ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 3 – திருவண்டப் பகுதி 3

நாம் வசிக்கும் இந்த அண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவன் சிவபெருமான். இந்த அண்டத்தையே நாம் வியக்கும்போது, அதை ஆளும் இறைவன் எந்த அளவு உயர்வானவனாக இருக்க வேண்டும்! அந்த வியப்பைக் குறிப்பிடும் பாடல் இது.

News image
Updated On :25 ஜூலை 2015, 9:16 am

என்.சொக்கன்

17

பாடலின்பம்

பரமானந்தப் பழம்கடல் அதுவே

கரு மாமுகிலில் தோன்றித்

திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறித்

திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய

ஐம்புலப் பந்தனை வாள் அரவு இரிய

வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப

நீடு எழில் தோன்றி வான் ஒளி மிளிர

எம்தம் பிறவியில் கோபம் மிகுத்து

முரசு எறிந்து மாப்பெரும் கருணையில் முழங்கிப்

பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட

எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ளச்

செம்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட வரையுறக்

கேதக் குட்டம் கை அற ஓங்கி

இருமுச் சமயத்து ஒரு பேய்த்தேரினை

நீர் நசைதர வரு நெடும்கண் மான்கணம்

தவப் பெருவாயிடைப் பருகித் தளர்வொடும்

அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன,

ஆயிடை வானப் பேரியாற்று அகவையின்

பாய்ந்து எழுந்து இன்பப் பெரும்சுழி கொழித்துச்

சுழித்து எம் பந்தமாக் கரைபொரு தலைத்து இடித்து

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்

இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து

உருவ அருள் நீர் ஓட்டா அருவரைச்

சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ்

வெறிமலர்க் குளவாய் கோலி நிறை அகில்

மாப்புகைக் கரைசேர் வண்டு உடைக் குளத்தின்

மீக்கொள மேன்மேல் மகிழ்தலில் நோக்கி

அருச்சனை வயலுள் அன்பு வித்திட்டுத்

தொண்ட உழவர் ஆரத் தந்த

அண்டத்து அரும் பெறல் மேகன் வாழ்க!

பொருளின்பம்

பரமானந்தம் தரும் தொன்மையான கடல் எப்படித் தோன்றுகிறது தெரியுமா?

முதலில் அது கருத்த, பெரிய மேகமாகத் தோன்றி, அழகான திருப்பெருந்துறை மலையின்மீது ஏறி நிற்கிறது,

பின்னர் அது அழகிய மின்னல் ஒளியாகத் திசைகளிலெல்லாம் மின்னுகிறது, அதைப் பார்த்து, ஐந்து புலன்களின்மீது கொண்ட பற்று என்கிற ஒளி நிறைந்த பாம்புகள் அஞ்சுகின்றன,

மழை வருவதால், வெம்மையான, துயர் தருகிற கோடை தன்னுடைய பெரிய தலையை ஒளித்துக்கொள்கிறது,

வானில் எங்கும் அழகு, ஒளி,

அங்கே எங்கள் பிறவிகளைப்போன்ற இந்திரகோபப் பூச்சிகள் பரவுகின்றன,

அப்போது அந்த முகில் முரசுபோல் அதிர்ந்து அருளை முழங்குகிறது, காந்தள் மலர்கள் தாமரைப் பூவைப்போல் குவிந்து காணப்படுகின்றன,

இப்போது, மழை தொடங்குகிறது. அதன் நுண்ணிய துளிகள் அனைத்தும் குறைவில்லாத இறைவனின் அருள்,

செம்மையான சுடர்வெள்ளம் எல்லாத் திசைகளிலும் தெரிகிறது,

மலைபோல் தோன்றிய துன்பக் குளம், கரை உடைந்து நீங்குகிறது,

பெரிய கண்களைக் கொண்ட மான் கூட்டத்துக்குத் தாகம் எடுத்தது. ஆறு வகைச் சமயங்கள் என்கிற கானல் நீரை நம்பி அவை வந்தன, தவம் என்கிற பெரிய வாயைக் கொண்டு அதைக் குடிக்க முயற்சி செய்தன, ஆனால், தாகம் தீரவில்லை, மனம் தளர்ந்தன,

அப்போது, அங்கே பேரின்பப் பெருநீர் பாய்ந்து வருகிறது. வானப் பேராற்றின் உள்ளே புகுந்து, எங்கள் பற்று என்கிற பெரும் கரைகளை மோதி உடைக்கிறது, பல பிறவிகளில் ஊழ்வினை காரணமாக நாங்கள் வளர்த்த இருவினைகள் என்கிற பெரிய மரங்களை அது வேரோடு பறித்து எறிகிறது, அருள் வெள்ளத்தைப் பாயச் செய்கிறது, அரிய மரங்களில் விளைந்த சந்தன மரங்களைக் கொண்டுவந்து இங்கே அணை கட்டுகிறது, தேன் ஒழுகுகிற, நறுமணம் கொண்ட, மலர்கள் மிகுந்த குளங்களை அமைக்கிறது, அவற்றின் கரைகளில் அகில் புகை மணக்கிறது, வண்டுகள் மொய்க்கின்றன, இன்பம் பெருகுகிறது.

அடியவர்களாகிய உழவர்கள் அந்தக் குளத்தின் நீரை எடுத்து, அர்ச்சனை என்கிற வயலில் அன்பு என்கிற விதையை விதைக்கிறார்கள். விளைந்த பயிரை அறுவடை செய்து பசி தீரும்படி கொடுக்கிறார்கள்.

இத்தனைக்கும் காரணமாக அமைந்த அரிய மேகம், சிவபெருமான். அவன் வாழ்க!

சொல்லின்பம்

வரை: மலை

திரு: செல்வம்

பந்தனை: பற்று/ பாசை

மா: பெரிய

கோபம்: இந்திரகோபம் என்கிற பூச்சி

முரசு எறிந்து: முரசை ஒலிக்கச்செய்து

புரை: போன்ற

அஞ்சலி: வணங்குதல்

எஞ்சா: குறையாத

தெவிட்ட: பரவ

கேதம்: துன்பம்

குட்டம்: நீர்த்தேக்கம்

இருமுச்சமயம்: 2x3 = 6 சமயங்கள் (சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்)

பேய்த்தேர்: கானல் நீர்

நசை: விருப்பம்

கணம்: கூட்டம்

அவம்: பயனற்றது

அகவையின்: உள்ளே அமைந்தது

நங்கள்: எங்கள்

ஓட்டா: ஓடச்செய்து

சந்து: சந்தனம்

வான்: உயர்ந்த

சிறை: அணை

மட்டு: தேன்

வெறி: நறுமணம்

கோலி: வளைத்து

மீ: மிகுதி/ அதிகம்

ஆர: நிறைய

மேகன்: மேகமானவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.