பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 28 – வாழாப் பத்து - 3

பண்ணிசையைப்போல் இனிமையாகப் பேசும் உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே,

News image
Updated On :26 டிசம்பர் 2015, 5:48 am

என்.சொக்கன்

இவ்வுலகில் வாழவிரும்பாமல், சிவபெருமானின் திருவடிகளில் சேரவிரும்பும் தன்மையைக் குறிப்பிடும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

171

பாடலின்பம்

பண்ணின்நேர் மொழியாள் பங்க, நீஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

திண்ணமே ஆண்டாய், சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

எண்ணமே உடல்,வாய்,மூக்கொடு செவி,கண்

என்றுஇவை நின்கணே வைத்து

மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

*

பஞ்சின்மெல்அடியாள் பங்க, நீஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

செஞ்செவே ஆண்டாய், சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

அஞ்சினேன் நாயேன், ஆண்டுநீ அளித்த

அருளினை மருளினால் மறந்த

வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

பொருளின்பம்

பண்ணிசையைப்போல் இனிமையாகப் பேசும் உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, என்னை உறுதியுடன் ஆண்டவனே, சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

என் எண்ணம், உடல், வாய், மூக்கு, காது, கண் என அனைத்தையும் உன்னிடம் வைத்துவிட்டேன், இதன்பிறகு நான் மண்ணில் வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும், சிவபெருமானே,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.

*

செம்பஞ்சுக்குழம்பு தடவிய மென்மையான திருவடிகளைக்கொண்ட உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, என்னை நன்கு ஆண்டவனே, சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

நீ என்னை ஆட்கொண்டு அருள் செய்தாய், அந்த அருளை என் மயக்கத்தினாலே மறந்துவிட்டேன், நாய் போன்றவனான, வஞ்சகனான நான் அதை எண்ணி அஞ்சினேன், இனிமேல் நான் இங்கே வாழமாட்டேன், சிவபெருமானே,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள் செய்.

சொல்லின்பம்

பண்: இசைப்பாடல்

நேர்: இணையான

திண்ணமே: திண்மையாக / உறுதியாக

உறை: வசிக்கிற / எழுந்தருளியிருக்கிற

செவி: காது

நின்கணே: உன்மீது

பஞ்சு: செம்பஞ்சுக்குழம்பு

செஞ்செவே: சிறப்பாக

மருள்: மயக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.