பதச் சேதம் | சொற் பொருள் |
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ஆகமத்து உகந்து பேணி
| உருஏறவே: உருப்போடுகின்ற எண்ணிகை ஏறும்படியாக; ஓமம்: ஹோமம், ஓமசித்தி: வேள்விகளால் வரும் பேறுகள்; ஆகமத்து உகந்து பேணி: சிவாகமத்தின் விதிகளை மகிழ்ச்சியோடு அனுசரித்து; |
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும்
| உணர்வு: அறிதல்; மருவாது: பொருந்தி வைக்காமல்; ஓரெழுத்து: பிரணவம்; ஊதை: வாயு, காற்று; ஊதைவிட்டு: மூச்சை விட்டு; |
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ
| தரியாத: நிலை நிற்காத; போதகத்தர்: ஞானவான்கள்; தரியாத போதகத்தர்: நிலைபெற்ற ஞானமில்லாதவர்கள்; ஓரொருத்தர்: ஒரு சிலர்; |
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேன்
| தழலாடி வீதி: நெற்றி; வட்டம் ஒளி: புருவ மத்தியில் வட்டமாகப் பொருந்தியுள்ள ஒளி; போத ஞான: ஞானம் (ஒருபொருட் பன்மொழி); அத்தை: அதை; |
குரு நாடு இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர்
| குருநாடு: Kuru நாடாகிய அத்தினாபுரம்; இராசரிக்கர்: ராஜரீகம், அரசாட்சி செலுத்தியோர்; குந்தி பாலர்: பாண்டவர் ஐவர்; |
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறள் ஆக(ன்) ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி
| குறள் ஆகன்: குறுகிய, வாமன உருவத்தில் வந்த; ஆகன்: உடலை உடையவன்; ஊறுஇல்: குறைவில்லாத; நெட்டை கொண்ட: விக்கிரமனாக வளர்ந்த; |
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா
| புராரி: (முப்)புரத்தை எரித்த சிவன்; |
மதுராபுரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனையே நிமிர்த்த தம்பிரானே.
| மதுராபுரேசர்: மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாத(ருடைய); மெய்க்க: உண்மையான தன்மை வெளிப்பட மாறன்: (கூன்)பாண்டியன்; வெப்பு: சுரம், ஜுரம்; |
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக... ஜபிக்கின்ற மந்திரங்களின் எண்ணிக்கை ஏறும்படியாக ஜபித்து; கோடிக்கணக்கான வேள்விகளால் கிட்டும் பேறுகள் கைகூடிவர;
ஆகமத்து உகந்து பேணி உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது... சிவாகம விதிகளை உவப்போடு கடைப்பிடித்தும்; அறிதலோ ஆசையோ யாரிடத்திலும் பொருந்தி நிற்காமல்;
ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும்... ஓரெழுத்து எனப்படும் பிரணவ மந்திரத்தை ஓயாமல் ஓதி; எப்போதும் (பிராணயாம முறைப்படி) சுவாசத்தை விட்டும்;
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர்... (பெறுவதான) நிலைத்த ஞானமற்ற (வெற்று) அறிவை உடைய, குரு என்ற ஸ்தானத்தை அடைந்த ஒருசிலர்,
தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ... கொடுக்கின்ற ஞானோபதேசமானது (நமக்குத் தேவையான) பற்றுக்கோடாக ஆகுமா?
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே... நெற்றியில், ஒளிபொருந்திய புருவமத்தியில் தியானிப்பதால் பெரிய ஞான சித்தியை அடையலாம் என்றால், அவ்வாறு அளிக்கின்ற எதையும் நான் பார்க்கவில்லையே!
குரு நாடு இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடிமாள மாய விட்டு... குருநாட்டை ஆண்டவர்களான துரியோதன் முதலியோருடை கூட்டத்தை முழுவதுமாக அழியும்படி மாயங்கள் பலவற்றைச் செய்தவனும்;
குந்தி பாலர் குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட... குந்தியின் மக்களான பாண்டவர்கள் (ஐவரும்) அழிந்துவிடாமல் காத்து; நீதிமுறை தவறாமல் ஏழுலகங்களையும் ஆளும்படிச் செய்தவனும்;
குறளாக(ன்) ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி மருகா... குட்டையான உடலைக் கொண்ட வாமனனாக வந்து, குறைவற்ற விக்கிரமனாக நெடிது வளர்ந்த ஆதிமூர்த்தியான திருமாலுடைய மருகனே!
புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா... முப்புரங்களை எரித்தவனும் திருவிளையாடல்களாகிய சித்துக்களைப் புரிந்தவனுமான சிவபிரானுடைய மகனே! ஓவியம் போல அழகான விராலி மலைமேல் உலாவுகின்ற சித்தனே! அழகிய திருக்கரத்தில் வேலை ஏந்தியவனே!
மதுராபுரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு... மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதருடைய மெய்ம்மையை வெளிப்படுத்தி; அரசாண்ட பாண்டிய மன்னனுடைய வெப்பு நோயைத் தீர்த்து;
வளை கூனையே நிமிர்த்த தம்பிரானே.... வளைந்திருந்த அவனுடை முதுகின் கூனலை நிமிர்த்திய தம்பிரானே!
சுருக்க உரை
குருநாட்டை ஆண்டவர்களான துரியோதனாதியரை அழிப்பதற்காக பல மாயங்களைச் செய்தவனும்; வாமனனாக வந்து விக்கிரமனாக வளர்ந் ஆதி மூர்த்தியுமா திருமாலுடைய மருகனே! முப்புரங்களை எரித்தவனும்; திருவிளையாடல்களைப் புரிந்தவனுமான சிவபெருமானுடைய மகனே! அழகான விராலி மலையில் உலாவுகின்ற சித்தனே! அழகிய திருக்கரத்தில் வேலை ஏந்தியவனே! மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதருடைய மெய்ம்மையை வெளிப்படுத்தியும்; அரசாண்ட பாண்டியனுடைய வெப்பு நோயைத் தீர்த்தும்; அவனுடைய முதுகின் கூனலை நிமிர்த்தியும் அருளிய தம்பிரானே!
உருவேற்றும் மந்திரம் எண்ணிக்கையில் கூடும்படியாக செபித்தும்; ஒப்பில்லாத பலகோடி வேள்விகளைச் செய்தும் கிடைக்கும் பேறுகள் கைகூடி வருவதாலும்; சிவாகம விதிகளைக் கடைப்பிடித்து; யாரிடத்திலும் அறிதலையும் ஆசைவைத்தலையும் செய்யாமல்; ஓரெழுத்தாகிய பிரணவத்தை விடாமல் உச்சரித்தும்; பிராணாயாம முறைப்படி சுவாசத்தை விட்டும் அடைவதான நிலைத்த ஞானத்தைப் பெறாத ஒருசிலர் செய்கின்ற ஞானோபதேசமானது, நமக்குத் தேவையான பற்றுக்கோடாக விளங்குமோ? நெற்றியில், புருவமத்தியில் தியானிப்பது பெரிய ஞானசித்தியைத் தருமென்றால், அப்படி ஒன்றையும் நான் பார்க்கவில்லையே! (ஆகவே, இவை பயனற்றவை என்பதால் எனக்கான ஞானோபதேசத்தை நீயே செய்வித்து அருளவேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

