ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 47 – திருவெண்பா - 2

என்னுடைய பழைய வினைகள் இரண்டையும் வேரோடு அறுத்து எனக்குமுன் காட்சி கொடுத்தான், இனி நான் பிறக்காதபடி என்னுடைய பிறவிச்சுழலை அறுத்தான் எம்பெருமான்,

News image
Updated On :16 மார்ச் 2016, 7:25 am

என். சொக்கன்

சிவபெருமானைப் பற்றிய வெண்பாக்களைக் கொண்ட பகுதி இது.

திருப்பெருந்துறையில் அருளப்பட்ட பாடல்கள் இவை. பதினொரு பாடல்களின் தொகுப்பு.

253

பாடலின்பம்

முன்னை வினைஇரண்டும் வேர்அறுத்து முன்நின்றான்

பின்னைப் பிறப்புஅறுக்கும் பேராளன், தென்னன்,

பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன்,

வரும்துயரம் தீர்க்கும் மருந்து.

*

அறையோ அறிவார்க்கு, அனைத்துஉலகும் ஈன்ற

மறையோனும் மாலும் மால்கொள்ளும் இறையோன்,

பெருந்துறையுள் மேய பெருமான், பிரியா(து)

இருந்துஉறையும் என்நெஞ்சத்து இன்று.

பொருளின்பம்

என்னுடைய பழைய வினைகள் இரண்டையும் வேரோடு அறுத்து எனக்குமுன் காட்சி கொடுத்தான், இனி நான் பிறக்காதபடி என்னுடைய பிறவிச்சுழலை அறுத்தான் எம்பெருமான்,

அந்தப் பெருமைக்குரிய தலைவன், தென்னன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருங்கருணையாளன், சிவபெருமான், இனிவரும் துன்பங்கள் அனைத்தையும் தீர்க்கும் மருந்து அவனே.

*

அத்தனை உலகங்களையும் ஈன்ற பிரம்மனும் திருமாலும் தேடித் திணறி மயக்கம்கொள்ளும்படி அவர்கள் முன் ஜோதி வடிவாகக் காட்சி தந்த இறைவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், இன்று என் உள்ளத்தில் தங்கினான், இனி எப்போதும் என்னைப் பிரியமாட்டான், இந்த விவரத்தை அனைவரும் அறிவார்கள், இதைச் சொல்லவும் வேண்டுமோ!

சொல்லின்பம்

முன்னை: முன்பு

பின்னை: பின்பு

பேராளன்: பெருமையை உடையவன்

தென்னன்: தென்னாட்டின் இறைவன் / சிவபெருமான்

மேய: எழுந்தருளிய

அறையோ: சொல்லவேண்டுமோ?

ஈன்ற: வழங்கிய

மறையோன்: பிரம்மன்

மால்கொள்ளும்: மயங்கும்

உறையும்: வசிப்பான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.