பதச் சேதம் | சொற் பொருள் |
ஒரு வழி படாது மாயை இரு வினை விடாது நாளு(ம்) உழலும் அநுராக மோக அநுபோகம்
| ஒருவழி படாது: ஒருவழியிலே மனத்தை நிறுத்த முடியாமல்; இருவினை: நல்வினை, தீவினை; அனுராகம்: ஆசை, காமத்திலே பற்று; அனுபோகம்: அனுபவித்து, பழகி; |
உடலும் உயிர் தானுமாய் உணர்வில் ஒரு கால் இராத உளமும் நெகிழ்வு ஆகுமாறு அடியேனுக்கு
| ஒருகாலிராத: ஒருபோதும் இல்லாத; |
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப
| இரவுபகல் போன: இரவு பகலைக் கடந்த; |
எம படரை மோது(ம்) மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே
| மோன உரை: மௌன மொழி; |
அரிவை ஒரு பாகமான அருணகிரி நாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன்
| அரிவை: பெண்; அருணகிரி நாதர்: அண்ணாமலை, அருணாசலேஸ்வரர்; அடைவு: நியமம், முறைமை; |
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும்
|
|
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர(ம்) சல ராசி வேக முனிவோனே
| முகர(ம்): சங்குப் பூச்சி; சலராசி: நீரில் வாழும் அனைத்து இனங்களும்; வேக: வெந்து போக; |
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே.
|
|
ஒருவழிபடாது மாயை யிருவினை விடாது நாளும் உழலும்... (மனம்) ஒருவழியில் நிலைகொள்ள முடியாமல் என்னை நாள்தோறும் உழலச் செய்யும் மாயையும், என்னுடைய இருவினைகளும்;
அநுராக மோக அநுபோகம் ... ஆசையின் வாய்ப்பட்டு மோகம்கொண்டு அனுபவித்து,
உடலுமுயிர் தானுமாய் ... என் உடலும் என் உயிரும் மட்டுமே எண்ணத்திலே நிறைத்து,
என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு,
உன் உணர்விலொரு காலி ராத . உளமுநெகிழ்வாகு மாறு.. உன்னைப் பற்றிய உணர்வோ எண்ணமோ ஒருபோதும் இல்லாததாகிய இந்த உள்ளம்கூட நெகிழ்ந்து உருகுமாறு,
அடியேனுக்கு இரவுபகல் போன ஞான பரமசிவ யோக ... அடியேனுக்கு, ‘இரவையும் பகலையும் கடந்ததான ஞான பரமசிவ யோகமே (யோகம் ஒன்றே)
தீரமெனமொழியும் ... தைரியத்தைத் தருவது’ என்று எடுத்துச் சொல்வதும்;
வீசு பாச கனகோப எமபடரை மோது... பாசக்கயிற்றை வீசுபவர்களும் மிகுந்த கோபமுடையவர்களுமான எமதூதர்களைச் சாடுவதும்;
மோன வுரையில் உப தேச வாளை எனதுபகை தீர நீயும் அருள்வாயே.. மௌன மொழியால் அருளப்பட்டு, என்னுடைய அக, புறப் பகைகளை அழிப்பதான ஞானோபதேசமாகிய வாளைத் தந்தருள வேண்டும்.
அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை ... மாதொரு பாகனான அருணாசலேஸ்வரனுடைய பூசையை,
அடைவு தவறாது பேணும் அறிவாளன் ... நியமம் தவறாமல் செய்து வருகின்ற அறிஞனும்;
அமணர்குல காலனாகும் அரியதவ ராஜராஜன்... சமணர் குலத்துக்கு யமனாகத் தோன்றியவனும்; அரிய தவங்களைச் செய்த தவராஜனும்;
அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக ... உலகமே புகழ்கின்றவனுமான சோமநாத(னுடைய) மடத்தில் வீற்றிருக்கும் முருகா!
பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ... போருக்கு வந்த சூரனுடைய சேலை அழியவும்; வடமேரு மலையானது பொடிப்பொடியாக வீழவும்;
முகரசல ராசி வேக முனிவோனே ... சங்குகளும் மற்ற நீர்வாழ் இனங்களும் வெந்துபோகும்படி(க் கடலைக்) கோபித்தவனே!
மொழியுமடியார்கள் கோடி குறைகருதினாலும் ... துதிக்கின்ற அடியார்கள் பல குறைகளோடு உன்னிடத்து வந்தாலும் (உன்னையே குறைகண்டாலும்)
வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே. ... அவர்களை வேறாகக் கருதிக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர்கள் பெருமாளே!
சுருக்க உரை
உமையொரு பாகனாக விளங்கும் அருணாசலேஸ்வரரின் பூஜையை முறைப்படிச் செய்பவரும்; சமணர் குலத்து யமனும்; அரிய தவராஜனுமான சோமநாதனுடைய மடத்தில் எழுந்தருளியிருக்கின்ற முருகா! போரிட்ட சூரனுடைய சேனை அழியவும்; வடமேரு நிலைகுலையவும்; சங்குகளும் நீர்வாழ் இனங்களும் வெந்து போகுமாறு கடல் கொந்தளிக்கும்படிக் கோபித்தவனே! உன்னைத் துதிக்கும் அடியார்கள் எத்தனையோ குறைகளோடு உன்னிடத்து வந்து (உன்னையே குறை சொன்னாலும்) அவர்களைக் கோபித்தல் என்பதை அறியவே அறியாதவனே! தேவர் தலைவனே!
என் மனமானது ஒருவழியில் நிலைநிற்கவிடாமல் அலைக்கின்ற மாயையும் என் இருவினைப் பயன்களும்; ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு மோகத்தைத் துய்ப்பதில் இறங்கி, என் உடலையும் உயிரையும் மட்டுமே சிந்தையில் கொண்டு, உன்னைப் பற்றிய உணர்வே ஒருபோதும் இல்லாமல் கிடப்பதான என்னுடைய உள்ளம்கூட நெகிழ்ந்து உருகும்படியாகவும்; இரவு-பகல் என்ற பேதங்களைக் கடந்ததான ஞான பரமசிவ யோகமே துணிவைத் தருவது என்று சொல்வதும்; பாசக்கயிற்றை வீசுபவர்களும், மிகுந்த கோபமுடையவர்களுமான யமதூதர்களைச் சாடி விரட்டுவதும்; மௌன மொழியால் ஆனதுமான ஞானோபதேசம் என்னும் வாளை அடியேனுடைய அக, புறப் பகைகள் ஒழிந்துபோகுமாறு தந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

