பகுதி 7-ல் இப்படிச் சொல்லியிருந்தோம் -
"எப்படிப் போட்டாலும் மா மா காய். சின்ன எச்சரிக்கை. இதை இன்னமும் முழுமையாக விளக்கவில்லை".
இந்த மா மா காய் என்பது தாளக்கணக்குக்கு சரியாக வரும். எழுத்துக் கணக்குக்கு சரியாக வராது. அதனால்தான் தாளத்தால் அளவொத்து வருவது விருத்தம் என்றார்கள்.
சற்று விளக்குகிறேன். மா என்றால் அது தேமா-வாகவும் இருக்கலாம். புளிமா-வாகவும் இருக்கலாம். காய் என்றால், தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் (அதாவது தானானா, தனனானா, தானனனா, தனனனனா). ஒவ்வொன்றிலும் எழுத்து வித்தியாசம் வருவதைப் பார்க்கலாம். இப்படியெல்லாம் இருந்தாலும் தாளத்தால் அளவொத்து இருக்க முடியும். தானா நான்கு மாத்திரை, தனனா அதே நான்கு மாத்திரை. ஆகவே விருத்தம், தாளத்தால் ஒத்தாலும் எழுத்தின் அளவால் ஒத்து வராமல் இருக்கும்.
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? திருப்புகழ் அமைந்திருக்கும் வண்ணவிருத்த அமைப்பில், அப்படி என்ன தனிப்பட்ட சிறப்பு என்பதைப் புரிந்துகொள்வதில் இது இரண்டாவது படி. ஏழாவது பகுதியில் ‘இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறோம்’ என்றோமே, அது முதற்படி. அடுத்த அடுத்த படிகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வருவோம்.
இப்போது, நேற்றைய பாடலான நினது திருவடிக்குப் பொருள் பார்ப்போம்.

இது விநாயகர் வணக்கம் என்றோம். ஆனால், விநாயகரை எதற்கு வணங்குகிறார் என்றால், ‘நான் முருகனை எப்போதும் நினைத்து வணங்க எனக்கு புத்தி கொடுத்திடு’ என்று துதிக்கிறார்.

தெய்வங்களுக்குள் வேறுபாடு பார்க்காதவர் குருநாதர். அவருக்கு முருகனைப்போலவே கணபதி, சிவன், திருமால், ராமன், கண்ணன், என்று பலவேறு வடிவங்களையும் போற்றிப் பாடுவதில் தயக்கமே இருக்காது. அதுவும் பராசக்தியைப் பாடுவதென்றால், ஒரு முழுமையான சாக்தரைப்போல் பாடுவார். திருவகுப்பில் இரண்டாம் பாடலான தேவேந்திர சங்க வகுப்பில், படிக்குப் பாதி பராசக்திதான். இப்போது பாடலுக்கு வருவோம்.

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட - பாடல் விநாயகரைப் பற்றியதென்றால், ‘நினது’ என்பது யாரைக் குறிக்கிறது? ‘நினது திருவடி’ என்றால், அது விநாயகரைக் குறிக்கும் வாய்ப்பே அதிகம். ஆனால், இங்கே நினது திருவடி, சத்தி, மயில், கொடி என்று சொல்வதால், இந்தத் திருவடி முருகனுடையது. சத்தி எனப்படுவது வேலைக் குறிக்கும். வள்ளி என்ற இச்சா சக்தியையும், தேவைசேனையாகிய கிரியாசக்தியையும், வேலாகிய ஞானசக்தியையும் ஒன்றாகச் சேர்த்த முச்சக்தியையும் குறிக்கலாம் என்று தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை உரைசெய்கிறார். சத்தி என்பது வேல், வேல் என்பது ஞானம் என்று திருமுருக கிருபானந்த வாரியார் தன் உரையில் குறிப்பிடுகிறார். அதாவது, முருகா, உன்னுடைய திருவடியையும் வேலையும் மயிலையும் கொடி(யில் உள்ள சேவலையும்) என் கருத்தில் எப்போதும் இருத்தும் புத்தி கொடுத்திட…

கவனிக்கவும். புத்தி கொடுத்திடு என்று சொல்லவில்லை. கொடுத்திட. இங்கே முருகனுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்க. இப்ப விநாயகர் உள்ளே வருகிறார்.

