திருவாசகம்– ஓர் அறிமுகம்
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், தமிழின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்களில் ஒன்று.


மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், தமிழின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்களில் ஒன்று.
சிவபெருமானைப் பலவிதமாகப் பாடிப் பரவசப்பட்ட மாணிக்கவாசகரின் மொழி மிக எளிமையானது, நேர்த்தியானது. பல பாடல்களைப் பதம் பிரித்துச் சொன்னாலே நமக்குப் பாதி புரிந்துவிடும். பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இருந்தால் மீதியும் புரிந்துவிடும்.
அதேசமயம், அந்த எளிய வடிவத்துக்குள் மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சில வாக்கிய அமைப்புகளும் உவமைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தி, பின்னர் ஆழச் சிந்திக்கவைப்பவை.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்று சொல்வார்கள். அதற்கு முதன்மைக் காரணம், மாணிக்கவாசகரே உருகிய நிலையில்தான் இதனை எழுதியிருக்கிறார். வாசிக்கிறவர்கள் அந்த உருக்கத்தை அப்படியே உணர இயலும்.
தமிழ், பக்தி இவை தவிர, தத்துவரீதியிலும் திருவாசகத்தை வாசிக்க வேண்டும். ஆனால் அதை இன்னொருவர் சொல்லிப் புரியவைக்க இயலாது. வாசிப்பவர் தாமே உணர்ந்து பெறும் அனுபவமாகவே அது அமையும்.
அதனால், இந்தத் தொடரின் நோக்கத்தை தெளிவாக வரையறுத்துக்கொள்வது நல்லது. திருவாசகத்தில் உள்ள ஐம்பத்தொரு உட்பிரிவுகளையும் வாரம் ஒன்றாகச் சுருக்கமாக அறிமுகப்படுத்தி, அவை ஒவ்வொன்றிலிருந்தும் சில பாடல்கள் அல்லது வரிகளை மேற்கோள் காட்டி, பதம் பிரித்துத் தந்து, அரிய சொற்களுக்குப் பொருள் தந்து, எளிய உரை வழங்குதல். இதன்மூலம் மீதமுள்ள பாடல்களைத் தேடி வாசிக்கவும், இந்தப் பாடல்களை ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ளவும் ஆர்வம் உண்டாக்குதல். இவையே இத்தொடரின் நோக்கம்.
திருவாசகத்துக்கு அதிஅற்புதமான பல உரைகள் உள்ளன. அவை தவிர, திருவாசகத்தைப் பற்றி ஏராளமான விரிவுரைகளும் சான்றோர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இத்தனையும் சில நூறு பாடல்களே கொண்ட ஒரு நூலுக்கு என்றால், அதன் மேன்மையைச் சிந்தித்துப் பார்க்கலாம்.
திருவாசகத்தில், இந்த வகையிலான பாடல்கள்தான் உண்டு, இத்தனை வரிகள்தான் உண்டு என்றெல்லாம் எந்த வரையறைகளும் கிடையாது. மூன்றே வரிகள் கொண்ட பாடல்களும் இருக்கின்றன, பல நூறு வரிகளைக் கொண்ட பாடல்களும் இருக்கின்றன, வெண்பா உண்டு, அகவற்பா உண்டு, விருத்தம் உண்டு. ஓர் உட்பிரிவில் ஒரே ஒரு பாடல் இருக்கும். இன்னோர் உட்பிரிவில் இருபது பாடல்களும் இருக்கும். அந்தாதியில் சில பாடல்கள், அம்மானை, தெள்ளேணம், சாழல், பொற்சுண்ணம் என்று விதவிதமான விளையாட்டுகள், செயல்பாடுகளை மையமாகக் கொண்ட பாடல்கள், பாவை, பள்ளியெழுச்சிப் பாடல்கள், சிவனைப் போற்றும் நூற்றுக்கணக்கான வர்ணனைகள், அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், அற்புதமான தமிழ்ச் சொற்கள், தன்னைத் தாழ்த்திப் பேசுதல், இறைவனை உயர்த்திப் பேசுதல், அடியார் பெருமை சொல்லுதல், உலக மயக்கத்தில் வீழ்ந்திருப்போரைச் சாடுதல், உன்னதமான சிவபுரத்தின் மகிமையைச் சொல்லுதல், பல்வேறு அருட்கதைகள், பிறப்பு, இறப்புச் சுழலின் வேதனை, அதிலிருந்து மீள்வதன் மேன்மை என அடுத்து என்ன வரப்போகிறது என்றே தெரியாதபடி ஆச்சரியங்களை வைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
ஆனால் வடிவம் எதுவானாலும், அதன் ஆழத்தில் இருப்பது அவரது இறைஞ்சல் தொனிதான். அந்தக் குரலை நாம் புரிந்துகொண்டால் போதும். அதே இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கோரிப் பெறலாம்!
அவ்வகையில், திருவாசகம் நம் ஒவ்வொருவருக்குமான இலக்கியம். அதன் அழகை என் எளிய மொழியில் சொல்ல இறைவன் அருள வேண்டும் என இறைஞ்சி, இதில் நிகழக்கூடிய பிழைகளையும் அவன் பொறுத்துக்கொள்ள வேண்டுமென வேண்டித் தொடங்குகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...