ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 26 – அதிசயப் பத்து - 2

ஆனால், என் தந்தையாகிய அந்தச் சிவபெருமான் என்னையும் ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

News image
Updated On :11 டிசம்பர் 2015, 7:13 am

என்.சொக்கன்

சிவபெருமானின் திருக்கோலத்தையும் அவர் தனக்கு அருள்செய்த தன்மையையும் எண்ணி வியப்படைந்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை, பத்து பாடல்கள்.

160

பாடலின்பம்

முன்னை என்னுடைய வல்வினை

போயிட முக்கண்அதுஉடை எந்தை

தன்னை யாவரும் அறிவதற்கு

அரியவன், எளியவன் அடியார்க்கு,

பொன்னை வென்றதோர் புரிசடை

முடிதனில் இளமதிஅதுவைத்த

அன்னை ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

*

பித்தன்என்றுஎனை உலகவர்

பகவர்தோர் காரணம் இதுகேளீர்,

ஒத்துச்சென்று தன் திருஅருள்

கூடிடும் உபாயம்அதுஅறியாமே

செத்துப்போய் அருநரகுஇடை

வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை

அத்தன் ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

பொருளின்பம்

மூன்று கண்களை உடைய என் தந்தை, தன்னை யாரும் அறிய இயலாதபடி அரியவனாகத் திகழ்கிறவன், அடியவர்களுக்கு எளியவனாகத் தோன்றுகிறவன், பொன்னைவிடப் பிரகாசமான, திரண்ட சடைமுடியையும், அதில் பிறைச்சந்திரனையும் வைத்தவன், எனக்கு அன்னைபோன்றவன், அத்தகைய சிவபெருமான் என் பழைய தீவினைகள் செல்லுமாறு என்னை ஆண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக என்னை ஆக்கினான், இது அதிசயமல்லவா!

*

இந்த உலகத்தில் உள்ளவர்கள் என்னைப் பித்தன் என்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன தெரியுமா? கேளுங்கள்.

எம்பெருமானுடன் நெருங்கிச்சென்று, அவனது திருவருளைப்பெற்று உய்வதற்கான வழி தெரியாமல், இறந்துபோய் கொடுமையான நரகத்தில் விழ முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், நான் பித்தன்தானே?

ஆனால், என் தந்தையாகிய அந்தச் சிவபெருமான் என்னையும் ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

சொல்லின்பம்

முன்னை: முன்பு

எந்தை: என் தந்தை

புரிசடைமுடி: திரண்ட சடைமுடி

இளமதி: பிறைச்சந்திரன்

பகர்வது: சொல்வது

உபாயம்: வழி

ஒருப்படுகின்றேன்: விரும்புகிறேன்/ செய்யத் துணிகிறேன்

அத்தன்: தந்தை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.