பதச் சேதம் | சொற் பொருள் |
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி
| கட்ட: கஷ்ட; மன்னும்: பொருந்திய, நிலைத்த; அள்ளல்: சேறு; கொட்டி பண்ணும்: கூத்தாடச் செய்யும்; ஐவர்கட்கு: ஐம்புலன்களுக்கு; மன்னும்: பொருந்திய, நிலைத்த; இல்லம்: உடல்; |
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர்
| விஞ்ஞை: விஞ்சை, வித்தை; எண்மை: எண்ணத்தை; உள் உகக்க: மனம் மகிழ; |
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி
| இட்டம்: விருப்பம்; கொட்டி: கொட்டிக் கொடுத்து; |
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான்
| எத்து: ஏமாற்றும்; உள்ளல்: யோசித்ல்; இயல்போதான்: பொருந்துமா; |
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே
| முட்ட உண்மை: முழு உண்மை; செட்டி: உருத்திரசென்மராகத் தோன்றிய முருகன்; முட்ட நன்மை: முழுமையான, உறுதியான நன்மை; விள்ள: விண்டுரைக்க; |
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா
| முத்துவண்ண: முத்தைப் போன்ற நிறமுடைய; சித்ர வண்ண: அழகிய நிறத்தையுடைய; விண்ண: விண்ணுலக; வல்லி: தேவசேனை; |
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலை நாடா
| பட்டம் மன்னு அவ் வல்லி, மட்ட மன்ன வல்லி, பட்ட துன்னு—இவையெல்லாம் கொல்லிப் பாவையைக் குறிப்பவை. விளக்கத்தில் காண்க; |
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.
| வன்னி, அல்லி செச்சை ஆகியவை மலர்கள்; இவற்றில் வன்னி என்பது வன்னி மரம்; செச்சை என்பது வெட்சிப் பூ; மஞ்ஞை: மயில்; |
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி... கஷ்டங்களே நிலைத்திருப்பதும்; சேறு போன்றதும்; ஐம்புலன்களுக்கு நிலையான இருப்பிடமானதுமான இந்த உடலைப் போற்றி,
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி... நான் கற்றுக்கொண்ட வித்தைகளைச் சொல்வதால் (நான் நினைப்பது) சுலபமாக நிறைவேறும் என்று மனம் மகிழும்படியாக எண்ணிக்கொண்டு,
முல்லை நகை மாதர் இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி... முல்லைப் பூவைப் போன்ற பற்களை உடைய பெண்களுடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போல் (என்னிடமுள்ள) நல்ல பொருட்களையெல்லாம் கொட்டிக் கொடுத்தும்;
அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி... அவ்வாறு கொடுத்த பிறகு, இனிமேல் கொடுப்பதற்குப் பொன் இல்லை என்ற நிலை ஏற்பட்டு வெளியேறியும்;
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்றும் இங்ஙன் நைவது இயல்போ தான்... ஏமாற்றுவதற்காகப் பொய்யான வழிமுறைகளை யோசித்தும்; அப்படி யோசித்த பின்னாலும் கையில் எதுவுமில்லாமல் நிற்பதை நினைத்து வருத்தப்பட்டும் இவ்வாறு உள்ளம் நைந்து வருந்துவது தகுமா?
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே... முழுமையான உண்மையைச் சொன்ன உருத்திர சன்மன்* என்ற செட்டியாக அவதரித்து, தெளிவில்லாமலிருந்த புலவர்கள் உறுதிப் பொருளை அறிந்துகொள்ளும்படியாகவும்; முற்றிலும் நன்மை அடையும்படியாகவும் (மெய்ப்பொருளை) விண்டுரைக்க வந்தவனே!
(* முருகன் உருத்திர சன்மன் என்ற செட்டி மகனாக அவதரித்த கதையை, ‘சேவல் விருத்தத்துக்குப் பொருள் சொல்கையில் சொல்லியிருக்கிறோம். இதை நம்முடைய 99ம் தவணையில் பார்க்கலாம்.)
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா... முத்துப் போன்ற நிறத்தையும் அழகிய வண்ணத்தையும் உடையவளும்; முக்தியைத் தரவல்லதான விண்ணுலகத்தைச் சேர்ந்தவளுமான கொடி போன்ற தேவயானையின் மணாளனே!
பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட துன்னு கொல்லி மலை நாடா... வழியிலே அமைக்கப்பட்டிருந்த; மதுவைப் போன்ற மயக்கத்தைத் தர வல்லவளான மோகினிப் பெண்ணான கொல்லிப் பாவை* இருக்கின்ற அடர்ந்த காடுகள் நிறைந்த கொல்லி மலையைச் சேர்ந்தவனே!
(கொல்லி மலையில் உள்ள ஒரு பதுமை. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் இந்தப் பாவையின் சிரிப்பைக் கண்டு மயங்கி உயிர்விடும்படியாக தேவதச்சன் செய்தது.)
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.... பச்சை நிறத்திலுள்ள வன்னியையும்; அல்லியையும்; வெட்சிப் பூவையும் தலையில் அணிந்திருப்பவனே! பச்சை மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே!
சுருக்க உரை
(இறையனார் அகப்பொருளுக்கு எது சிறந்த உரை என்று வாதித்துக் கொண்டிருந்த) புலவர்கள் தெளிவு பெறும்படியாக உருத்திர சன்மன் என்ற செட்டி மகனாக அவதரித்து அவர்களுக்கு மெய்ப் பொருளை உணர்த்தியவனே! முத்தைப் போன்ற அழகான வண்ணத்தைக் கொண்டவளும்; முக்தி தரவல்ல விண்ணுலகத்தவளுமான தேவசேனையம்மையின் மணாளனே! தேவ தச்சனால் அமைக்கப்பட்ட கொல்லிப் பாவை இருப்பதான கொல்லி மலைக்கு உரியவனே! பசிய வன்னியையும்; அல்லியையும் வெட்சியையும் தலைக்கு அணிபவனே! பச்சை மயிலைச் செலுத்துகின்ற பெருமாளே!
கஷ்டங்களுக்கு நிலைக்களனானதும்; சேற்றுக்கு ஒப்பானதும்; ஐம்புலன்கள் நிலை பெற்றிருப்பதற்கு இடமானதுமான இந்த உடலைப் போற்றியும்; கற்றிருக்கும் வித்தைகளை எடுத்துச் சொல்வதால் நினைத்ததை எளிதில் அடையலாம் என்ற நினைபோடு, முல்லை மலர் போன்ற பல்வரிசைய உடைய மாதர்களுடைய விருப்பத்துக்கேற்ப அளவற்ற பொன்னை அவர்களுக்குக் கொட்டிக் கொடுத்து; அவ்வாறு கொடுத்தபின்னர் மேலும் கொடுக்கப் பொன்னில்லையே என்று வெளியே வந்தும்; அந்தப் பொன்னை அடைவதற்காக ஏமாற்றும்படியான பலவகையான பொய்வழிகளை மேற்கொள்ள நினைத்தும்; அப்படி நினைத்தாலும் பொன் பொருள் ஏதும் இல்லாமல் நிற்பதை நினைத்து வருந்தியபடியும் நிற்பது தகுமோ? (இவ்வாறு நிற்காமல் என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