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் - நிறைய அமுது (பல்வகையான சோறு), முக்கனிகள், அப்பம், பொருந்திய பால், தேன்,

அதுக்கப்புறம்?

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி - முறுக்கைப் போன்ற பண்டங்களுடைய பெயருக்கு இலக்கிய ஆட்சி வேண்டுமென்று தேடுபவர்கள், அருணகிரிநாதரிடம் தேடலாம். நெடிய, வளை, அதாவது நீண்டதாகவும் வளைந்திருப்பதுமான முறி. முறித்துத் தின்னக்கூடியதான முறுக்கு; இக்கு. இக்ஷு என்பதன் தமிழ் வடிவம். கரும்பு, லட்டு, நிறவில் - நிறமும் ஒளியும் உடைய அரிசி, பருப்பு, அவல், எள், பொரி…

அதுக்கப்புறம்?

நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் - நிகரே இல்லாத சுவையை உடைய கதலி வர்க்கமும் — வாழைப்பழம் — மலைவாழை, மொந்தன், பூவன் என்று வகைவகையான வாழை, கூடவே எல்லாம் முடிந்த பிறகு குடிக்க இளநீர். இப்ப, பட்டியலுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம். கணநாதர் நேரில் வந்துவிட்டார்.

மனது மகிழ்வொடு தொட்ட கரத்து - மனமகிழ்ச்சியோடு தொட்டு ஆசி வழங்கும் கையன். அந்தக் கை எப்படிப்பட்ட கை?

ஒரு மகர சலநிதி வைத்த துதி கர - மீன்கள் நிறைந்ததாகிய, சலநிதி - கடலில் வைத்த துதிக்கையாகிய கரம்.

அது என்ன, கடலுக்குள் துதிக்கையை வைத்தது? இந்தக் கடலை சகலரும் படாதபாடு படுத்தியிருக்கிறார்கள். முருகன் கடலை வற்றடித்திருக்கிறான். ராமர், சேதுபந்தனத்துக்காக கடல் சீறியிருக்கிறார். விநாயகர் தன் பங்குக்குச் செய்ததாகப் புராணங்கள் கூறுவது இது. தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்தபோது, கடைவதற்குப் பயன்படுத்திய மந்தரமலை கடலில் அமுங்க, அதைத் திருமால் கூர்மமாக வந்து தாங்க, இறுதியில் எல்லாம் முடிந்த பிறகு, கூர்மம் கடலை ஓயாமல் கலக்கிக்கொண்டே இருக்க, விநாயகர் கடல் நீரில் துதிக்கையை வைத்து உறிஞ்சினாராம். கடல் நீர் வற்றி, கூர்மம் துதிக்கைக்குள் உறிஞ்சப்பட்டுவிட்டதாம்!

‘திரைபொரு வேலைநீர் ஒன்று பூட்கை நெடுங்கரத்துட்புக, நின்றுரிஞ்ச, அந்நீரொடும் ஆமை… கொடுங்கரம் புக்கதால்’ என்று கூர்மாவதாரச் சருக்கத்திலிருந்து, செங்கல்வராய பிள்ளை மேற்கோள் காட்டுகிறார்.

ஆக, மனது மகிழ்வொடு தொட்டகை, கடலை உறிஞ்சிய கை, துதிக்கை.

