பகுதி 14 – திருவுந்தியார் -2
நான்முகனின் தந்தையான திருமால், தக்கனின் வேள்வியில் தனக்குரிய அவிர்ப்பாகத்தை ஏற்றுக்கொண்டான்,


உந்தி என்பது, பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. ஓரிருவரோ, பலரோ பந்தை உந்தச்செய்து விளையாடுவார்கள். அதனால் ‘உந்தி’ என்று பெயர் வந்தது. அந்த விளையாட்டில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீபற,
உருத்திரநாதனுக்கு உந்தீபற.
*
ஆ!ஆ! திருமால் அவிப்பாகம் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீபற,
சதுர்முகன் தாதை என்று உந்தீபற.
*
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற,
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.
*
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே ஏடி, உந்தீபற,
பணைமுலை பாகனுக்கு உந்தீபற.
பொருளின்பம்
முன்பு சிவபெருமானை மதிக்காமல் தக்கன் ஒரு வேள்வி நடத்தினான், அதனால் கோபமுற்ற அவர் வீரபத்திரராக அங்கே வந்து தன் பூதப்படைகளோடு தாக்கினார், அந்த வேள்வி அழிந்தது, தேவர்கள் தப்பி ஓடினார்கள், உருத்திரநாதனான அந்தப் பெருமானின் தன்மையைச் சொல்லி உந்தீபற.
*
நான்முகனின் தந்தையான திருமால், தக்கனின் வேள்வியில் தனக்குரிய அவிர்ப்பாகத்தை ஏற்றுக்கொண்டான், அதனால் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளானான், ஆனாலும், அதே சிவனின் கருணையால் திருமால் உயிர் பிழைத்தான், அதைச் சொல்லி உந்தீபற.
*
வெம்மையான அக்னி, தக்கனுடைய வேள்வியின் அவிர்ப்பாகத்தை விழுங்குவதற்காகத் திரட்டினான், அப்போது, வீரபத்திரர் அவனுடைய கையைத் துண்டித்துவிட்டார், அதனால், வேள்வி கலங்கியது, அதனைச் சொல்லி உந்தீபற.
*
தக்கன் தன்னுடைய மகளாகிய பார்வதியையே பகைத்துப் பேசினான், என்றாலும், அவனை இன்னும் அவளுடைய தந்தையாகவே சிவபெருமான் பார்க்கிறான், பருத்த மார்பகங்களைக் கொண்ட அம்மையைத் தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்ட அந்தப் பெருமானின் புகழைச் சொல்லி உந்தீபற.
சொல்லின்பம்
சாடிய: கோபித்த
ஓடியவா: ஓடிய தன்மை
சதுர்முகன்: நான்முகன்/ பிரம்மா
தாதை: தந்தை
வெய்யவன்: வெம்மையானவன்
அங்கி: அக்னி/ நெருப்பு
தறித்தான்: வெட்டினான்
பணை: பணைத்த/ பெருத்த
பாகன்: பாகமாகக் கொண்டவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...