மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 421

எனக்கு வந்திருக்கிற பெரிய வியாதியைக் கண்டு

Updated On :26 நவம்பர் 2016, 9:07 am

பதச் சேதம்

சொற் பொருள்

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின் தொடர்ந்து பிண நாறும்

 

மருண்டு: அஞ்சி; அருண்டு: அரண்டு, மனம் குழம்பி; கடிது: விரைவில் (எட்டிப்போ); வெகுண்டு: சினந்து; அமர: நெருங்க, அணுக;

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி

 

விண்டு: வெளிப்பட்டு; விண்டுபுழு: புழு வெளிப்பட்டு; அலம்பும்: அலைக்கழிக்கும், நிலைகுலைக்கும்; அவல உடலம்: துன்பமயமான உடல்;

மனை தொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர

 

மனைதொறும்: வீடு வீடாக(ப் போய்); இதம் பகர்ந்து: இதமானவற்றைப் பேசி; வரவர: நாளாக ஆக;

மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ

 

மறைசதுர்: நான்மறை; விதம்: வழி;

தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா

 

சுகம்: கிளி; சுகம்கடிந்த: கிளி ஓட்டிய; புனமயில்: மயில் போன்ற வள்ளி; குரும்பை: தென்னங் குரும்பை; புணர்ந்த: கலந்த, தழுவிய;

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம் பொன் மயில் வீரா

 

தும்பி: யானை; தும்பி முகவன்: யானை முகன்; திகிரி: வட்டமாக;

இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே

 

 

எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே.

 

எழுகடல்: ஏழு கடல்; எண் சிலம்பு: எட்டு மலைகள் (சிலம்பு: மலையென்றும் பொருள்); நிசிசரர்: இரவில் உலவுபவர், அரக்கர்; இமயவரை: தேவர்களை;

அனைவரு மருண்டு அருண்டு கடிதென வெகுண்டி யம்ப... (நோயுற்றிருப்பதால்) அனைவரும் அஞ்சிப் போயும் மனம் குழம்பியும், ‘உடனே எட்டிப்போ’ என்று கோபத்தோடு என்னைப் பார்த்துச் சொல்ல (சொன்ன பிறகும்);

அமரஅடி பின்தொடர்ந்து பிணநாறும் அழுகுபிணி கொண்டு... அவர்களை நெருங்கியும், அடியடியாகப் பின்தொடர்ந்தும்; பிணம்போல நாற்றம் எடுப்பதும், நோய் வந்ததால் அழுகிச் சொட்டுவதும்;

விண்டு புழுவுடன் எலும்பு அலம்பும் அவல உட லஞ்சுமந்து தடுமாறி... புழுக்கள் வெளிப்படுவதும்; எலும்புகளை நிலைகுலைப்பதுமான துன்பம் மிகுந்த உடலைச் சுமந்துகொண்டு, தடுமாறித் திரிந்தும்;

மனைதொறும் இதம்பகர்ந்து வரவர விருந்தருந்தி... ஒவ்வொரு வீடாகப் போய், அவர்களுக்கு இதமான வார்த்தைகளைச் செல்லி, ஒவ்வொரு இடமாக விருந்துண்டும்;

மனவழி திரிந்து மங்கும் வசைதீர...மனத்துக்குத் தோன்றிய படியெல்லாம் அலைந்தும் திரிந்தும் அழிந்து போவதால் ஏற்படுகின்ற பழி தீரும்படியாக,

மறைசதுர் விதந்தெரிந்து வகை. சிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று பெறுவேனோ.. நான்கு வகையான வேதங்களை அறிந்துகொண்டு, முறைப்படி சிறிய சதங்கைகள் ஒலிக்கின்ற உன்னுடைய திருவடி மலர்களை வணங்கும் பேற்றை என்றைக்குப் பெறுவேன்?

தினைமிசை சுகங் கடிந்த புனமயில் இளங்குரும்பை திகழ்இரு தனம்புணர்ந்த திருமார்பா... தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டிய மயில்போன்ற வள்ளியம்மையின் தென்னங் குருத்தைப் போன்ற இளம் மார்பகங்களைப் பொருந்ததத் தழுவிய திருமார்பனே!

ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு... முன்னர் யானைமுகத்தவனாகிய விநாயகனோடு போட்டி இட்டுக்கொண்டு; தந்தையாரான சிவபெருமானுடைய முன்னிலையில் உலகம் முழுவதையும்,

திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா... வட்டமிட்டு வலம்வந்த செம்பொன் மயில் வீரனே!

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ... குரங்குகள் இனிய கனிகளை உதிர்க்கும் மலைகளுக்கு உரிமையுடையவனே!

செந்தில் வந்த இறைவகுக கந்த என்றும் இளையோனே... செந்திலிலே வீற்றிருக்கும் இறைவா, குகா, கந்தா, என்றென்றும் இளமையானவனே!

எழுகடலும் எண்சிலம்பும் நிசிசரருமஞ்ச... ஏழு கடல்களும், எட்டு மலைகளும், அரக்கர்களும் அச்சம் கொள்ளும்படியும்;

அஞ்சும் இமையவரை யஞ்ச லென்ற பெருமாளே.... அச்சம் கொண்டிருந்தவர்களான தேவர்களுக்கு ‘அஞ்சேல்’ என்று அபயமளித்த பெருமாளே!

சுருக்க உரை

தினைப்புனங்களை வட்டமிட்டுக் கொண்டிருந்த கிளிகளை ஓட்டியவரான வள்ளியம்மையுடைய தென்னங் குரும்பை போன்ற இளம் மார்பகங்கள் பொருந்துமாறு தழுவிய திருமார்பனே!  யானைமுகனான அண்ணனோடு போட்டி போட்டுக்கொண்டு தந்தையாரான சிவபிரான் முன்னிலையில் உலகம் யாவற்றைம் வட்டமாக வலம்வந்த செம்பொன் மயில் வாகனனே!  குரங்குகள் இனிய பழங்களை உதிர்ப்பதான மலைகளுக்கு உரிமையுடையவனே!  திருச்செந்தூரில் வீற்றிருக்கும் இறைவனே, குகனே, கந்தனே, என்றும் இளையவனே!  ஏழு கடல்களும்; எட்டு மலைகளும்; அசுரர்களும் அச்சம் கொள்ளவும்; அச்சம் கொண்டிருந்தவர்களான தேவர்களுக்கு ‘அஞ்சேல்’ என்று அபயமும் அளித்த பெருமாளே! 

எனக்கு வந்திருக்கிற பெரிய வியாதியைக் கண்டு எல்லோரும் அச்சமடைந்து, ‘விலகிப் போ’ என்று கோபித்துத் துரத்தினாலும் அவர்களை விடாமல் அடியடியாகப் பின்பற்றிச் செல்வதும்; துர்நாற்றம் வீசுவதுமான இந்த உடலைச் சுமந்து நான் தடுமாற்றம் அடைந்தும்; பல வீடுகளைத் தேடிச் சென்றும்; அவர்களுக்கு இதமான வார்த்தைகளைப் பேசியும்; ஒவ்வொரு வீட்டிலும் விருந்தை உண்டும்; மனம்போன படியெல்லாம் தடுமாற்றமடைந்து திரிவதால் ஏற்படும் வசைச் சொல்லும் பழியும் நீங்கும்படியாக நான்கு வேதங்களை அறிந்து; உன்னுடைய மலர்ப் பாதங்களை வணங்குகின்ற பேற்றைப் பெறுவேனோ.  (அடியேனுக்கு அந்தப் பேறு கிட்ட வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.