ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 13 – திருப்பூவல்லி - 7

சிறப்பு நிறைந்த சிவபெருமானின் திருவடிகளில் திண்மையான சிலம்புகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்பதற்கு

News image
Updated On :5 அக்டோபர் 2015, 9:33 am

என்.சொக்கன்

திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.

தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.

92

பாடலின்பம்

சீர்ஆர் திருவடித் திண்சிலம்பு சிலம்புஒலிக்கே

ஆராத ஆசையதாய் அடியேன் அகம்மகிழ,

தேர்ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடம்செய்

பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ.

*

மாஆர ஏறி, மதுரைநகர் புகுந்துஅருளி,

தேவுஆர்ந்த கோலம் திகழ, பெருந்துறையான்

கோஆகி வந்துஎம்மைக் குற்றேவல் கொண்டுஅருளும்

பூஆர் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ.


பொருளின்பம்

சிறப்பு நிறைந்த சிவபெருமானின் திருவடிகளில் திண்மையான சிலம்புகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்பதற்கு என் மனத்தில் தீராத ஆசை உண்டானது,

தேர்கள் சிறப்பாகச் செல்லும் அகன்ற வீதிகளைக் கொண்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் என் உள்ளம் மகிழும்படி திருநடனம் செய்தான், அந்தப் பேரானந்தத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

*

குதிரையின்மேல் ஏறி மதுரைநகருக்குள் புகுந்தான் சிவபெருமான், தன்னுடைய தெய்வ வடிவத்தை அழகுறக் காட்டினான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தலைவனாக வந்து நம்மை ஆட்கொண்டான், எல்லாருக்கும் அருள் பொழியும் அவனுடைய மலர்த் திருவடிகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

சொல்லின்பம்

சீர்: சிறப்பு

ஆர்: பொருந்திய

திண்: திண்மையான

சிலம்பு ஒலி: எழுப்பும் ஒலி

ஆராத: தீராத

தேர் ஆர்ந்த: தேர்கள் பொருந்திச் செல்கிற

நடம்: நடனம்

மா: குதிரை

ஆர: சிறப்பாக

தேவு: தெய்வம்

ஆர்ந்த: நிறைந்த

கோலம்: அழகு

கோ: தலைவன்

குற்றேவல்: அடிமையாக்கிக்கொள்ளுதல்

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.