மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 543

உய்யும் வழி அறியாத என்னை

Updated On :25 ஏப்ரல் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை

 

பகிராரை: பகிர்ந்து கொள்ளாதவர்களை;

எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக

 

எவ்வம்: துன்பம், (துன்பத்தைப் போல வெறுக்கத்தக்கவர்கள்); எவ்வகையும்: எந்த வகையிலும்;

சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை

 

தொல்லை: பழைமையான; முதல்: முதல்வன்;

தொய்யும் உடல் பேணு(ம்) பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ

 

தொய்யும் உடல்: துவள்கின்ற உடல்; துய்ய: தூய்மையான;

வல்ல அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது(ம்)

 

சுரர்: தேவர்கள்; மைய: கரிய; வரை: மலை, கிரெளஞ்சம்; பாகம்பட: பிளவுபட;

மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே

 

மை உலவு சோலை: (நிழலாலே) இருள் சூழ்ந்திருக்கும் சோலைகள்; வள்ளிமலை வாழும் கொடி: வள்ளி;

வெல்லும் மயில் ஏறு வல்ல குமரேச வெள்ளில் உடன் நீபம் புனைவோனே

 

வெள்ளில்: விளா மரத்துத் தளிர்; வெள்ளிலுடன்: விளாத் தளிருடன்; நீபம்: கடப்ப மலர்;

வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளி நகர் மேவும் பெருமாளே.

 

மல்கு: நிறைந்த;

இல்லையென நாணி உள்ளதின் மறாமல் எள்ளினள வேனும் பகிராரை... (கேட்ட பொருளை) இல்லை என்று சொல்வதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு; கையில் இருப்பதை மறுக்காமல் எள் அளவுக்காவது பகிர்ந்து தராதவர்களை,

எவ்வமென நாடி உய்வகையி லேனை எவ்வகையு நாமங் கவியாக... (வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் போல) வெறுக்கக் கூடியவர்கள் என்று தெளிந்துகொண்டு; உய்யும் வழியை அறியாத என்னை; உன்னுடைய திருநாமங்களைத் தொகுத்துக் கவியாக எந்த வகையிலும்,

சொல்லவறி யேனை எல்லைதெரியாத தொல்லைமுதல் ஏதென்றுணரேனை... அமைத்துப் பாடத் தெரியாத என்னை; அந்தம் என்று ஒன்றில்லாத ஆதி முதல்வன் இவனே என்று உணர்கின்ற அறிவில்லாத என்னை;

தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது துய்யகழலாளுந் திறமேதோ... துவண்டு போகக்கூடிய இந்த உடலைப் போற்றி வாழ்கின்ற பொய்யனான என்னை; ஏற்றுக்கொள்ள மறுக்காமல் (ஏற்றுக்கொண்டு) உன் தூய திருவடிகளாலே ஆட்கொள்ளப்படும் வழி ஏதேனும் உண்டோ என்பதறியேன் (அடியேனை ஆட்கொள்ள வேண்டும்). 

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ மையவரை பாகம்பட மோது... வலிய அசுரர்கள் இறக்கும்படியாகவும்; நல்ல தேவர்கள் வாழும்படியாகவும்; கரிய மலையான கிரெளஞ்சம் பிளவுபடுமாறு மோதியழித்தவனே! 

மையுலவு சோலை செய்யகுளிர் சாரல் வள்ளிமலை வாழுங் கொடிகோவே... (அடர்ந்த நிழல் விழுவதால்) இருண்டிருக்கின்ற சோலைகளும்; செம்மையானதும் குளிர்ந்ததுமான மலைகளும் இருக்கின்ற வள்ளிமலையில் வாழ்ந்த குறக்குலத்துக் கொடியான வள்ளியின் நாயகனே!

வெல்லுமயி லேறு வல்லகுமரேச வெள்ளிலுட னீபம் புனைவோனே... வெற்றி நிறைந்ததான மயிலை வாகனமாக ஏறிவர வல்ல குமரேசனே!  விளாமரத்துத் தளிரோடு கடப்ப மலரையும் சூடுபவனே!

வெள்ளிமணி மாட மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே... வெண்மையான அழகிய மாடங்கள் நிறைந்த திருவீதிகளைக் கொண்ட வெள்ளிகரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வலியவர்களான அசுரர்கள் மாளும்படியும்; நல்லவர்களான தேவர்கள் வாழும்படியும் புரிந்து; கரிய மலையான கிரெளஞ்சம் பிளவுபடும்படியாக மோதியவனே!  நிழல் நிறைந்த சோலைகளையும்; செவ்விய, குளிர்ந்த மலைகளையும் உடையதான வள்ளிமலையில் வாழ்ந்த குறக்கொடியான வள்ளியம்மையின் நாயகனே!  வெற்றி நிறைந்த மயிலை வாகனமாகக்கொண்டு ஏறிவருகின்ற குமரேசனே!  விளாமரத்துத் தளிரையும் கடப்ப மலரையும் சூடுபவனே!  வெண்மையான அழகிய மாடங்கள் நிறைந்த திருவீதிகளைக் கொண்ட வெள்ளிகரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

தன்னிடம் கேட்கப்பட்டதை ‘இல்லை’ என்று சொல்வதற்கு வெட்கப்பட்டு, தன்னிடத்தில் உள்ளதை எள்ளின் அளவுக்காவது பகிர்ந்து தராதவர்கள் வாழ்விலே ஏற்படும் துன்பங்களைப் போல வெறுக்கத் தக்கவர்கள் என்பதை அறியாத என்னை; உய்யும் வழி அறியாத என்னை; உன்னுடைய திருநாமங்களை எந்த வகையிலும் கவியாக அமைத்துப் பாடத் தெரியாத என்னை; தொடக்கம் என்பதோ முடிவு என்பதோ இல்லாத மூல முதற்பொருள் எது என்பதை உணராதவனான என்னை; துவண்டு போவதான இந்த உடலைப் போற்றுகின்ற பொய்யனான என்னைப் புறக்கணித்துவிடாமல்; தூயதான உன்னுடைய திருவடிகளாலே ஆட்கொள்ளப்படுவதற்கான வழி இன்னது என்பதை அறியாதவனாக இருக்கிறேன்.  (இப்படிப்பட்ட என்னைப் புறக்கணிக்காமல் தடுத்தாண்டுகொள்ள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.