பதச் சேதம் | சொற் பொருள் |
முந்து தமிழ் மாலை கோடி கோடி சந்தமொடு நீடு பாடி பாடி முஞ்சர் மனை வாசல் தேடி தேடி உழலாதே
| முந்து தமிழ்: மொழிகளுக்குள் முந்தையதாகிய தமிழ்; முஞ்சர்: இறப்பவர், அழிபவர்கள் (தடுத்து நிற்பது தெய்வதமேனும் |
முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக முந்து அடிமையேனை ஆளத்தானும் முனை மீதே
| முந்தைவினை: பழவினை; முந்தடிமை: அடிமைச் செயலில் முந்தியிருப்பதற்கான விருப்பம்; முனைமீது: முன்னிலையில்; |
திந்திதிமி.............தாளத்தோடு நடம் ஆடும்
|
|
செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர செம் பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே
| செஞ்சிறிய கால்: சிவந்த, சிறிய கால்; விசாலத் தோகை: அகன்ற தோகை; துங்க: தூய; |
அந்தண் மறை வேள்வி காவல் கார செம் தமிழ் சொல் பாவின் மாலைக்கார அண்டர் உபகார சேவல் கார முடி மேலே
| அந்தண் மறை: அழகியதும் குளிர்ச்சியானதும் (குளிர்ச்சியான அருள் பாலிப்பதும்) ஆன மறை; அண்டர் உபகார: தேவர்களுக்கு உதவிய; சேவல்கார: சேவற்கொடியை உடையவனே; |
அஞ்சலி செய்வோர்கள் நேயக் கார குன்று உருவ ஏவும் வேலைக் கார அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான
| வேலைக்கார: வேலை ஏந்திய கரத்தனே; அந்தம்: அழகு (முடிவு என்பது ஒரு பொருள்; அழகு, குருடு என்று பல பொருள் உண்டு. இங்கே அழகு); ரூபக்கார: வடிவுடைய; |
சிந்துர மின் மேவு(ம்) போகக் கார விந்தை குற மாது வேளைக் கார செம் சொல் அடியார்கள் வாரக் கார எதிரான
| சிந்துர மின்: யானை (தேவானை)-யாகிய மின்னற்கொடி; வேளைக்கார: காவற்காரனே; வாரக்கார: அன்பு கொண்டவனே; |
செம் சமரை மாயும் மாயக் கார துங்க ரண சூர சூறைக் கார செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார பெருமாளே.
| செஞ்சமர்: பெரிய போர்; துங்கரண: பெரும்போர்; சூர சூறைக்கார: சூரனுக்கு சூறைக்காற்றாக இருந்தவனே; ஆண்மைக்கார: பரிபாலிக்கும்; |
முந்து தமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி... மொழிகளில் முந்தியிருப்பதான தமிழிலே கோடிக்கணக்கான சந்தவகையிலே அமைந்த பாமாலைகளை நீண்டதாகப் பாடியபடி;
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே... இறந்து போகின்ற (அற்பர்களான) மனிதர்களுடைய வீட்டு வாசலைத் தேடித் தேடி அலையாதபடியும்;
முந்தை வினையே வராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக.... பழைய வினைகள் என்னருகிலே வராதபடியும்; பெண்களின்மேல் வைத்த ஆசை என்பது தூரத்தே விலகிப் போகும்படியும்;
முந்தடிமை யேனை ஆளத் தானு முனைமீதே... அடிமைச் செயலில் முந்தியிருக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்ட அடியேனை ஆளும் பொருட்டாக என் முன்னாலே,
திந்திதிமி தோதி தீதித் தீதி, தந்ததன தான தானத் தான, செஞ்செணகு சேகு .. தாளத் தோடு நடமாடும் ... என்ற தாளகதியில் நடனமாடுவதும்;
செஞ்சிறிய கால் விசாலத் தோகை .துங்க அநுகூல பார்வை.. ... சிவந்த, சிறிய கால்களைக் கொண்டதும்; அகலமாக விரித்த தோகையைக் கொண்டதும்; தூயதும், நன்மையைத் தருவதுமான பார்வையைக் கொண்டதும்;
தீர செம்பொன்மயில் மீதிலே எப்போது வருவாயே... தைரியத்தையும் சிவந்த பொன்னின் நிறத்தையும் கொண்டதுமான மயிலின்மீது அமர்ந்த கோலத்தில் என்று எழுந்தருளப் போகிறாய்?
