மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 439

முருகன் அருணகிரியாருக்கு நடன தரிசனம்

Updated On :30 டிசம்பர் 2016, 12:45 pm

பதச் சேதம்

சொற் பொருள்

குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா

 

குருவி என: குருவிக் கூட்டம் என என்று இந்த இடத்தில் பொருள்கொள்ள வேண்டும்; நரித்திரள்: நரிக்கூட்டம்; குறவை: மீன்—கூட்டமாகத் திரிவது;

குமரி கலி துறை முழுகி மனம் துயர் கொடுமை என பிணி கலகமிட திரி குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல்

 

குமரி: குமரிப் பெண்கள்; கலித்துறை: மனக்கலக்கத்தை உண்டாக்கும் வழி—கலி: (இங்கே) துளக்கம் அல்லது மனக் கலக்கம், துறை: போகும் வழி; குலையன்: நிலை கெட்டவன்; புலை: இழிவான; கலியன்: வறியவன்;

மருவு புயத்து இடை பணிகள் அ(ண்)ண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன்

 

மருவு: பொருந்திய; புயத்திடை: தோள்களில்; பணிகள்: ஆபரணங்கள்; அண: அண்ண—நெருங்க, நெருக்கமாக இருக்க; கரிபரி: யானை குதிரை; கலைகள் தரித்து: ஆடைகளை அணிந்து; மதன சரக்கு: மன்மதனுடைய வியாபாரப் பொருள்—Cupid’s commodity; பலக்கு: பல்லக்கு;

வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே

 

வரிய: வரிப்பாடலுக்கு (இசைப் பாடலுக்கு) உரிய; பதத்தின்: சொல்லின்; இருப்பிடம்: இருக்கும் இடம், இருக்கவேண்டிய இடம்; பதச் சரண்: திருவடிகளில் அடைக்கலம் (சரண் புகுதல் என்பது போல);

விருது தனத்தன.... …. …. என குகு என வெகு தாளம்

 

விருது: வெற்றிச் சின்னம், முழக்கம்;

வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறு நெறு என திசை அதிர அடைத்திட மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா

 

வெருவ: அஞ்ச, அச்சத்தை உண்டாக்க; முகிழ்த்து: தோன்றி, பிறந்து, உண்டாகி;

அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை அரியும் மழு கையன் அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள்சேயே

 

திரிப்புரம்: திரிபுரம்—வலித்தல் விகாரம்; அயன்: பிரமன்; அரியும்: அறுக்கும், கொய்யும்; மழு: கோடரி; அளித்தவன்: காத்தவன்;

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே.

 

அமணர்: சமணர்; வசி: கழு; விணமரர் கொடுத்திடும் அரிவை: தேவர்கள் திருமணத்தில் அளித்த தேவானை; குறத்தி: வள்ளி; நடித்து அருள்: நடனமாடி அருள்கின்ற;

குருவி எனப் பல கழுகு நரித் திரள் அரிய வனத்திடை மிருகம் எனப் புழு குறவை எனக் கரி மரமும் எனத் திரி உறவு ஆகா... குருவிக் கூட்டத்தைப் போலவும்; கழுகுக் கூட்டம், நரிக்கூட்டத்தைப் போலவும்; காட்டிலே கூட்டங்களாகத் திரிகின்ற பல மிருகங்களைப் போலவும்; புழுக்களைப் போலவும்; கூட்டங்களாகத் திரிகின்ற மீன்களைப் போலவும் சுற்றிலும் கூட்டங்களாகச் சேர்ந்துகொண்டு திரிகின்றவர்களுடைய தொடர்பு அற்றுப் போக;

குமரி கலித் துறை முழுகி மனத்துயர் கொடுமை எனப் பிணி கலகமிட... குமரிப் பெண்களால் ஏற்படும் கவலையைத் தருகின்ற வழிகளில் மூழ்கிக் கிடந்தும்; மனத்திலே ஏற்படும் துயரமும் கொடுமையும் அவற்றோடு நோயகளும் துன்பத்தை விளைவிக்க;

திரி குலையன் எனப் புலை கலியன் எனப் பலர் நகையாமல்... அலைந்து திரியும் நிலைகெட்டவன் என்றும்; இழிந்த தரித்திரன் என்றும் பலர் என்னைப் பார்த்து பரிகாகசமாகச் சிரிக்காமல்,

மருவு புயத்து இடை பணிகள் அ(ண்)ணப் பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து... தோள்களிலே நெருங்கிப் பொருந்திய ஆபரணங்கள் விளங்க; பல யானைகளும் குதிரைகளும் சூழ்ந்துவர, நல்ல ஆடைகளை அணிந்து,

ஒரு மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன்... இவன் மன்மதன் விற்பதற்காக வைத்திருக்கும் பண்டமோ என்று (பார்த்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக) தங்கப் பல்லக்கில் செல்கின்ற அத்தகைய வாழ்வை நான் தேடவில்லை.

வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பதச் சரண் மருவு திருப்புகழ் அருள... வரிப்பாடலுக்கானதும் (அல்லது இசைப்பாடலுக்கானதும்) அருவிபோலப் பெருகுவதுமான என்னுடைய சொற்கள்; சென்று அடையவேண்டிய இடம், அடைக்கலத்தைத் தரும் உன்னுடைய திருப்பாதங்களில் பொருந்தச் செய்கின்ற திருப்புகழைப் பாட,

எனக்கு இனி அருள்வாயே... எனக்கு அருள்புரிய வேண்டும்.

விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என வெகு தாளம்வெருவ முகிழ்த்து... பலவகையான—மேளம், மத்தளம், பறை முதலான—தாளக் கருவிகள் வெற்றி முழக்கத்தை ஏற்படுத்தி ஒலிக்க (அதனால்) அச்சம் பிறந்து;

இசை உரகன் முடித் தலை நெறு நெறு என... (அந்த அச்சத்தாலும் மேளங்களின் முழக்கத்தாலும்) புகழை உடைய ஆதிசேடனுடைய மணிமுடியை உடைய தலைகள் நெறுநெறு என்று நொறுங்க (கிரீடங்கள் நொறுங்க);

திசை அதிர அடைத்திட மிகுதி கெடப் பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா... திக்கெல்லாம் அதிர்ச்சியடையும்படியாக; கூட்டமாக—திக்கை அடைத்துக் கொண்டு—வந்த அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக அழியும்படியாகவும்; சிதறும்படியாகவும் வேலை விட்டவனே!

அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடித் தலை உரியும் மழுக் கையன்... அரிய திரிபுரங்கள் எரியும்படியாக நெற்றிக்கண்ணை விழித்தவனும்; பிரமனுடைய முடித்தலையை அரிந்த கோடரியை ஏந்திய கையை உடையவனும்;

அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள்சேயே... எல்லா உலகங்களையும்; அவற்றிலுள்ள எல்லா உயிர்களையும் காப்பவரான சிவனார் அருளிய மகவே!

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு... (திருஞான சம்பந்தராகத் தோன்றி) சமணர்களுடைய உடல் அழியும்படியாக அவர்களைக் கழுவில் அழுத்தியவனே!  தேவர்கள் தந்த பாவையான தேவானையுடனும்; குறவர்கள் தந்தவளான வள்ளியுடனும் விளங்கி;

அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே....அழகிய திருத்தணியிலே நடனமாடியருள்கின்ற* பெருமாளே!

(*முருகன் அருணகிரியாருக்கு நடன தரிசனம் கொடுத்ததைப் பற்றி பல பாடல்களில் குறிப்பிடுகிறார்.  திருச்செந்தூரில் அளித்த நடன தரிசனம் பற்றிய ‘தண்டையணி வெண்டையங் கிங்கிணி’ பாடலை நம்முடைய 130, 131 ஆகிய தவணைகளில் விளக்கமாகக் காணலாம்.  திருத்தணிகையில் கண்ட நடனக் கோலத்தை இங்கே பாடுகிறார்.  தணிகையில் மயிலில் மயில்மீது நடனக்கோலம் காட்டியதை ‘மொகுமொகென நறைகொண்மலர்’ என்ற பாடலில் ‘மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல பெருமாளே’ என்று பாடுகிறார்.  இந்தப் பாடலைப் பின்னொரு நாளில் காண்போம்.)

சுருக்க உரை

பலவகையான மேளங்களும் தாளக் கருவிகளும் பலவகைப்பட்ட ஓசைகளை வெற்றி முழக்கமாக எழுப்ப; அந்த ஒலி ஏற்படுத்திய அச்சத்தால் ஆதிசேடனுடைய முடியிலுள்ள கிரீடங்கள் நெறுநெறென நொறுங்கும்படியாகவும்; திசைகள் அதிர்ச்சியடையும்படியாகவும்; அந்தத் திசைகளை அடைத்துக் கொண்டு கூட்டமாக வந்த அசுரர் சைனியங்கள் கூட்டங் கூட்டமாக அழியும்படி வேலை விடுத்தவனே!  தன்னுடைய நெற்றிவிழியைத் திறந்து திரிபுரங்களை எரித்தவரும்; பிரமனுடைய முடியைக் கொய்த கோடரியை ஏந்தியவருமான சிவபிரான் அருளிய சேயே!  சமணர்களுடைய உடல் அழியும்படியாக அவர்களைக் கழுவேற்றிய திருஞான சம்பந்தராக அவதரித்தவனே!  தேவர்கள் தந்த பாவையான தேவானையோடும், குறவர்கள் தந்த பாவையான வள்ளியோடும் விளங்கி, திருத்தணியில் நடனம் புரிந்தருள்கின்ற பெருமாளே!

குருவிக் கூட்டங்களைப் போலவும்; கழுகுக் கூட்டங்களைப் போலவும்; நரிக் கூட்டங்களைப் போலவும்; காட்டில் திரிகின்ற மிருகக் கூட்டங்களைப் போலவும்; புழுக் கூட்டங்கள், மீன் கூட்டங்களைப் போலவும் கூட்டமாக வீணில் திரிபவர்களுடைய உறவு அற்றுப் போகவேண்டும்; குமரிப் பெண்களால் மனக் கலக்கம் உண்டாகும் பாதைகளில் சென்று அதனால் மனத்துயரும் கொடுமையும் நோயும் ஏற்பட்டுத் திரியும் நிலைகெட்டவன் என்றும்; இழிந்த தரித்திரன் என்றும் உலகம் என்னைப் பரிகசிக்காமல்; தோள்களிலே நல்ல ஆபரணங்கள் நிறைந்திருக்க, பலப்பல யானைகளும் குதிரைகளும் சூழ்ந்துவர, பட்டாடைகளைத் தரித்துத் தங்கப் பல்லக்கில் உலாப் போகின்ற அத்தகைய வாழ்வை நான் தேடவில்லை.  (மாறாக),

இசைப் பாடல்களுக்குப் பொருத்தமாக அருவிபோலப் பொங்குகின்ற என்னுடைய சொற்கூட்டங்கள் ஒவ்வொருவரும் சென்றடைய வேண்டிய இடமானதும் அடைக்கலத்தைத் தருவதுமான உன்னுடைய திருப்பாதங்களை நோக்கிச் செலுத்துவதான திருப்புகழ்ப் பாக்களை நான் பாடும்படியாக எனக்கு அருள்புரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.