ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 41 – அற்புதப் பத்து - 5

பிறவியாகிய இந்தக் காட்டில் நான் சிக்கிக் கிடந்தேன், பயனில்லாமல் திரிகிற நாயைப்போல அங்குமிங்கும் சென்றுவந்தேன்,

News image
Updated On :26 பிப்ரவரி 2016, 6:41 am

என். சொக்கன்

சிவபெருமானின் அற்புதங்களை வியந்து பாடிய பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

232

பாடலின்பம்

பொச்சையான இப்பிறவியினில் கிடந்து நான் புழுத்துஅலை நாய்போல
இச்சைஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை
இச்சகத்து அரி,அயனும் எட்டாத தன் விரைமலர்க்கழல் காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே.

*

செறியும் இப்பிறப்பு, இறப்பு இவை நினையாது, செறிகுழலார் செய்யும்
கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன், எம்பிரான், எல்லைஇல்லாத தன் இணைமலர்க்கழல் காட்டி
அறிவுதந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே.

பொருளின்பம்

பிறவியாகிய இந்தக் காட்டில் நான் சிக்கிக் கிடந்தேன், பயனில்லாமல் திரிகிற நாயைப்போல அங்குமிங்கும் சென்றுவந்தேன், பெண்கள் விரும்பும் செயல்களைச் செய்து, அவர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொண்டு திரிந்தேன்,

அப்படிப்பட்ட எனக்கு, இந்தப் பூமியிலே, திருமாலும் பிரம்மனும் காண இயலாத தன்னுடைய மணம் வீசும் மலர்த் திருவடிகளைக் காட்டி அருளினான் சிவபெருமான், என்னையும் அவன் ஆண்டுகொண்டான்,

அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!

*

மேலும் மேலும் நெருக்குகிற இந்தப் பிறப்பு, இறப்பு என்கிற பிறவிச்சுழலை நான் எண்ணவில்லை, அடர்த்தியான கூந்தலைக்கொண்ட பெண்கள் செய்கிற பொய்யான, கீழ்த்தரமான செயல்களையும், அவர்களுடைய கெண்டைமீன் போன்ற அழகிய கண்களையும் எண்ணியே கிடந்தேன்,

அப்படிப்பட்ட எனக்கு, இறைவன், எம்பிரான், எல்லையில்லாத தன்னுடைய மலர்த் திருவடிகளைக் காட்டி அருளினான், அந்தச் சிவபெருமான் மெய்ப்பொருளை உணரும் அறிவை எனக்குத் தந்தான், என்னை ஆண்டுகொண்டான்,

அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!

சொல்லின்பம்

பொச்சை: காடு

புழுத்து அலை நாய்: பயனின்றித் திரிகிற நாய்

இச்சைஆயின: விரும்பியவை

ஏழையர்க்கே: பெண்களுக்கே

இணங்கி: ஏற்றுக்கொண்டு

இச்சகத்து: இந்தப் பூமியில்

அயன்: பிரம்மன்

விரைமலர்க் கழல்: மணம் வீசும் மலர்போன்ற திருவடிகள் / கழல் என்ற வீர ஆபரணத்தை அணிந்த சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கின்றன

அச்சன்: தந்தை

செறியும்: மேலும் நெருக்குகின்ற

செறிகுழலார்: அடர்த்தியான கூந்தலைக் கொண்டவர்கள்

கிறியும்: பொய்யான செய்கைகளும்

உன்னியே: நினைத்தே

எம்பிரான்: எங்கள் தலைவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.