ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 18 – குயில் பத்து - 4

குயிலே, நான் சொல்வதை நீ கேட்டால் நான் உன்னை விரும்புவேன், உன்னுடைய துணைத்தோழியாகவும் ஆவேன்,

News image
Updated On :5 நவம்பர் 2015, 10:51 am

என்.சொக்கன்

ஒரு பெண் சிவபெருமானைத் தன் தலைவனாக எண்ணுகிறாள். அவரைக் காண இயலவில்லையே என்ற ஏக்கத்தால் குயிலிடம் பேசுகிறாள்.  ‘அவர் இங்கே வர வேண்டும். அதற்காக நீ கூவு’ என்கிறாள்.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

122

பாடலின்பம்

உன்னை உகப்பன் குயிலே, உன் துணைத் தோழியும் ஆவன்,

பொன்னை அழித்த நல்மேனிப் புகழில் திகழும் அழகன்,

மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய

தென்னவன், சேரலன், சோழன் சீர்ப் புயங்கன் வரக் கூவாய்.

*

வா இங்கே நீ குயிற்பிள்ளாய், மாலொடு நான்முகன் தேடி

ஓவி அவர் உன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந்து ஓங்கி

மேவி அன்று அண்டம் கடந்து விரிசுடராய் நின்ற மெய்யன்,

தாவி வரும் பரிப்பாகன், தாழ்சடையோன் வரக் கூவாய்.

பொருளின்பம்

குயிலே, நான் சொல்வதை நீ கேட்டால் நான் உன்னை விரும்புவேன், உன்னுடைய துணைத்தோழியாகவும் ஆவேன்,

பொன்னையும் வெல்லும் திருமேனியை உடையவன், புகழில் திகழ்கின்ற அழகன், அனைவருக்கும் அரசன் அந்தச் சிவபெருமான், குதிரைமீது ஏறி வந்த வள்ளல், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தெய்வம், பாண்டியனும் சேரனும் சோழனும் போற்றும்படி சிறப்பான புயங்கக்கூத்தை ஆடியவன், அவன் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.

*

சிறுகுயிலே, நீ இங்கே வா,

திருமாலும் பிரம்மனும் சிவபெருமானைத் தேடினார்கள், அவர்களால் கண்டறிய இயலவில்லை, சோர்ந்து நின்றார்கள், அவனை நினைத்துத் துதித்தார்கள், அன்றைக்கு அவர்கள் அப்படி வியக்கும்படி ஓர் ஒளிமிகுந்த தழல் வடிவத்தில் விண்ணைப் பிளந்துகொண்டு மேலே சென்று, அண்டத்தைக் கடந்து விரிசுடராக நின்ற மெய்ப்பொருள், தாவி வரும் குதிரைக்குப் பாகனாகத் திகழ்ந்தவன், தாழ்சடையைக் கொண்டவன், அவன் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.

சொல்லின்பம்

உகப்பன்: விரும்புவேன்

அழித்த: வென்ற

பரிமிசை: தேர்மீது

மேய: விளங்குகின்ற

தென்னவன்: பாண்டியன்

சீர்: சிறப்பு

புயங்கன்: புயங்கக்கூத்தை ஆடியவன்

குயிற்பிள்ளாய்: சிறு குயிலே

நான்முகன்: பிரம்மன்

ஓவி: சோர்ந்து

உன்னி: எண்ணி

ஒண்தழல்: ஒளிநிறைந்த தழல்

மெய்யன்: மெய்ப்பொருளானவன்

பரிப்பாகன்: குதிரைப்பாகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.