பகுதி 40 – குலாப் பத்து - 2
எலும்புகளை உள்ளிருந்து உருக்கினான், நல்வினை, தீவினை என்கிற இரு வினைகளின் வலிமையை அழித்தான்,


குலாவுதல் என்றால் மகிழ்ச்சியாக இருத்தல் என்று பொருள். தில்லையில் சிவபெருமானின் ஆடலைக்கண்டு மகிழ்ந்தது பற்றி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இவை.
‘குலா’ என்ற சொல்லுக்கு விளக்கம் / விளங்கித் திகழ்தல் என்ற பொருளும் உண்டு. தில்லையில் சிவபெருமான் சிறப்பாகத் திகழ்வது பற்றி மகிழ்ந்து பாடிய பாடல்கள் என்றும் சொல்லலாம்.
இவை தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
பாடலின்பம்
என்பு உள்உருக்கி, இருவினையை ஈடுஅழித்துத்
துன்பம்களைந்து, துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ளவற்றை முழுதுஅழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
*
குறியும் நெறியும் குணமும்இலா, குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார், பிறிவுஅரிய பெற்றியனைச்
செறியும் கருத்தில் உருத்துஅமுதாம் சிவபதத்தை
அறியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
பொருளின்பம்
எலும்புகளை உள்ளிருந்து உருக்கினான், நல்வினை, தீவினை என்கிற இரு வினைகளின் வலிமையை அழித்தான், துன்பங்களைப் போக்கினான், நன்மை, தீமை என்கிற இருமையைத் தூய்மையாக்கினான் (மாறுபாடு இல்லாத மனத்தைக் கொடுத்தான்), முன்பு ஏற்பட்ட துன்பங்களெல்லாம் முழுக்க அழியும்படி எனக்குள் புகுந்தான் சிவபெருமான்,
என் மீது அன்புவைத்த அந்த ஒளி நிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.
*
குறிக்கோள், ஒழுக்கம், பண்பு இல்லாதவர்களோடு சேர்ந்திருக்க விரும்பாமல், அவர்களைப் பிரிந்து வருகிறவர்கள் எம்பெருமானின் அடியவர்கள், அத்தகைய அடியவர்களைப் பிரிந்து செல்ல விரும்பாத தன்மை கொண்டவன் சிவபெருமான், அன்புள்ளவர்களின் கருத்தில் செறிவாக, தெளிவாகத் தோன்றும் அமுதமாக, சிவபதமாகத் தோன்றுகிறவன்,
எல்லாவற்றையும் அறிகின்ற அந்த ஒளிநிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.
சொல்லின்பம்
என்பு: எலும்பு
இருவினை: நல்வினை, தீவினை என்கிற இரண்டு வினைகள்
ஈடழித்து: வலிமையைப் போக்கி
துவந்துவங்கள்: இருமைத்தன்மைகள்
குலாத்தில்லை ஆண்டான்: விளங்கும் தில்லை ஆண்டவன் / சிவபெருமான்
குறியும் நெறியும் குணமும்: குறிக்கோளும் ஒழுக்கமும் பண்பும்
குழாங்கள்: குழுக்கள்
பிறியும்: பிரியும்
பிறிவு: பிரிவு
பெற்றியன்: தன்மையைக்கொண்டவன்
செறியும் கருத்தில் உருத்து: கருத்தில் செறிவாக, தெளிவாகத் தோன்றி
சிவபதம்: சிவபதவி / சிவபக்தர்கள் அடையும் உயர்ந்த நிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...