பகுதி 17 – அன்னைப் பத்து - 5
பொருளின்பம்என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் உமையம்மையைத் தன் உடலின்


இறைவனையே தன் காதலன் என்று ஒரு பெண் கருதுகிறாள். அதை எண்ணி அவளுடைய அன்னை உரைப்பவை ‘அன்னைப் பத்து’ என்ற பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. அந்தப் பெண் தன் அன்னையிடம் இறைவனைப் பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட தோழி, அதனைப் பிறரிடம் சொல்கிறாள்.
இப்பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
தையல்ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்உள்ளம்
நையும் இது என்னே அன்னே என்னும்.
*
கொன்றை மதியமும் கூவின மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்,
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே
இன்று எனக்கு ஆனவாறு அன்னே என்னும்.
பொருளின்பம்
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர், தவம் செய்பவர்போல் தோற்றம் கொண்டவர், பிச்சை எடுக்கிற தோற்றமும் கொண்டவர், அவரைப் பிரிந்தால் என் உள்ளம் துன்பப்படுகிறது, இதற்கு என்ன காரணம்?’ என்கிறாள்.
*
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் கொன்றைமலர் மாலை, பிறைச் சந்திரன், ஊமத்தைமலர் ஆகியவை நெருங்கிய தலையைக் கொண்டவர், அவருடைய தலையில் இருக்கிற ஊமத்தம்தான் எனக்கு உன்மத்தத்தைக் கொடுத்ததோ!’ என்கிறாள்.
சொல்லின்பம்
தையல்: பெண்/ உமையம்மையைக் குறிக்கிறது
தாபத வேடம்: தவக்கோலம்
ஐயம்: பிச்சை
அன்னே: அன்னையே
போதலும்: சென்றவுடன்
நையும்: நோகும்
என்னே: ஏனோ
மதியம்: சந்திரன்/ பிறைச் சந்திரனைக் குறிக்கிறது
மத்தம்: ஊமத்த மலர்
துன்றிய: நெருங்கிய
சென்னி: தலை
உன்மத்தம்: பித்துநிலை
ஆனவாறு: ஆன தன்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...