலர்
ஆர்: நிறைந்த
அமளி: படுக்கை
பரிசு: நிலை
நேர் இழையாய்: அழகிய ஆபரணங்களை அணிந்தவளே
ஏசுதல்: திட்டுதல்
ஏத்துதல்: போற்றுதல்
தேசன்: ஒளி நிறைந்தவன்
ஓர்: சிந்தனை செய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...