ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 23 – செத்திலாப்பத்து – 1

செத்துஇலாப் பத்து. அதாவது, இறைவனை எண்ணி மனம் மகிழ்ந்து, இன்னும் உன்னிடம் சேராமல் நான் இந்த உடலோடு இருக்கிறேனே என்று வருந்திப் பாடிய பாடல்கள்.

News image
Updated On :28 நவம்பர் 2015, 9:10 am

என்.சொக்கன்

செத்துஇலாப் பத்து. அதாவது, இறைவனை எண்ணி மனம் மகிழ்ந்து, இன்னும் உன்னிடம் சேராமல் நான் இந்த உடலோடு இருக்கிறேனே என்று வருந்திப் பாடிய பாடல்கள்.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

144

பாடலின்பம்

பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும்

புதுமலர்க் கழல் இணையடி பிரிந்தும்

கையனேன் இன்னும் செத்திலேன், அந்தோ,

விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்,

ஐயனே, அரசே, அருள்பெரும்கடலே,

அத்தனே, அயன்,மாற்கு அறியஒண்ணாச்

செய்ய மேனியனே, செய்வகை அறியேன்,

திருப்பெருந்துறை மேவிய சிவனே.

*

புற்றுமாய் மரமாய்ப் புனல் காலே

உண்டியாய் அண்டவாணரும் பிறரும்

மற்று யாரும் நின் மலர்அடி காணா

மன்ன என்னைஓர் வார்த்தையுட்படுத்துப்

பற்றினாய், பதையேன், மனம் மிக உருகேன்,

பரிகிலேன், பரியா உடல்தன்னைச்

செற்றிலேன், இன்னும் திரிதருகின்றேன்,

திருப்பெருந்துறை மேவிய சிவனே.

பொருளின்பம்

தலைவனே, அரசனே, அருட்பெரும்கடலே, தந்தையே, பிரம்மன், திருமாலால் அறிய இயலாத சிவந்த மேனியனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

இந்தப் பொய்யனுடைய உள்ளத்தில் நுழைந்து உருகச்செய்தாய், சிவபெருமானே, அமுதம் ஊறுகின்ற உன் புதுமலர்த் திருவடிகளைச் சேராமல் நான் பிரிந்திருக்கிறேன், ஆனாலும், சிறியவனான நான் இன்னும் சாகவில்லை, வெறுமனே உயிர்வாழ்கிறேன், அடடா, நான் விழித்திருந்து என்ன பயன்? உன்னைச் சிந்திக்காமல் இருக்கிறேனே!

*

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, என் தலைவனே,

விண்ணுலகத் தேவர்களும் பிறரும் உன்னுடைய திருவடிகளை அடைவதற்காகப் புற்றைப்போலவும் மரத்தைப்போலவும் (அசைவில்லாமல்) தண்ணீரையும் காற்றையுமே உணவாகக் கொண்டு தவம் செய்கிறார்கள், அப்போதும், அவர்களால் உன் திருவடிகளைக் காண இயலவில்லை.

ஆனால் நீயோ, ஒரே ஒரு சொல்லின் மூலம் என்னை உன் அடியவர்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டாய்,

அந்தப் பெருமைக்கு நான் தகுதியுள்ளவனா என்று எண்ணி நான் பதைபதைக்கவில்லை, உன் கருணையை நினைத்து உள்ளம் உருகவில்லை, என் நிலையை எண்ணி வருந்தவில்லை, பாரமான இந்த உடலை அழித்துக்கொள்ளாமல் திரிகிறேன்.

சொல்லின்பம்

அகம்நெக: உள்ளம் நெகிழ

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

கையனேன்: சிறியவன்

அத்தனே: தந்தையே

அயன்: பிரம்மன்

செய்ய மேனியனே: சிவந்த மேனியை உடையவனே

மேவிய: எழுந்தருளியிருக்கும்

உண்டி: உணவு

அண்டவாணர்: தேவர்கள்

மன்ன: மன்னனே

பரிகிலேன்: வருந்தவில்லை

பரியா: உருகாத

செற்றிலேன்: வெறுக்கவில்லை

திரிதருகின்றேன்: திரிகிறேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.