அந்தண் மறை வேள்வி காவற்கார... அழகியதும் குளிர்ச்சியான அருளைத் தருவதுமான வேதவேள்விகளைக் காவல்புரிபவனே!
செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார... செந்தமிழ்ச் சொற்களால் அமைந்த பாடல்களை மாலையாக அணிபவனே!
அண்டர் உபகார சேவற்கார... தேவர்களுக்கு உதவியவனே! சேவற் கொடியோனே!
முடிமேலே அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார... தலைக்கு மேலே கைகளைக் கூப்பியபடி தொழுகின்றவர்களிடம் அன்பு பூண்டவனே!
குன்றுருவ ஏவும் வேலைக்கார... கிரெளஞ்ச பர்வதத்தை ஊடுருவிச் செல்லும்படியாக ஏவிய வேலைக் கரத்தில் ஏந்தியவனே!
அந்தம் வெகுவான ரூபக்கார... அழகுமிக்கதான திருவுருவத்தைக் கொண்டவனே!
எழிலான சிந்துரமின் மேவு போகக்கார... அழகு நிறைந்தவரான தேவானை விரும்புவதான இன்ப வடிவினனே!
விந்தை குறமாது வேளைக்கார... விந்தையான அழகுள்ள குறப்பெண்ணான வள்ளி (விரும்புகின்ற) காவற்காரனே!
செஞ்சொல் அடியார்கள் வாரக்கார... செம்மையான இனிய சொற்களைக்கொண்டு துதிக்கும் அடியார்களின்மேல் அன்புகொண்டவனே!
எதிரான செஞ்சமரை மாயு மாயக்கார... (பெரும்படைகள்) எதிர்த்து வந்துள்ள கடும்போரில் (பகைவர்களை) மாய்க்கின்ற மாயக்காரனே!
துங்கரண சூர சூறைக்கார... பெரிய போரில் சூரபத்மனை, சூறாவளியைப் போல அடித்துச் சிதறடித்தவனே!
செந்தினகர் வாழும் . ஆண்மைக்கார பெருமாளே.. திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே! பரிபாலனம் செய்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
அழகியதும் அருள்பாலிப்பதுமான வேத வேள்விகளுக்குக் காவலாக விளங்குபவனே! செந்தமிழ்ச் சொற்களால் தொடுக்கப்பட்ட பாமாலைகளை அணிபவனே! சிரத்தின்மேலே கரத்தைக் கூப்பி வணங்கும் அடியார்களிடம் அன்புபூண்டவனே! கிரெளஞ்ச மலையைத் தூளடிக்கும்படியாக வீசிய வேலை ஏந்திய கரத்தவனே! அழகு பொலிகின்ற திருவுருவத்தை உடையவனே! அழகிய தேவசேனையம்மை விரும்புகின்ற போகம் வாய்ந்தவனே! வள்ளிக் குறமாது விருப்பப்படுகின்ற காவற்காரனே! செம்மையான சொற்களால் போற்றும் அடியார்களின்மீது அன்பு பூண்டவனே! பெரும்போரில், எதிர்த்துவரும் பகைவர்களை மாய்க்கின்ற மாயக்காரனே! கடும்போரில் சூரபத்மனை, சூறாவளியைப்போல வீசிச் சிதறடித்தவனே! திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே! பரிபாலிக்கும் பெருமாளே!
மொழிகளுக்குள்ளே முந்தியதாகிய தமிழில் கோடானுகோடி சந்தப் பாக்களைப் பாடிக்கொண்டும்; வீணில் இறப்பவர்களான அற்ப மானுடர்களுடைய வீட்டு வாசலைத் தேடியலைந்துகொண்டும் அடியேன் திரியாமலும்; என்னுடைய பழைய வினை இனிமேலும் என்னைத் தொடராமலும்; பெண்ணாசை என்னைவிட்டுத் தூர ஓடிப்போகவும்; அடிமைச் செயலில் முந்தி நிற்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்ட அடியேனை ஆண்டருள்வதற்காக என் முன்னாலே,
திந்திதிமித் தோதிதீதித் தீதி என்று பலவிதமான தாளகதிகளில் நடனமாடுவதும்; சிவந்ததும் சிறியதுமான கால்களைக் கொண்டதும்; அகன்ற தோகையை உடையதும்; தூய்மையானதும்; நன்மைபுரியும் பார்வையை உடையதும்; தீரத்தை உடையதும்; செம்பொன்னின் நிறத்தை உடையதுமான மயிலின் மீது ஏறிய கோலத்தில் எப்போது எழுந்தருள்வாய்? (எழுந்தருள வேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

