மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 435

மலைபோன்றதும் பொன்போன்றதுமான

Updated On :25 டிசம்பர் 2016, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர

 

ஓராது: (எதையும்) ஆழமாகச் சிந்திக்காமல்; அந்தத்தோடே: அழகோடே, அலங்காரத்தோடே (அந்தம் என்பதற்கு அழகு என்றும் ஒரு பொருள்;

ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்

 

ஊடா: ஊடல் கொண்டு; நன்றற்றார் போல் நின்று: நல்ல (ஆடை, ஆபரணம் முதலானவை) இல்லாதவர்களைப் போல நின்று; எட்டா மால்: அளவற்ற மயக்கம், இச்சை;

கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே

 

கூரா அன்பு: மனம் தோயாத அன்பு, பாசாங்கு; அக்கு: எலும்பு, எலும்போடு கூடிய உடல்; உள் குலையாதே: உள்ளம் நிலைகுலையாமல்;

கோடு ஆர் செம் பொன் தோளா நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்

 

கோடு: மலை; கோடாது: வளையாது, தவறாது; என்கைக்கு: என்பதற்கு, என்று சொல்வதற்கு;

தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ

 

தோரா வென்றி: தோல்வியே இல்லாத வெற்றி; மன்றல்: நறுமணம்; தொளை ஆடீ: தொளைத்தவனே;

சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா

 

சூதாய்: சூதாக; சூர் மா: மாமரமாக நின்ற சூரன்;

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே

 

சீர்ஆர்: சீர் மிகுந்த; கொன்றைத் தார்: கொன்றை மாலை; சே: காளை, நந்தி;

தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே.

 

 

ஓராது ஒன்றை பாராது... எந்த ஒன்றையும் யோசிக்காமலும் அதன் உண்மைப் பொருளைப் பார்க்காமலும்,

அந்தத்தோடே வந்திட்டு உயிர்சோர ஊடா... அலங்காரமாக வந்தும் உயிர் சோர்ந்து போகும்படியாக ஊடல்கொண்டும்;

நன்றற் றார்போல் நின்று எட்டாமால் தந்திட்டு உழல்மாதர்... நல்லதாக (ஆடை ஆபரணம் முதலானவை) தமக்கு இல்லாதவர்களைப் போல நின்றும்; அளவில்லாத மயக்கத்தை ஏற்படுத்தியும் திரிகின்ற பெண்களுடைய,

கூரா அன்பிற் சோரா நின்று அக்கு ஓயா நின்று உட்குலையாதே... மனம் தோயாத பாசாங்கான அன்பினாலே சோர்வடைந்தும்; அதனாலே எலும்போடு கூடிய இந்தச் சரீரம் ஓய்ந்து போயும்; மனம் நிலைகுலைந்தும் போகாமல்;

கோடு ஆர் செம்பொற் றோளா... மலைபோன்றதும் செம்பொன்னைப் போன்றதுமான தோள்களை உடையவனே!

நின்சொற் கோடாது என்கைக்கு அருள்தாராய்... உன்னுடைய சொல் (உன்னுடைய சொல்லான இந்தத் திருப்புகழ்) தவறாது (என்றும் துணை நிற்கும்) என்று உலகம் சொல்லும்படியாக உன்னுடைய அருளைத் தரவேண்டும்.  (திருப்புகழைச் சொல்பவர்களுக்கெல்லாம் அது துணை நிற்குமாறு அருள்புரிய வேண்டும்.)

தோரா வென்றிப் போரா மன்றற் றோளா குன்றைத் தொளையாடீ... தோல்வியையே அறியாத வெற்றியை உடைய போர்வீரனே!  நறுமணம் கமழும் மாலைகளை அணிந்திருக்கும் தோள்களை உடையவனே! கிரெளஞ்ச மலையைத் தொளைத்தவனே!

சூதாய் எண் திக்கு ஏயா வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா... சூழ்ச்சியால் எட்டு திசைகளிலும் பொருந்தியவனும்; மாமரமாக நின்றவனுமான சூரன் அஞ்சும்படியாகப் போரிட்ட வேலா!

சீரார் கொன்றைத்தார் மார்பொன்ற சேவேறு எந்தைக்கு இனியோனே... சீர் மிகுந்ததான கொன்றை மாலையை மார்பில் அணிந்து விடையேறும் எந்தையான பரமசிவனுக்கு இனியவனே!

தேனே அன்பர்க்கேயாம் இன்சொற் சேயே செந்தில் பெருமாளே... அன்பருக்குத் தேனாக இனித்தும், அவர்களுக்கேயான இன்சொற்களைக் கொண்டும் இருப்பதான குழந்தையே!  திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

தோல்வியையே அறியாத வெற்றிப் போர்வீரனே!  மணம் வீசுகின்ற மாலைகளை அணிந்த தோளனே!  கிரெளஞ்ச மலையைத் துளைத்தவனே!  சூழ்ச்சியால் எட்டு திசைகளிலும் பொருந்தி இருந்தவனும்; மாமரமாக நின்றவனுமான சூரன் அஞ்சும்படியாகப் போர்புரிந்த வேலனே!  சீர் நிறைந்த கொன்றை மாலையை மார்பில் அணிந்து, விடையேறுபவரான எந்தைக்கு இனியவனே!  தேனே!  அன்பர்களுக்கேயான இனிய சொற்களை உடைய குழந்தையே!  திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

எதையும் சிந்திக்காமலும்; அதன் உண்மையைப் பார்க்காமலும்; அலங்காரம் செய்துகொண்டு வந்து, உயிர் சோர்ந்து போகும்படியாக ஊடல் கொண்டும்; தமக்கென்று நல்லதாக ஆடையாபரணங்கள் இல்லாதவர்கள் போல நடித்தும்; அளவுகடந்த இச்சையைத் தூண்டியும் திரிகின்ற மாதர்களுடைய, மனம் தோயாத வெளிவேஷ அன்பிலே சோர்வடைந்தும்; எலும்புடன் கூடியதான இந்த உடல் தளர்ந்தும் உள்ளம் குலைந்தும் போகாதபடி,

மலைபோன்றதும் பொன்போன்றதுமான தோள்களைக் கொண்டவனே!  உன்னுடைய சொல்லான இந்தத் திருப்புகழ் என்றும் தவறாமல் துணை நிற்கும் என்று உலகோர் சொல்லும்படியாக, இதை ஓதுபவர்களுக்கு துணைநின்று அருள்புரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.