/

பகுதி - 369

மேகத்தின் மீதும் தங்கியிருந்து

Updated On :4 அக்டோபர் 2016, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும்

 

புகர: புள்ளி(கள்); புங்க: உயர்ந்த; பகர: அழகான; புயல்: மேகம்); பொலிவோன்: (மேகத்திலும் ஐராவதத்திலும் பொலியும்) இந்திரன்;

பொரு இல் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும்

 

பொருஇல்: இணையில்லாத; சுருதிச் சங்கம்: வேதத் தொகுதிகள்; புகர்வோன்: சொல்வோன் (பிரமன்);

திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும்

 

திகிரி: மலை; செங்கண்செவி: சிறந்ததான கட்செவி (கண்ணைச் செவியாகக் கொண்ட பாம்பு); அத் திகிரி: அந்தச் சக்கரம்;

திரிய பொங்கி திரை அற்று உண்டு உள் தெளிதற்கு ஒன்றை தர வேணும்

 

திரிய: சுழல; பொங்கி: மகிழ்ச்சியால் பொங்கி; திரையற்று: அலைதல் அற்று; உண்டு: உட்கொண்டு; உள்தெளிதல்: அகத்தில் தெளிவு பிறத்தல்;

தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே

 

தகர: இருதயத்தின் உள்ளிடம்; தகரத் தந்த சிகரம்: தகரவித்தை எனப்படும் வேதசிரோ முடியாகிய பிரம்மஸ்தானம்; தட நல் கஞ்சம்: இருதயமாகிய தாமரை; 

தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே

 

தருண: இளம்; குறவி: குறத்தியாகிய வள்ளி;

பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா

 

பகர: ஒளிகொண்ட; சிகரக் குன்றை: கிரெளஞ்ச மலையை; படியில்: பூமியில், தரையில்;

பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே.

 

துங்க: தூய; புரிசை: மதில்;

புகரப் புங்கப் பகரக் குன்றில் ... புள்ளிகளைக் கொண்ட; தூய்மையான; அழகிய; மலையை ஒத்த ஐராவதத்தின் மீதும்;

புயலிற் றங்கிப் பொலிவோனும் ... மேகத்தின் மீதும் தங்கியிருந்து பொலிகின்றவனான இந்திரனும்;

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளை பண்பிற் புகல்வோனும்... நிகரற்றதும்; எல்லாக் கலைகளுக்கும் தஞ்சமளிக்கின்றதுமான வேதங்களின் தொகுதிகளுக்கான பொருளை முறையாக எடுத்துச் சொல்பவனான பிரமனும்;

திகிரிச் செங்கட் செவியில் துஞ்ச ... மலைபோன்ற; செம்மையான கட்செவியான ஆதிசேடனின்மேல் துயில்கின்ற,

அத்திகிரிச் செங்கைத் திருமாலும் ... தன் சிவந்த கையில் சக்கரத்தை ஏந்திய திருமாலும்;

திரியப் ... (இத்தகைய உபதேசம் நமக்குக் கிடைக்கவில்லையே என அங்குமிங்கும்) திரிந்திடவும்;

பொங்கித் திரையற்று உண்டு ... மகிழ்ச்சி பொங்கி; உள்ளத்தில் (எண்ண) அலைகள் ஒழிந்து; இந்த அனுபவத்தை உட்கொண்டு,

உள்தெளிதற்கு ஒன்றைத் தரவேணும் ... என் மனம் தெளிவதற்கான ஒன்றை எனக்கு உபதேசித்தருள வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி ... தகராகாசம் எனப்படும் இருதய வெளியில் இருந்து; வேதசிரோமுடியாகிய உச்சியிலே பொருந்தி;

டநற் கஞ்சத் துறைவோனே ... நல்ல இதயக் கமலம் என்னும் இடத்தில் உறைபவனே!

தருணக் கொங்கைக் குறவிக்கு இன்பத்தையளித்து அன்புற்று அருள்வோனே... இளமையான மார்பகத்தைக் கொண்ட குறத்தியான வள்ளியம்மைக்குப் பேரின்பத்தைத் தந்து அவர்மீது அன்புற்று அருள்பவனே!

பகரப் பைம்பொற் சிகரக் குன்றை ... ஒளிகொண்ட பசும்பொன் சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையானது,

படியிற் சிந்தத் தொடும்வேலா ... தரையில் விழுந்து சிதறுமாறு எறிந்ததாகிய வேலை ஏந்துபவனே!

பவளத் துங்கப் புரிசை செந்திற்பதியிற் கந்தப் பெருமாளே.... பவளம் போன்று சிவந்ததும் தூய்மையானதுமான மதில்களால் சூழப்பட்ட திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் கந்தப் பெருமாளே!

சுருக்க உரை

தகரவித்தை எனப்படும் வேதத்தின் உச்சியாகிய பிரம்ம ஸ்தானத்திலே பொருந்தி, நல்ல இதயம் என்னும் தாமரையாகிய இடத்தில் உறைபவனே!  இளம்கொங்கைகளை உடைய வள்ளியம்மைக்குப் பேரின்பத்தைத் தந்து அவர்பால் அன்புகாட்டி அருள்பவனே!  ஒளிகொண்ட சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலை பொடியாகச் சிதறித் தரையில் விழுமாறு வீசிய வேலை ஏந்துபவனே!  பவளம்போலச் சிவந்ததும் தூயதுமான மதிலால் சூழப்பட்ட திருச்செந்தூரில் உறையும் கந்தப் பெருமாளே!

புள்ளிகளைக் கொண்டதும்; உயர்ந்ததும்; அழகானதுமான வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மீதும், மேகங்களின் மீதும் விளங்கும் இந்திரனும்; வேதத் தொகுதிகளின் பொருளை முறைபடச் சொல்லும் பிரமனும்; மலைபோன்ற வடிவத்தை உடைய பாம்பான ஆதிசேடன் மீது துயில்பவனும் சக்கரத்தை ஏந்தியவனுமான திருமாலும் (இத்தகைய) உபதேசப் பொருளைப் பெறாமல் சுழன்று திரிய; என் உள்ளம் தெளிவு பெறுமாறு ஒப்பற்ற தனிப்பொருளான உபதேசமொழியை அடியேனுக்கு மொழிந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.