பதச் சேதம் | சொற் பொருள் |
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு(ம்) நிலவாலே
| தருண(ம்): தக்க தருணத்தில்; மணி: ஒளி; வான்நிலத்தில்: ஆகாயத்தில்; அருணமணி: சிவந்த மணி, மாணிக்கம்; ஆலவிட்ட: விஷத்தைக் கலந்துவிட்ட; அமளி: மெத்தை; |
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே
| தலைமை: தலைவன்; தவிரா: நீங்கா; தறுகண்: செருக்குள்ள; |
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே
| வருண மடமாதர்: பல வர்ணங்களைச் சேர்ந்த பெண்கள்; |
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு(ம்) சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும்
| மகுட(ம்): மயிலின் உச்சிக் கொண்டை; மணி: அழகிய; வாரும்: கடிவாளமும்; இசைக்கும்: கட்டியிருக்கும்; விகடம்: அழகு (இச்சொல்லின் பல பொருள்களில் ‘அழகு’ என்பதும் ஒன்று; சித்ர மயில்: அலங்காரமான மயில்; |
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா
| களபம்: சந்தனக் கலவை; கலவி: சேர்ந்திருத்தல்; மறத்தி: மறப்பெண், குறப்பெண்; |
கடு உடைய அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா
| கடு: நஞ்சு; அரா: அரவு, பாம்பு; நிரைத்த: வரிசையாகக் கொண்ட; சடில(ம்): சடாமுடி; கடிய மலர்: நறுமணம் கமழும் மலர் (மலரை); ஆதரித்த: விரும்புகிற; |
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணை நகர் கோபுரத்தில் உறைவோனே
| அருணமணி: சிவந்த இரத்தினங்கள்; கிரணமணி: கிரணங்களை உடைய சூரியன் (மணி: சூரியன்—தின ‘மணி’ என்பது போல); |
அசுரர் குலம் வேர் அறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே.
| வடஅனல்: வடவமுகாக்கினி; |
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல்... ஒளி நிறைந்த ஆகாயத்தில் இருந்தபடி, சரியான தருணத்தைப் பார்த்து செம்மணியின் நிறத்தைக் கொண்டாய், விஷம் கலந்த நெருப்பை;
அமளி மீது எறிக்கு(ம்) நிலவாலே... என்னுடைய மெத்தையின் மீது (தன் கிரணங்களால்) வீசுகின்ற நிலவாலும்;
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறு கண் மத வேள்... தலைவனைப் பிரியாமல் நிற்கின்ற என் மனத்தினுடைய நிலைமையை அறியாமல் என்னை எதிர்த்த கொடியவனான மன்மதன்,
தொடுத்த கணையாலே... என்மீது எய்த மலர்க் கணைகளாலும்;
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச... பல வர்ணங்களைச் சேர்ந்த பெண்கள் தெரிந்தே என்மீது பேசும் வசைச்சொல் மிகுவதாலும்;
முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே... உன்னோடு முழுமையாகக் கலந்திருக்கின்ற என்னுடைய ஆவிக்குச் சற்றும் அழிவேற்படாமல்;
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு(ம்) சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும்... உச்சிக் கொண்டையும்; கட்டப்பட்ட அழகிய கடிவாளமும்; ஒய்யார அழகு நடையுமாக உலவுகின்ற அலங்காரமான மயிலின்மேல் ஏறியமர்ந்து என்முன்னே எப்போதும் வரவேண்டும்.
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா... கண்களை விட்டு அகலாத கருணையும்; மார்பகத்தை விட்டு நீங்காத சந்தனக் கலவையையும்; உன்னைச் சேர்ந்திருப்பது மாறாத தன்மையையும் உடைய குறப்பெண்ணான வள்ளி மணாளனே!
கடு உடைய அரா நிரைத்த சடில முடி மீது வைத்த... விஷத்தை உடையதான வரிசையான பாம்புகளை சடாமகுடத்தில் வைத்திருக்கின்ற
கடிய மலர் ஆதரித்த கழல் வீரா... நறுமணம் கமழும் மலர்களை விரும்புகின்ற கழல்களை உடைய வீரனே!
(சிவனார் தன்னுடைய முடியில் முருகனுடைய பாதங்களை வைத்துக் கொண்டதால், சிவனாருடைய திருமுடியிலுள்ள மலர்களின் மணம் முருகனுடைய பாதங்களில் கமழ்கிறது.)
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும்... சிவந்த மணிகளால் செய்யப்பட்டதைப் போல ஒளிவீசும் சூரியன் வலம் வருவதும்,
வெற்றி அருணை நகர் கோபுரத்தில் உறைவோனே... வெற்றி திகழ்வதுமான திருவண்ணாமலை ஆலயத்து கோபுரத்தில் வீற்றிருப்பவனே!
அசுரர் குலம் வேர் அறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே... அசுரர்களுடைய குலத்தை வேரோடு அறுத்துச் சாய்த்தும்; (யுகமுடிவில் தோன்றுவதான) வடவமுகாக்கினியை அவர்கள்மீது செலுத்தியும் தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!
சுருக்க உரை
கண்களை விட்டு அகலாத கருணையையும்; மார்பகத்தை விட்டு நீங்காத சந்தனக் கலவையையும்; உன்னோடு சேர்ந்திருப்பது மாறாத தன்மையையும் உடைய மறப்பெண், குறப்பெண்ணான வள்ளியின் மணவாளனே! விஷம் உடைய நாகங்களை வரிசையாக வைத்திருக்கும் இறைவனாரின் சடாமுடியில் உன் பாதம் பதிவதால், அவருடைய சடாமகுடத்திலுள்ள மலர்களின் மணம் உன் பாதங்களில் கமழும்படியாக விளங்குபவனே! சிவந்த மணிகளால் செய்யப்பட்டதைப் போல ஒளிவிடுகின்ற சூரியன் வலம் வருவதும் வெற்றி திகழ்வதுமான திருவண்ணாமலை ஆலய கோபுரத்தில் உறைபவனே! அசுரர் குலத்தை வேரறச் சாய்த்தும், யுகமுடிவில் எழும் வடவமுகாக்கினியை அவர்கள் மீது செலுத்தியும் தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!
வானவெளியில் நின்றபடி, சமயம்பார்த்து என்மீது—சிவந்த மாணிக்கம் போன்றதான—தீயை என்னுடைய மெத்தையின்மீது பொழிகின்ற நிலவாலும்; தலைவனை விட்டுப் பிரியமுடியாத என்னுடைய மனத்தின் நிலைமையை உணராமல் என்னை எதிர்க்கும் கொடியவனான மன்மதன் என்மீது பொழியும் மலர்க் கணைகளாலும்; சுற்றியிருக்கும் பலவகையான பெண்கள் அறிந்தே என்னைப் பழித்துப் பேசும் மிகுதியான வசைச் சொற்களாலும்
உன்மீது முழுமையாக ஈடுபட்டு அழுந்தியிருக்கின்ற என்னுடைய உயிர் சற்றும் தளர்வடைந்திடாதபடி,
உச்சிக் கொண்டையையும்; அழகிய கடிவாவளத்தையும் கொண்டதும்; ஒய்யார அழகு நடையுமாக உலவுகின்ற மயிலின் மீது ஏறி, என் முன்னர் எப்போது வந்தபடி இருக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