இந்தத் துதிக்கையானது -

வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக - வளர்ந்திருக்கும் யானை முகத்தவன், ஒற்றைக் கொம்பை உடையவன், அவனை வலம் வந்து,

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு - விநாயகருக்கு உரிய மலர் (மருவு மலர்) கொண்டு அர்ச்சித்தும், தொத்திர என்று குறுகியிருக்கிறதே, அது தோத்திர. தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டும்,

வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு - கைகளைத் தூக்கிக் காதுகளை (குழைபிடி) பற்றிக்கொண்டு, தொப்பணம், தோப்புக்கரணம் தோர்பிகரணம் என்றெல்லாம் சொல்வோமே, அதைப் போட்டு, குட்டிக்கொண்டு,

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே - வனச (வனஜ) என்பது தாமரை. ‘வனசமாமனாராட, நெடிய மாமியாராட என்றெல்லாம் அடிக்கடி பார்க்கப்போகிறோம். பரிபுரம் என்றால் காற்சிலம்பு. காற்சிலம்பு அணிந்த விநாயகனின் தாமரைப் பாதத்தில் அர்ச்சனை செய்வதை மறக்கமாட்டேன்.

எதற்கு? ‘நினது திருவடி, சத்தி மயில், கொடி, நினைவு கருதிடு புத்தி கொடுத்திட’!

முருகா உன்னை மறவாமல் இருப்பதற்காக, விநாயகருக்கு இத்தனையையும் படைத்து, அர்ச்சித்து வழிபடுவேன்.

இப்ப விநாயகர் இருக்க, முருகன் பாடலில் முன்னே வந்து நிற்கிறான். அவன் போர் செய்த களத்தில்,

தெனன தெனதென தெத்தென என பல சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல் - அறுபதம் என்றால் ஈ. அது மொய்க்கின்ற ஒலிதான், அந்த தெனன தெனதென. அந்த ஓசையோடு இது எவ்வளவு ஒத்துப்போகிறது பாருங்க. ஈ மொய்க்கும் உதிரப்புனல், ரத்த வெள்ளமும்,

திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை - போர்க்களத்தில் சிதறிவிழுந்து திரண்டு கிடப்பதான சதைக்குவியலும், பித்தப்பைகளும் கொழுப்பும் (நிணம்), சிதறியும் அருகருகேயும் கிடக்கும் அநேகருடைய மூளையும்,

செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் - பிளந்த (செரும) வயிற்றிலிருந்து வெளிப்பட்டுத் தொங்கிக்கொண்டுள்ள ஈரல், குடல், இவையெல்லாம்…

நிரைய அரவ நிறைத்த களத்து இடை - (நிறைய இல்லை, நிரைய), நிரைய என்றால் வரிசை வரிசையாக. நிறைந்த ஓசை, கூக்குரல் (அரவம்) நிறைந்த போர்க்களத்தில்

திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ - மத்தளங்கள் திமித திமிதிமி எனவும், இடக்கைகள் (இடது கையால் பற்றி வாசிப்பதும், உடுக்கு போன்ற வடிவுள்ளதுமான வாத்தியம்) செகசேசே என்று ஒலிக்க

துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட -  துகுதுகுதுகுதுகு என்று ஊதுகுழல்களும் உடுக்கைப் பறைகளும் இடியை மிகவும் ஒத்து முழங்க,

டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை - தவிலோசையைச் சொல்கிறார். சொல்லும்போதே தவில் ஒலிக்கிறது அல்லவா?

இப்படிப்பட்ட போர்க்களத்திலே,

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட - ஒன்றையொன்று பகைக்கும் பேய்கள், கைகளால் தாளமிட்டு பறையொலியாக முழக்கவும்,

இரண பயிரவி சுற்று நடித்திட - ரண பைரவி எனப்படும் போர்க்கள தேவதைகள் சுற்றி வந்து கூத்தாட,

எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே - எதிர்ப்பவர்களான நிசிசரர்களை (இரவில் உலவுபவர்களான அரக்கர்களை) கொன்று பலியிட்டு அருள்பவனாகிய முருகப் பெருமாளே,

உன் திருவடியை மறவாமல் இருக்கும் புத்தியைக் கொடுக்கும்படி கணபதிக்குப் படையலிட்டு, அர்ச்சனை செய்து, தோப்புக்கரணம் போட்டு, குட்டிக்கொண்டு கணபதியின் பாதமலரில் அர்ச்சனை செய்வதை மறவேன்.

நாளைய பாடல், முத்தைத் தரு…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை