பகுதி 15 – திருத்தோணோக்கம் 6
பிரம்மன், திருமால் இருவரும் பேதைமையால், ‘நானே பரம்பொருள்’ என்று கூறிவந்தார்கள்.


தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
காமன் உடல், உயிர் காலன், பல் காய்கதிரோன்,
நாமகள் நாசி, சிரம் பிரமன், கரம் எரியைச்
சோமன் கலை, தலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோள்நோக்கம் ஆடாமோ.
*
பிரமன், அரி என்று இருவரும் தம் பேதைமையால்
பரமம், யாம் பரமம் என்றவர்கள் பதைப்புஒடுங்க
அரனார் அழல்உருவாய் அங்கே அளவுஇறந்து
பரம்ஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ.
பொருளின்பம்
மன்மதனின் உடல், எமனின் உயிர், காய்கின்ற சூரியனின் பல், கலைமகளின் மூக்கு, பிரம்மனின் தலை, அக்னியின் கை, சந்திரனின் கலை, தக்கன், எச்சனுடைய தலை ஆகியவற்றை நீக்கி அவர்களைச் சிவபெருமான் தூய்மைப்படுத்தினான். அந்தத் தன்மையைச் சொல்லி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.
*
பிரம்மன், திருமால் இருவரும் பேதைமையால், ‘நானே பரம்பொருள்’ என்று கூறிவந்தார்கள். அப்போது, யாராலும் அளக்க இயலாத சுடர்வடிவத்தில் சிவபெருமான் அங்கே தோன்றினார், நிஜமான பரம்பொருள் தானே என்பதை உணர்த்தி அவர்களுடைய கர்வத்தை ஒடுக்கினார். அந்தத் தன்மையைச் சொல்லி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.
சொல்லின்பம்
காமன்: மன்மதன்
காலன்: எமன்
கதிரோன்: சூரியன்
நாசி: மூக்கு
சிரம்: தலை
கரம்: கை
எரி: நெருப்பு/ அக்னி
சோமன்: சந்திரன்
செய்தவா: செய்த தன்மை
பரமம்: பரம்பொருள்
பதைப்பு: கர்வம்
அழல்: நெருப்புச்சுடர்
அளவுஇறந்து: அளவில்லாமல்
பரம்: சிறப்பு
நின்றவா: நின்ற தன்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...