ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 15 – திருத்தோணோக்கம் 4

குற்றமில்லாத, சிறந்த சண்டீசர் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அவருடைய தந்தையான அந்தணர் எச்சதத்தர் அந்தப் பூசையைச் சிதைத்தார்.

News image
Updated On :14 அக்டோபர் 2015, 7:05 am

என்.சொக்கன்

தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

101

பாடலின்பம்

தீதுஇல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்

சாதியும் வேதியன் தாதைதனைத் தாள்இரண்டும்

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்

பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்.

*

மானம் அவிந்தோம், மதிமறந்தோம், மங்கைநல்லீர்,

வானம் தொழும் தென்னன் வார்கழலே நினைந்துஅடியோம்

ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே

ஆனந்தம்ஆகிநின்று ஆடாமோ தோள்நோக்கம்.

பொருளின்பம்

குற்றமில்லாத, சிறந்த சண்டீசர் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அவருடைய தந்தையான அந்தணர் எச்சதத்தர் அந்தப் பூசையைச் சிதைத்தார். அதனால், சண்டீசருக்குக் கோபம் வந்து தன்னுடைய தந்தையின் கால்களைத் துண்டித்துவிட்டார். சண்டீசர் செய்த அந்தப் பாவச் செயலைச் சிவபெருமான் புண்ணியமாக மாற்றி அருளினார், தேவர்களும் தொழும்படி சண்டீசரைச் சிறந்து விளங்குமாறு அருள் செய்தார், அந்தத் தன்மையைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.

*

நல்ல பெண்களே, விண்ணவர் தொழுகின்ற தென்னன் சிவபெருமானின் திருவடிகளையே நாம் நினைத்திருந்தோம், அதனால், பிறர்மீது ஒருதலைப்பட்சமாக அபிமானம் காட்டும் குணம் அழிந்தது, தீய புத்திகள் மறைந்தன, அந்த ஆனந்தக் கூத்தனின் அருளை நாம் பெற்றுவிட்டால், நாமும் அவ்வாறே ஆனந்தமயமாகி நின்று தோள்நோக்கம் ஆடுவோம்.

சொல்லின்பம்

தீதுஇல்லை: தீமை இல்லாதவர்

மாணி: மாண்புள்ளவர்/ பிரம்மச்சாரி

சிவகருமம்: சிவபூசை

வேதியன்: அந்தணன்

தாதை: தந்தை

தாள்: கால்

சேதிப்ப: வெட்ட

பாதகமே: பாவமே

சோறு: புண்ணியம்

பற்றினவா: மாறிப் பற்றிய தன்மை

மானம்: அபிமானம்

மதி: புத்தி/ இங்கே தீய புத்தியைக் குறிக்கிறது

வார்: நீண்ட

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

நினைந்து: நினைத்து

அவ்வணமே: அவ்வாறே/ அவரைப்போலவே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.