பகுதி 7 - திருவெம்பாவை - 5

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Updated on
2 min read

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி இறைவன் புகழைப் பாடும் பாடல்கள் இவை.

திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.

48

பாடலின்பம்

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்து ஆடும்

தீர்த்தன், நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்

கூத்தன், இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளை சிலம்ப, வார்கலைகள்

ஆர்ப்பு அரவம் செய்ய, அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்பப்

பூத் திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன்பாதம்

ஏத்தி இரும்சுனை நீர் ஆடேல் ஓர் எம்பாவாய்.

*

காது ஆர் குழை ஆட, பைம்பூண் கலன் ஆட,

கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,

சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,

வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடி,

சோதி திறம் பாடி, சூழ்கொன்றைத் தார் பாடி,

ஆதித் திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம் பாடி ஆடேல் ஓர் எம்பாவாய்.

பொருளின்பம்

உடலில் உள்ள அழுக்குப் போவதற்காகத் தண்ணீரில் குளிப்பதுபோல், நம்மைப் பிடித்திருக்கும் பிறவி என்கிற துயரம் போகவேண்டுமென்றால், இறைவன் என்கிற தண்ணீரில் குளிக்கவேண்டும், அத்தகைய புனித நீர்நிலையாகத் திகழ்கிறவன் அவன்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கையில் தீயை ஏந்தி நடனம் செய்கிறவன், வான், உலகம், மற்ற அனைத்தையும் காத்து, படைத்து, அவற்றை மறைத்து விளையாடுகிறவன்,

அவனுடைய சிறப்புகளைப் பேசியபடி, நம்முடைய வளையல்கள் சத்தமிட, மேகலைகள் ஒலி எழுப்ப, மலர் அணிந்த கூந்தலின்மேல் வண்டுகள் மொய்த்துப் பாட, பூக்கள் நிறைந்த பொய்கையில், பெரிய சுனை நீரில் நாம் குளிப்போம், பின்னர் நம்மை அடிமையாக உடைய அந்தச் சிவபெருமானின் பொற்திருவடிகளைப் போற்றுவோம்,

பாவைபோன்ற பெண்ணே, நீ இதனைச் சிந்திப்பாய்.

குளிர்ந்த நீரில் நாம் குளிக்கும்போது, காதுகளில் அணிந்திருக்கும் குழைகள் ஆடுகின்றன, பசும்பொன்னால் ஆன மற்ற அணிகலன்கள் ஆடுகின்றன, மலர் சூடிய கூந்தல் ஆடுகிறது, அங்கே மொய்க்கும் வண்டுக் கூட்டங்கள் ஆடுகின்றன, அந்த நேரத்தில் நாம் சிற்றம்பலத்தின் பெருமைகளைப் பாடுவோம், வேதப்பொருளானவனைப் போற்றுவோம், அவன் நமக்கே அருள் செய்ய வேண்டிப் பாடுவோம், ஒளிமயமானவனின் திறத்தைப் பாடுவோம், அவன் அணிந்திருக்கும் கொன்றை மாலைகளைப் பாடுவோம், அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் சிவபெருமானைப் பாடுவோம், அவனே ஊழிக்காலத்தில் அனைத்துக்கும் நிறைவாகவும் இருப்பதைப் பாடுவோம்,

நம்மை வெவ்வேறாகப் பிறக்கவைத்து வளர்த்தவள், திருக்கைகளில் வளையல்களை அணிந்த உமையம்மையின் திருவடிகளைப் பாடுவோம்.

பாவைபோன்ற பெண்ணே, நீ இதனை எண்ணுவாய்.


சொல்லின்பம்

ஆர்த்தல்: பிணைத்தல்/ சத்தமிடல்/ மகிழ்தல் (இதே பாடலில் இந்தச் சொல் பல பொருள்களில் வருகிறது)

கூத்தன்: நடனமாடுகிறவன்

குவலயம்: உலகம்

கரந்து: மறைத்து

சிலம்புதல்: சத்தமிடுதல்

கலை: மேகலை

அரவம்: சத்தம்

குடைந்து: நீராடி

இரும் சுனை: பெரிய சுனை

கோதை: மாலை

குழாம்: கூட்டம்

சீதம்: குளிர்ச்சி

ஆமா: ஆகும் தன்மை

தார்: மாலை

பேதித்தல்: பேதப்படுத்துதல்/ பிரித்தல்

பெய்வளை: வளையல் அணிந்த பெண்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com