ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 14 – திருவுந்தியார் -3

விண்ணோர் தலைவனான இந்திரன், தக்கனுடைய வேள்வியில் பங்கேற்றான், அதனால் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளானான்,

News image
Updated On :9 அக்டோபர் 2015, 10:03 am

என்.சொக்கன்

உந்தி என்பது, பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. ஓரிருவரோ, பலரோ பந்தை உந்தச்செய்து விளையாடுவார்கள். அதனால் ‘உந்தி’ என்று பெயர் வந்தது. அந்த விளையாட்டில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

95

பாடலின்பம்

புரந்தரனார் ஒரு பூங்குயில்ஆகி

மரம்தனில் ஏறினார் உந்தீபற,

வானவர்கோன் என்றே உந்தீபற.

*

வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை

துஞ்சினவா பாடி உந்தீபற,

தொடர்ந்த பிறப்புஅற உந்தீபற.

*

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்

கூட்டியவா பாடி உந்தீபற,

கொங்கை குலுங்க நின்று உந்தீபற.

*

உண்ணப் புகுந்த பகன் ஒளித்துஓடாமே

கண்ணைப் பறித்தவாறு உந்தீபற,

கருக்கெட நாம்எலாம் உந்தீபற.

பொருளின்பம்

விண்ணோர் தலைவனான இந்திரன், தக்கனுடைய வேள்வியில் பங்கேற்றான், அதனால் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளானான், ஒரு பூங்குயிலாக வடிவமெடுத்து மரத்தில் ஏறி உயிர் தப்பினான், அதனைப் பாடி உந்தீபற.

*

சினம் மிகுந்த வியாத்திரனார் தக்கனுக்காக வேள்வி நடத்தினார் (அல்லது, சினம் மிகுந்து, அதனால் வழிமாறிச் சென்ற தக்கன் ஒரு வேள்வி நடத்தினார்), இந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக, அவருடைய தலை போயிற்று, அவரது தலையை வெட்டிய வீரபத்திரராகிய சிவபெருமானை வணங்கினால் நம் பிறப்பு வெட்டுப்படும் என்பதைப் பாடி உந்தீபற.

*

தலை வெட்டுப்பட்ட தக்கனின் உடலில் ஓர் ஆட்டுத்தலையைச் சேர்த்தார் சிவபெருமான், மார்பகங்கள் குலுங்குமாறு நின்று ஆடி, அந்தத் தன்மையைப் பாடி உந்தீபற.

*

பகன் என்பவன் தக்கனுடைய வேள்வியில் தனக்குரிய அவிர்ப்பாகத்தை உண்ண வந்தான். அவன் மறைந்து ஓடிவிடாமல் அவனுடைய கண்களைப் பறித்தார் சிவபெருமான். நம்முடைய பிறவிகளெல்லாம் அழியும்படி இந்தச் செயலைப் பாடி உந்தீபற.

சொல்லின்பம்

வானவர்: விண்ணோர்

கோன்: தலைவன்

வெஞ்சினம்: மிகவும் கோபம்

வியாத்திரனார்: புரோகிதர் (அல்லது) தவறான வழியில் பயணம் செய்பவர்/ தக்கன்

துஞ்சினவா: வீழ்ந்த தன்மை

கொங்கை: மார்பகம்

கரு: பிறவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.